ETV Bharat / jagte-raho

கறுப்பர் கூட்டம் கார்த்திக்கிற்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமின்!

author img

By

Published : Aug 26, 2020, 4:18 PM IST

கந்த சஷ்டி கவசத்திற்கு, ஆபாச வார்த்தைகளால் விளக்கமளித்து கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் பக்கம் காணொலி ஒன்றை வெளியிட்டது. இக்காணொலி படப்பிடிப்புக்காக கலைக்கூடத்தை வாடகைக்கு அளித்தவரான கார்த்திக், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு நிபந்தையுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.

கறுப்பர் கூட்டம்
கறுப்பர் கூட்டம்

சென்னை: கந்த சஷ்டி கவசம் பாடலை விமர்சித்த விவகாரத்தில் கறுப்பர் கூட்டம் யூ-டியூப் பக்கத்தின் குழு நபர்களில் ஒருவரான கார்த்திக்கிற்கு நிபந்தனையுடன் முன்பிணை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூ-டியூப் சேனலின் படப்பிடிப்புக்காக கலைக்கூடத்தை வாடகைக்கு அளித்தவரான கார்த்திக், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, வெளிநாடுகளிலிருந்து கறுப்பர் கூட்டம் பக்கத்திற்கு பணம் வருவதாகவும், அதுகுறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால் முன்பிணை வழங்க காவல் துறை ஆட்சேபனை தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து, சென்னை காவல் துறை மத்திய குற்றப்பிரிவின் விசாரணை அலுவலர் முன்பு தினமும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் கார்த்திக்கிற்கு முன்பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக, கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச வார்த்தைகளால் விளக்கமளித்து கறுப்பர் கூட்டம் யூ-டியூப் பக்கம் காணொலி ஒன்றை வெளியிட்டது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் கறுப்பர் கூட்டதைச் சேர்ந்த செந்தில் வாசன், ஒளிப்பதிவாளர் சோமசுந்தரம் படத்தொகுப்பாளர் குகன் ஆகியோர் கைது செய்யப்பட்டும், காணொலியில் பேசியிருந்த சுரேந்திரன் சரணடைந்தும், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.