ETV Bharat / jagte-raho

போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் கோடிக் கணக்கில் மோசடி செய்த தம்பதி!

author img

By

Published : Dec 18, 2020, 8:38 PM IST

சென்னையில் கடன் வாங்குவதற்காக போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் மோசடி செய்த தம்பதியிடம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Couple arrested for cheating in banks
Couple arrested for cheating in banks

சென்னை: மீன் வியாபாரம் செய்வதாக கூறி போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் வங்கியில் மோசடி செய்த தம்பதியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அண்ணா சாலையில் உள்ள சௌத் இந்தியன் வங்கியின் மேலாளர் ஜலாலுதீன் கொடுத்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர் விசாரனையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த கிளாட்சன், ஜெயசீலி தம்பதி அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருவதாகவும், தொழிலை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2016ஆம் ஆண்டு அடையாறு இந்திய ஓவர்சீஸ் வங்கியில் இரண்டு கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. பின் அதிகப்படியான கடன் தேவைக்காக 2018ஆம் ஆண்டு அண்ணாசாலையில் உள்ள செளத் இந்தியன் வங்கி மூலம் 3.25 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது.

வங்கிகளில் மோசடி செய்த தம்பதி

கரோனா காலம் தொடங்குவதற்கு முன்னதாக ஆறு மாதமாக தவணையை செலுத்தாமல் இருந்துள்ளனர். அதன்பின் கரோனா காலத்தில் மாதத் தவணை யாரும் செலுத்த வேண்டாம் என்ற அரசின் உத்தரவையும் சாதகமாக பயன்படுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது. மீண்டும் மாதத் தவணைகள் செலுத்த அரசு உத்தரவிட்டதையடுத்து, வங்கி சார்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது இந்த தம்பதி போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மத்திய குற்றப்பிரிவில் உள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்து விசாரணையை அலுவலர்கள் தொடங்கியுள்ளனர். அதில், மனைவி ஜெயசிலி பெயரில் திருவொற்றியூர், குன்றத்தூரில் சொத்துக்கள் உள்ளதாக வங்கியில் சமர்ப்பித்த ஆவணங்கள் போலி என கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் இவ்வாறு கடன் வாங்குவதற்காக போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தது, அம்பத்தூரைச் சேர்ந்த நிலத் தரகர் வீரமணி என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் மற்றொரு நிலத் தகராறில் வீரமணி கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மோசடி செய்தது உறுதியானதால் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள கிளாட்சன், ஜெயசிலி தம்பதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் வங்கி ஊழியர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தங்கக் கடத்தல் வழக்கு: முதலமைச்சர் பினராயி விஜயனின் உதவியாளரிடம் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.