ETV Bharat / sports

'கடின உழைப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறேன்' - கருண் நாயர்

author img

By

Published : Mar 6, 2021, 5:49 PM IST

பலனை எதிர்பாராமல் கடின உழைப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் ஈடிவி பாரத்துடனான நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

EXCLUSIVE: 'India will definitely win England series and qualify for WTC final'
EXCLUSIVE: 'India will definitely win England series and qualify for WTC final'

இந்திய அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்தவர், கருண் நாயர். கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டில் முச்சதம் விளாசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர்.

ஏனெனில், முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கிற்குப் பிறகு, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை கருண் நாயர் தன்வசம் வைத்துள்ளார். இருப்பினும், காயம் மற்றும் அணி தேர்வு உள்ளிட்ட காரணங்களினால் அதன்பின், தற்போது வரை அவரால் இந்திய அணிக்குள் இடம்பிடிக்க முடியவில்லை.

மேலும், டி20 கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கருண் நாயர், ஐபிஎல் தொடரில் 73 போட்டிகளில் பங்கேற்று 1,480 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 10 அரை சதங்களும் அடங்கும்.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டு முதல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த கருண் நாயர், நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் சயீத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைத் தொடர்களில் கர்நாடக மாநில அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்நிலையில் கருண் நாயர் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு அளித்துள்ள நேர்காணலில் தொகுப்பை இங்கு காண்போம்..!

கேள்வி: நீங்கள் எப்படி கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தீர்கள்?

கருண் நாயர்: எனது சிறுவயது முதலே கிரிக்கெட் விளையாட்டின் மீது ஆர்வமிருந்தது. இந்தியாவில் உள்ள மற்ற சிறுவர்களைப் போல நானும் முதலில் தெருக்களில் தான் கிரிக்கெட் விளையாட்டை விளையாட ஆரம்பித்தேன். எனக்கு இந்த விளையாட்டில் இருந்த ஆர்வத்தைக் கண்டு பெற்றோர், என்னை ஒரு கிரிக்கெட் கிளப்பில் சேர்த்தனர். அப்போதிலிருந்து நான் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடு, கிரிக்கெட்டை தொடர்ந்தேன். தற்போது அந்தக் கனவு நிறைவேறிவிட்டது.

கேள்வி: ஒரு கிரிக்கெட் வீரராக உருவாவது மிகவும் கடினம். அதுபோல், நீங்கள் உங்களது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியபோது ஏற்பட்ட சிரமங்கள் என்னென்ன?

கருண் நாயர்: எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் போராட்டங்களை கடந்துதான் வருகின்றனர். எனக்கு ஏற்பட்ட சிரமங்களை, நான் தனிப்பட்ட முறையில் போராட்டமாக கருதவில்லை. நான் படிப்படியாக முன்னேறினேன். ரஞ்சி கோப்பைத் தொடரில் நான் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து, எனக்கு இந்தியா ஏ, ஐபிஎல் ஆகிய தொடர்களில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

நான் சர்வதேச போட்டிகளில் விளையாடியபோது, இந்த விளையாட்டிற்கு நான் தகுதியான ஒருவன் தான் என எனக்குத் தோன்றியது.

கேள்வி: உங்கள் மிகப்பெரிய உந்துதல் யார்?

கருண் நாயர்: எனது உத்வேகமாக இருப்பவர், ராகுல் டிராவிட். அவர் விளையாடிய விதம், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடித்த ரன்கள், அவர் என்னை நடத்திய விதம், அவரது நெறிமுறைகள் ஆகியவற்றினால் எனது உத்வேகமாக ராகுல் டிராவிட்டை கருதுகிறேன். மேலும் நாங்கள் ஒரே மாநிலத்தையும், நகரத்தையும் சேர்ந்தவர்கள் என்பதும் ஒரு காரணம்.

கேள்வி: டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசியபோது உங்களது மனநிலை எவ்வாறு இருந்தது?

