ETV Bharat / sitara

சூர்யா மனசாட்சிப்படி நடக்க வேண்டும் - திருப்பூர் சுப்பிரமணியம்

author img

By

Published : Nov 2, 2021, 3:11 PM IST

ஓடிடியில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' திரைப்படத்தை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெளியிடப்போவதாக சூர்யாவின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Jai Bheem
Jai Bheem

த.செ.ஞானவேல் இயக்கத்தில், 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய் பீம்'. இதில் ரெஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நவம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் 'ஜெய் பீம்' வெளியாகியுள்ளது. இப்படத்தைப் பார்த்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டப் பலர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ரசிகர் மன்றம் சார்பில், அவிநாசியில் உள்ள தாபா ஓட்டல் ஒன்றில், ஓடிடியில் வெளியாகியுள்ள 'ஜெய் பீம்' திரைப்படத்தைத் திரையிட சூர்யா ரசிகர்கள் முயற்சி செய்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 'ஜெய் பீம்' படத்தைத் திரையிட உள்ளதாக சூர்யா ரசிகர் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.

கண்டித்த திருப்பூர் சுப்பிரமணியம்

ரசிகர்களின் இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிஃபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க மாநிலத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது, " தமிழ்நாடு அரசின் திரைப்பட ஒளிப்பதிவு சட்டப்படி, உரிமம் பெற்ற திரையரங்கில் மட்டுமே திரையரங்குகள் வெளியிட வேண்டும். ஆனால், 'ஜெய்பீம்' படத்தை, பொது வெளியில், தாபா ஹோட்டல்களில் திரையிட அவரது ரசிகர்கள் முயற்சித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

சூர்யா தன் ரசிகர்கள் இது போன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்காமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. 'ஓடிடி' படங்களை பொது வெளியில் திரையிட அனுமதியில்லை. அவ்வாறு திரையிட்டாலும், அரசு அனுமதி பெற வேண்டும்.

இதை சூர்யா கண்டிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. அவர், மனசாட்சிப்படி நடந்து கொள்ள வேண்டும். இது போன்ற செயல்களால் தியேட்டர்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதால், தமிழ்நாடு முதலமைச்சருக்குப் புகார் அனுப்பியுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: 'ஜெய்பீம்' ஏற்படுத்திய அதிர்வுகள் ஏராளம் - சூர்யாவுக்கு ஸ்டாலின் பாராட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.