ETV Bharat / sports

இலங்கையில் இல்லை ஆசியக்கோப்பை - மழையில்லாத நாட்டிற்கு மாற்றிய கங்குலி!

author img

By

Published : Jul 22, 2022, 11:13 AM IST

அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற இருந்த ஆசியக்கோப்பைத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதிபடுத்தியுள்ளார்.

Asia Cup moved to the UAE
Asia Cup moved to the UAE

மும்பை: ஆசியக்கோப்பை 2022 தொடர் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 11ஆம் தேதிவரை இலங்கையில் நடைபெறும் எனத்திட்டமிடப்பட்டிருந்தது. டி20 போட்டிகளாக நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் தகுதிச்சுற்றில் வெற்றியடையும் 6 அணிகள் விளையாட உள்ளன. தகுதிச்சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நான்கு அணிகள் மோத உள்ளன.

ஆசியக் கோப்பைத்தொடர் நடைபெற இருந்த இலங்கை நாடு பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் பிரச்னைகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தால் தொடரை நடத்த இயலுமா என்ற கேள்வியெழுந்தது. ஜெயசூர்யா போன்ற மூத்த வீரர்கள் இலங்கையில் கிரிக்கெட் நடத்த வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர்.

மழையில்லாத நாட்டிற்கு மாற்றம்: இந்நிலையில், ஆசியக்கோப்பைத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என பிசிசிஐ கூட்டத்திற்குப் பின் அதன் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஆசியக்கோப்பைத் தொடர் மாற்றப்பட்டுள்ளது. ஏனென்றால், மழைபெய்யாத ஒரே இடம் அதுதான்" எனத் தெரிவித்தார்.

முன்னதாக, ஆசியக் கோப்பையை தங்களால் நடத்த இயலாது என இலங்கை கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. மேலும், பிசிசிஐ கூட்டத்தில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலிய அணிகளின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், போட்டிகளின் தேதிகள், மைதானங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா டி20 தொடர்: வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி மூன்று டி20 போட்டிகளை விளையாட உள்ளது. இப்போட்டிகள், செப்டம்பர் 20, 23, 25 ஆகிய தேதிகளில் முறையே மொஹாலி, நாக்பூர், ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா: மேலும், செப்டம்பர் இறுதியில் இந்தியா வரும் தென்ஆப்பிரிக்க அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளை விளையாட உள்ளன. இதில், டி20 போட்டிகள் திருவனந்தபுரம், கௌகாத்தி, இந்தூர் ஆகிய நகரங்களில் செப்டம்பர் 28, அக்டோபர் 1, 3 ஆகிய தேதிகளில் திட்டமிடப்பட்டுள்ளன.

ஒருநாள் போட்டிகள், ராஞ்சி, லக்னோ, டெல்லி ஆகிய நகரங்களில் அக்டோபர் 6, 9, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் தொடரானது, ஐசிசி ஒருநாள் சூப்பர் லீக்கின் ஒரு பகுதியாகும். முன்னதாக, இத்தொடர் மார்ச் 2020இல் நடைபெறத் திட்டமிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ரூ.10 ஆயிரத்திற்கு பெட்ரோல்... 2 நாள்கள் கூட தாங்காது...' - கதறும் இலங்கை கிரிக்கெட் வீரர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.