கருண் நாயர்: டெஸ்டில் நான் முச்சதம் அடித்த தருணத்தை என்னால் விவரிக்க முடியாது. ஏனெனில், நீங்கள் உங்கள் நாட்டிற்காக விளையாடும் பெருமையான தருணத்தில், முதல் டெஸ்ட் சதத்தையே முச்சதமாக மாற்றுவது ஒரு அற்புதமான உணர்வு. அது எனக்கு பெருமை சேர்த்துள்ளதோடு மட்டுமல்லாமல், என்னை அனைவரது மனதிலும் நிலைநிறுத்தியுள்ளது.

கேள்வி: 2016ஆம் ஆண்டு உங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு பொன்னான ஆண்டாகும். ஆனால் அதன்பின் சர்வதேச கிரிக்கெட்டில் உங்களுக்குப் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை என்று எப்போதாவது நினைத்ததுண்டா?

கருண் நாயர்: வாழ்க்கையில் எல்லாவற்றையும் நீங்கள் கட்டுப்படுத்த முடியாது. அதுபோல்தான், என்னால் ரன்களைக் குவிக்க முடிந்து, போட்டியிலும் சிறப்பாக செயல்பட முடியும் என்றால், எனக்கான வாய்ப்பு மீண்டும் கிடைக்கும் என நம்புகிறேன்.

கேள்வி: இன்னும் சில நாள்களில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இந்த சீசனிற்கு நீங்கள் எவ்வாறு தயாராகி வருகிறீர்கள்?

கருண் நாயர்: தற்போது நான் கர்நாடக மாநில அணிக்காக விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வருகிறேன். அதனால் இத்தொடரில் எனது முழுத்திறனையும் வெளிப்படுத்தி, அணிக்கு வெற்றியைத் தேடித்தருவதே எனது முதல் பணி. இத்தொடர் முடிந்த பிறகு, நான் உடனே ஐபிஎல் தொடருக்கான எனது பயிற்சியைத் தொடங்குவேன்.

கேள்வி: நடப்பு ஐபிஎல் தொடரின் மூலம் நீங்கள் மீண்டும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள் என நினைக்கிறீர்களா?

கருண் நாயர்: நீங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே, உங்களுக்கான வாய்ப்பு தேடி வரும். அதனால் நான் முதலில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படுவது குறித்து மட்டுமே யோசித்து வருகிறேன். மேலும் எனது கடின உழைப்பில் மட்டுமே, எனது கவனம் உள்ளது.

கருண் நாயர் நேர்க்காணல்

அதிரடிக் கேள்விகளும் பதிலும்:

1. உங்களுக்குப் பிடித்த ஷாட் எது?

பதில்: கவர் டிரைவ்

2. உங்களுக்குப் பிடித்த வீரர்: டிராவிட் (அ) கும்ப்ளே?

பதில்: ராகுல் டிராவிட்

3. உங்களுக்குப் பிடித்த ஃபிஃபா வீரர் யார்?

பதில்: டேவிட் மாதிஸ் (David Mathias)

4. பிடித்த உணவு: ராஜஸ்தானி தாளி (அ) தென்னிந்திய உணவு?

பதில்: இரண்டும்

5. உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு உணவை உங்களால் உண்ண முடிந்தால், அது என்னவாக இருக்கும்?

பதில்: அது ஒரு நீண்ட பட்டியலாக இருக்கும்

6. உங்களுக்குப் பிடித்த கிரிக்கெட் மைதானம்?

பதில்: எம்.சின்னசாமி மைதானம்.

7. வரலாற்றிலிருந்து நீங்கள் எந்தப் போட்டியில் விளையாட விரும்பினீர்கள்?

பதில்: 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர்

8. நீங்கள் விளையாடியதில் மிகவும் கடினமான பந்துவீச்சாளர் யார்?

பதில்: ஜஸ்பிரித் பும்ரா

9. முன்னாள் வீரர்களில் எந்த ஒரு பந்துவீச்சாளரை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்பதில் மகிழ்ச்சி அடைகிறீர்கள்?

பதில்: மெக்ராத்

10. கிரிக்கெட்டில் நீங்கள் ஆர்வம் இல்லாமல் இருந்திருந்தால், எந்த வேலையை தேர்வுசெய்திருப்பீர்கள்?

பதில்: பொறியியல்

இதையும் படிங்க: ‘கவாஸ்கர் என்றும் என்னுடைய ஹீரோதான்’ - சச்சின் டெண்டுல்கர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.