ETV Bharat / sitara

'தனிநபரை அவமதிக்கும் நோக்கமில்லை' - அன்புமணிக்குப் பதிலளித்த சூர்யா

author img

By

Published : Nov 11, 2021, 8:01 PM IST

Updated : Nov 11, 2021, 8:10 PM IST

'ஜெய் பீம்' திரைப்படத்தில் எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை என நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அன்புமணிக்கு பதிலளித்த சூர்யா
அன்புமணிக்கு பதிலளித்த சூர்யா

'ஜெய் பீம்' திரைப்படத்தில் தேவையின்றியும், திட்டமிட்டும் வன்னியர் சமுதாயம் இழிவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் படைப்புச் சுதந்திரம் எந்த சமுதாயத்தையும் இழிவுபடுத்த பயன்படுத்தப் படக்கூடாது என மருத்துவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் சூர்யாவுக்கு கடிதம் மூலம் நேற்று வலியுறுத்தினார்.

இந்நிலையில் அன்புமணி ராமதாஸ் கடிதத்திற்குப் பதிலளிக்கும் விதமாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸுக்கு வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன்.

என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. நீதிநாயகம் சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு வழக்கில், 'அதிகாரத்தை எதிர்த்து சட்டப்போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது' என்பதே ஜெய்பீம் படத்தின் மையக்கரு. பழங்குடியின மக்கள் நடைமுறையில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளையும் படத்தில் பேச முயன்றிருக்கிறோம்.

படைப்புச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கவேண்டும்

கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல, எந்தவொரு குறிப்பிட்ட தனிநபரையோ, சமுதாயத்தையோ அவமதிக்கும் நோக்கம் ஒருபோதும் எனக்கோ, படக்குழுவினருக்கோ இல்லை.

சிலர் சுட்டிக்காட்டிய பிழையும், உடனடியாகத் திருத்தி சரி செய்யப்பட்டதைத் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். 'படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் எந்தவொரு சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் உரிமை இங்கு எவருக்கும் வழங்கப்படவில்லை' என்கிற தங்களின் கருத்தை முழுவதுமாய் நான் ஏற்கிறேன். அதேபோல, 'படைப்புச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் வராமல் காக்கப்பட வேண்டும்' என்பதை நீங்களும் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை

ஒரு திரைப்படம் என்பது ஆவணப்படம் அல்ல. 'இத்திரைப்படத்தின் கதை, உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது.

இதில் வரும் கதாபாத்திரங்கள், பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் யாரையும் தனிப்பட்ட அளவில் குறிப்பிடவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்' என்கிற அறிவிப்பைப் படத்தின் தொடக்கத்திலேயே பதிவு செய்திருக்கிறோம்.

எளிய மக்களின் நலன்மீது அக்கறையில்லாத யாருடைய கையில் அதிகாரம் கிடைத்தாலும், அவர்கள் ஒரே மாதிரிதான் நடந்து கொள்கிறார்கள். அதில் சாதி, மத, மொழி, இன பேதம் இல்லை. உலகம் முழுவதும் இதற்குச் சான்றுகள் உண்டு.

படத்தின் மூலம் அதிகாரத்தை நோக்கி எழுப்பிய கேள்வியை, குறிப்பிட்ட 'பெயர் அரசியலுக்குள்' சுருக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மக்களின் பேரன்பு இருக்கிறது

ஒருவரைக் குறிப்பிடுவதாக நீங்கள் சொல்லும் அந்தக் கதாபாத்திரத்தின் பெயர், வேறொருவரையும் குறிப்பதாக ஒரு பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார்.

எதிர்மறைக் கதாபாத்திரங்களுக்கு எந்தப் பெயர் வைத்தாலும் அதில் யாரேனும் மறைமுகமாக குறிப்பிடப்படுவதாகக் கருதப்படுமேயானால், அதற்கு முடிவே இல்லை. அநீதிக்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய போராட்டக் குரல், 'பெயர் அரசியலால்' மடைமாற்றம் செய்யப்பட்டு நீர்த்துப் போகிறது.

சக மனிதர்கள் வாழ்வு மேம்பட என்னால் முடிந்த பங்களிப்பைத் தொடர்ந்து செய்கிறேன். நாடு முழுவதிலும் எல்லா தரப்பு மக்களின் பேரன்பும், பேராதரவும் எனக்கு இருக்கிறது.

விளம்பரத்திற்காக யாரையும் அவமதிக்க வேண்டிய எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை என்பதைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். சமத்துவமும், சகோதரத்துவமும் பெருக நாம் அனைவரும் அவரவர் வழியில் தொடர்ந்து செயல்படுவோம். தங்கள் புரிதலுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் சூர்யா மக்களின் வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Last Updated : Nov 11, 2021, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.