ETV Bharat / sports

இந்த வீரனுக்காகதான் உலகமே ஏங்குகிறது! HBD AB De Villiers

author img

By

Published : Feb 17, 2020, 10:18 PM IST

Updated : Feb 18, 2020, 12:42 AM IST

ஒரு முழுமையான கிரிக்கெட் வீரரை குறிப்பிட வேண்டுமென்றால் நான் டி வில்லியர்ஸைதான் கூறுவேன். மற்ற வீரர்கள் திறமையானவர்கள்தான். ஆனால், டி வில்லியர்ஸ் அவர்களிடமிருந்து சற்று மாறுபட்டவர். எப்படி பந்துவீசினாலும் அவரால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் ஆட முடியும் - சச்சின் டெண்டுல்கர்

Superman of Cricket AB De Villiers celebrated his 35th bday today
Superman of Cricket AB De Villiers celebrated his 35th bday today

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்களுக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மீது ஏதோ ஒருவிதமான அக்கறை இருக்கும். குறிப்பாக, உலகக் கோப்பை தொடரின்போது இந்த அக்கறை கொஞ்சம் அதிகரிக்கும். இந்த வீரருக்காகவாது தென் ஆப்பிரிக்க அணி இம்முறை உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரின்போதும் எழும். அதற்கு ஏற்றார்போல் தென் ஆப்பிரிக்க அணியும் பெரும்பாலான உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினாலும் அரையிறுதிக்கு மேல் அவர்களால் தாண்ட முடியாது.

சிறந்த அணியாக திகழ்ந்துவந்த தென் ஆப்பரிக்க அணியின் தற்போதைய நிலைமை மிகவும் மோசமான நிலையிலே இருப்பது, பல ரசிகர்களுக்கும் வேதனையாகவே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் டி வில்லியர்ஸின் ஓய்வுதான். மிஸ்டர் 360, கிரிக்கெட்டின் சூப்பர் மேன் என ரசிகர்களால் கொண்டாடப்படும் ஏ.பி. டி வில்லியர்ஸ் இன்று தனது 36ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

AB De Villiers
டி வில்லியர்ஸ்

டி வில்லியர்ஸ் குறித்து சச்சின் கூறிய வார்த்தைகள் இவை: "ஒரு முழுமையான கிரிக்கெட் வீரரை குறிப்பிட வேண்டுமென்றால் நான் டி வில்லியர்ஸைதான் கூறுவேன். மற்ற வீரர்கள் திறமையானவர்கள்தான். ஆனால், டி வில்லியர்ஸ் அவர்களிடமிருந்து சற்று மாறுபட்டவர். எப்படி பந்துவீசினாலும் அவரால் அனைத்து விதமான ஷாட்டுகளையும் ஆட முடியும்"

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு சிறந்த வீரர்கள் கிடைத்தார்கள், இனியும் கிடைப்பார்கள். ஆனால், டி வில்லியர்ஸ் போன்ற ஒரு சிறந்த பேட்ஸ்மேன், ஆளுமை கிடைப்பதெல்லாம் அபூர்வம். அவரது வெற்றிடத்தை நிரப்ப முடியாமல் தென் ஆப்பிரிக்க அணி திணறுகிறது. அவரது ஓய்வு தென் ஆப்பிரிக்க அணிக்கு மனரீதியாக ஏற்படுத்திய அழுத்தத்தால்தான் அந்த அணி சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது என்பதற்கு கடந்த உலகக் கோப்பையே உதாரணம்.

AB De Villiers
டி வில்லியர்ஸ்

கிரேம் ஸ்மித்தின் ஓய்விற்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணியை சிறப்பாக வழிநடத்தியவர் டி வில்லியர்ஸ். சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த சிலர், கேப்டன்ஷிப் பொறுப்பு வந்தவுடன் கேப்டன்ஷிப்பிலும் பேட்டிங்கிலும் சொதப்புவார்கள். ஆனால், ஒரு சிலர் கேப்டன்ஷிப் பொறுப்பு வந்தவுடன் பேட்டிங்கில் மேலும் தங்களை மெருகேற்றிக்கொண்டு அணியை சிறப்பாக வழிநடத்துவார்கள். அதில், டி வில்லிரய்ஸ் இரண்டாம் ரகம். கேப்டனான பிறகுதான் அவரது பேட்டிங் சராசரி உயர்ந்தது.

