ETV Bharat / lifestyle

பப்ஜி விளையாட்டை முற்றிலும் தடைசெய்த அரசு!

author img

By

Published : Oct 30, 2020, 4:44 PM IST

இந்தியாவில் இன்றுமுதல் பப்ஜி விளையாட்டிற்கு முற்றிலுமாகத் தடைவிதிக்கப்படுகிறது. பிளே ஸ்டோரில் பப்ஜி நீக்கப்பட்டிருந்த நிலையில், ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களுக்கும் இன்றுமுதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

PUBG Mobile Lite version stop working
PUBG Mobile Lite version stop working

டெல்லி: பப்ஜி மொபைல் லைட் விளையாட்டுக்குத் தடைவிதித்ததுடன், இந்த விளையாட்டு இந்தியாவில் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், பப்ஜி உள்ளிட்ட 117 சீன செயலிகளுக்கு அண்மையில் தடைவிதித்தது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்தான் தடைக்குக் காரணம் என்று சொல்லப்பட்டது. முன்னதாக ஜூன் மாதம், டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளும், ஜூலை மாதம் 47 செயலிகளும் தடைசெய்யப்பட்டன.

இவ்வேளையில், சிறுவர்கள், இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள பப்ஜி மொபைல் விளையாட்டு, கட் கட், பைடு, ரைஸ் ஆப் கிங்டம்ஸ் ,கேரம் ஃப்ரண்ட்ஸ் உள்ளிட்ட மேலும் 118 சீன செயலிகளுக்குத் தடைவிதித்து மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பொது ஒழுங்கை கருத்திற்கொண்டும் இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்தது.

பப்ஜி விளையாடுவதால் இளைஞர்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகி வருவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், இதுபோன்ற செயலிகள் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக இருந்துவருகின்றன என்பதும் தெரியவந்தது.

பப்ஜி விளையாட்டு ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், வலைதளங்கள் மூலமாகவும், வேறு வகையிலும் சிலர் பப்ஜி விளையாட்டைத் தரவிறக்கம்செய்து விளையாடிவந்தனர். இச்சூழலில் பப்ஜி விளையாட்டை முழுவதுமாகத் தடைசெய்யும் நடவடிக்கையில் இறங்கிய மத்திய அரசு பப்ஜி விளையாட்டுச் செயலி கிடைக்கும் மறைமுக சர்வர்களையும் முடக்கியுள்ளது.

இதனால் தற்போது இந்தியாவில் பப்ஜி முழுவதுமாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பப்ஜி, 60 கோடி முறைகளுக்கும் மேல் சர்வதேச அளவில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 5 கோடி பேர் தொடர்ந்து இந்த விளையாட்டை விளையாடிவருகின்றனர்.

இதில் அதிகபட்சமான பதிவிறக்கங்கள் இந்தியாவிலிருந்துதான். இந்தியாவில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டு மிக மிகப் பிரபலம். அதுவும் இந்த கோவிட் நெருக்கடி, ஊரடங்கு காலகட்டத்தில் இந்தியாவில் பப்ஜி 17.5 கோடி முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.