ETV Bharat / international

அமெரிக்காவின் சியாட்டலில் மீண்டும் துப்பாக்கிச்சூடு.. 3 பேர் பலி!

author img

By

Published : Aug 21, 2023, 2:31 PM IST

தெற்கு சியாட்டலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

சியாட்டலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
சியாட்டலில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி

சியாட்டல் (அமெரிக்கா): தெற்கு சியாட்டலில் உள்ள ஹூக்கா லாஞ்சில் நேற்று அதிகாலை (ஆகஸ்ட் 20) ஞாயிற்றுக்கிழமை, பயங்கரமான துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை தரப்பிலிருந்து கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4:30 மணி அளவில் காவல் அவசர உதவி எண்ணுக்கு (911 ) வந்த தொடர் அழைப்புகளைத் தொடர்ந்து காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், அப்போது சம்பவ இடத்தில் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் குண்டு அடி பட்டு கிடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் குண்டு தாக்கிய இரண்டு ஆண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிறிது நேர போராட்டத்திற்கு பின் அவரும் உயிரிழந்துள்ளார். இருப்பினும், இத்தகைய பயங்கர சம்பவத்தில் உயிரிழந்தோரின் ஊர் மற்றும் பெயர் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்ததில் 5 பேர் குணமடைந்தும், ஒருவரின் நிலை மட்டும் மோசமாக உள்ளதாகவும் போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சியாட்டல் மேயர் புரூஸ் ஹாரல் கூறுகையில், சியாட்டலில் நடைபெற்று வரும் இத்தகைய தொடர் துப்பாக்கிச்சூட்டை தடுக்க, சியாட்டல் போலீசார் அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஜூலை வரை 869 துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இருப்பினும் இன்னும் பல துப்பாக்கிகள் சட்டவிரோதமாக சிலர் வைத்திருப்பதால் தான், இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக தெரிவித்தார். அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச்சூடு அடிக்கடி நடைபெற்று வரும் சூழலில் அதை தடுப்பதற்காக, மசோதா நிறைவேற்ற அதிபர் பைடன் கூறியுள்ளார். ஆனால், கீழ் அவை, மேல் அவை ஆகிய இரண்டிலும் இதற்கான பெரும்பாண்மை குறைவாக இருப்பதால், இந்த மசோதா இன்னும் நிலுவையிலேயே உள்ளது.

நியூயார்க்கில் இதுபோன்ற சம்பவங்களை தடுப்பதற்காக நிறைவேற்றப்பட்ட மசோதாவில், 21 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே துப்பாக்கியை வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் மற்ற மாகாணங்களில் இது போன்ற மசோதா நிறைவேற்றப்படவில்லை. இதனாலேயே அமெரிக்காவில் இந்த வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 50 பேர் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: நிலவில் விழுந்து நொறுங்கியது லூனா 25 விண்கலம் - தகர்ந்தது ரஷ்யாவின் கனவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.