பொதுவாக, டி20, ஒருநாள் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளிலும் அதிரடியாகவே விளையாடுவதுதான் வழக்கம். சேவாக், கில்கிறிஸ்ட், கிறிஸ் கெயில், வார்னர் போன்ற அதிரடி வீரர்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம். டி வில்லியர்ஸும் அதிரடி வீரர்தான், அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அவர் மேற்கூறிய வீரர்களிடமிருந்து சற்று மாறுபட்டவர்.

AB De Villiers
டி வில்லியர்ஸ்

அணியின் தேவைக்காக தன்னை மாற்றிக்கொள்ளும் திறமையுடைய டி வில்லியர்ஸ், அணிக்கு தேவையென்றால் ஒருநாள் போட்டிகளில் 31 பந்துகளில் சதம் விளாசி அணியை வெற்றிபெறச் செய்வார். அதேசமயம், டெஸ்ட் போட்டிகளில் அதிரடி காட்டாமல் 297 பந்துகளில் 43 ரன்கள் அடித்து ஆட்டத்தை டிரா செய்யவும் முயற்சிப்பார். இதுதான் டி வில்லியர்ஸின் ஸ்பெஷாலிட்டி.

2004-இல் அறிமுகமான இவர், 2007-இல் இருந்து சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்பட்டாலும், அவர் உச்சத்திலிருந்தது 2015இல்தான். தனது சிறப்பான பேட்டிங்கால் அந்த வருடத்தை தனதாக்கிக் கொண்டார். குறிப்பாக, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்த உலகக் கோப்பையில் அவர் தனது சிறப்பான பேட்டிங் மூலம் அணியை வழிநடத்தி அரையிறுதி வரை கொண்டுச் சென்றார்.

AB De Villiers
டி வில்லியர்ஸ்

நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் பதற்றத்தின் காரணத்தாலேயே தென் ஆப்பிரிக்க அணி தோல்வியடைந்தது. இம்முறையும் நம்மால் இறுதி போட்டிக்கு முன்னேற முடியவில்லை என்ற சோகம், டி வில்லியர்ஸ், மோர்னே மோர்கல், டூ ப்ளஸிஸ், ஸ்டெயின் ஆகியோரது கண்ணீரில் தெரிந்தது.

அணியின் தேவைக்காக தன்னை மாற்றிக்கொண்ட டி வில்லியர்ஸை சொந்த ரசிகர்களே விமர்சிக்கத் தொடங்கினர். அவர் அணிக்காக விளையாடாமல் சுயநலமாக விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததாலே, தான் ஓய்வுபெறுவதாக அவர் கடந்த ஆண்டு தெரிவித்தார். இருப்பினும் உலகக் கோப்பை ஒருநாள் தொடர் நெருங்கும்போது தான் மீண்டும் அணிக்காக விளையாட வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவரது கோரிக்கையை அணி நிர்வாகம் நிராகரித்தது.

AB De Villiers
டி வில்லியர்ஸ்

தென் ஆப்பிரிக்க ஜாம்பவான்களான ஜாக் காலிஸை பேட்டிங் ஆலோசகராகவும், மார்க் பவுச்சரை பயிற்சியாளராகவும் நியமித்து, சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணியை மீட்டெக்கும் முயற்சியில் அந்த அணி வாரியம் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. டி வில்லியர்ஸின் ஓய்வுக்கு பிறகு அணியை சரிவர வழிநடத்த முடியாத டூ ப்ளஸிஸ் அனைத்து விதமான போட்டிகளின் கேப்டன்ஷிப்பிலிருந்து விலகினார்.

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் டி வில்லியர்ஸ் மீண்டும் கம்பேக் தருவார் என்ற பேச்சுகள் அடிபடுகிறது. இந்த சூழலில் தென் ஆப்பிரிக்க அணியில் அவருக்கான கதவுகள் என்றும் திறந்திருக்கும் என்று மார்க் பவுச்சர் கூறியுள்ளார்.

AB De Villiers
டி வில்லியர்ஸ்

ஒரு கேப்டனாக 2015இல் கோப்பையை நழுவவிட்ட டி வில்லியர்ஸ், இம்முறை வீரராக மீண்டும் களமிறங்கி அணிக்காக டி20 உலகக் கோப்பையை பெற்றுத்தர வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பு. உலகமே ரசிக்கும் வீரரான டி வில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்குவாரா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். பிறந்தநாள் வாழ்த்துகள் டி வில்லியர்ஸ்..!

இதையும் படிங்க: அவர் நினைக்கும் வரை ஆடட்டும்... இது நன்றிக்கான நேரமல்ல!

Last Updated :Feb 18, 2020, 12:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.