ETV Bharat / international

Pro Khalistan protest: பிரிட்டன், கனடாவில் இந்தியத் தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம்!

author img

By

Published : Jul 9, 2023, 11:47 AM IST

காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்திய தூதரக அதிகாரிகளைக் கண்டித்தும் லண்டன் மற்றும் டொரன்டோவில் இந்தியத் தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டொரன்டோவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Indian
இந்தியா

லண்டன்: சீக்கியர்களுக்கான தனி நாடு கோரி வரும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்டப் பல நாடுகளில் இந்தியாவுக்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்தியத் தூதரகங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.

இந்தச் சூழலில், இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட காலிஸ்தான் புலிப்படையின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கடந்த மாதம் கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். குருத்வாராவுக்கு வெளியே ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காலிஸ்தான் ஆதரவாளர்களின் போராட்டம் தீவிரமடைந்தது. மெல்போர்ன், சான் ஃபிரான்சிஸ்கோ, டொரன்டோ உள்ளிட்டப் பல நகரங்களில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு தீ வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியது. காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தியத் துணை தூதரகத்திற்கு காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தீ வைத்ததாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் அருகே காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டியிருந்தனர். அதில், ஜூலை 8ஆம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக பேரணியில் ஈடுபடப் போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹர்தீப் சிங் கொலைக்கு இந்தியத் தூதரக அதிகாரிகள்தான் காரணம் என்றும், அவர்களைக் கண்டித்து பேரணி நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதையடுத்து, நேற்று(ஜூலை 8) லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீரென திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் காலிஸ்தான் கொடியையும், பிரிட்டனுக்கான இந்தியத் தூதரர் விக்ரம் துரைசாமி, பர்மிங்ஹாமில் உள்ள கன்சல் ஜெனரல் (Consul General) ஷஷாங்க் விக்ரம் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய கண்டன பதாகைகளையும் ஏந்தியபடி இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

அதேபோல் நேற்று கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு, காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்திற்கு எதிராக கனடாவில் வாழும் இந்தியர்களும் தூதரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் காலிஸ்தான் கொடியை ஏந்தியபடி, போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கனடா வாழ் இந்தியர்கள் இந்தியக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் தொடர் அச்சுறுத்தலால் லண்டன், டொரன்டோ, சான் ஃபிரான்சிஸ்கோ நகரங்களில் பதற்றம் நிலவி வருகிறது.

இதையும் படிங்க: கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.