ETV Bharat / international

பிரதமர் மோடிக்கு எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள்: மாலத்தீவு வெளியுறவுத் துறை விளக்கம்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 8, 2024, 4:48 PM IST

Maldives vs Modi: பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் சமூக வலைத்தளங்களில் இழிவான கருத்துகளை வெளியிட்ட நிலையில், அவை அரசாங்கத்தின் கருத்துக்கள் இல்லை எனவும் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் எனவும் மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் விளக்கம்
பிரதமர் மோடிக்கு எதிரான மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துக்கள்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் இழிவான கருத்துகளை வெளியிட்டதை தொடர்ந்து அமைச்சர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியான கருத்துக்கள் தனிப்பட்டவை என்றும், அவை அரசாங்கத்தின் கருத்துக்கள் இல்லை என கூறி அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளது.

இந்திய பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2ஆம் தேதி 2 நாள் பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். பின்னர், லட்சத்தீவு பயணம் குறித்து அவர், “லட்சத்தீவுகள் வெறும் தீவுகளின் கூட்டமல்ல அது காலம் காலமாக நீடித்து இருக்கும் அம்மக்களின் பாரம்பரியம் என்றும், நீங்கள் சுவாரசியமிக்க மற்றும் நல்லதொரு பயண அனுபவத்தைப் பெறவிரும்புபவார்கள் ஆனால், அப்போது உங்கள் பயணப்பட்டியலில் லட்சத்தீவும் இடம்பெற வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி பதிவிட்டிருந்த இந்த செய்திக்கு மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் வெறுப்பு கருத்துகளை பதிவிட்டனர். அவர்களின், இந்த கருத்துக்கள் குறித்து மாலத்தீவு எதிர்க்கட்சிகளிடையே கண்டனங்கள் வலுத்தன. மேலும், அமைச்சர்களின் இழிவான கருத்துக்கள் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல பிரபலங்கள் மாலத்தீவுகளுக்கு செல்வதற்குப் பதிலாக உள்நாட்டு சுற்றுலாத் தலங்களுக்கு செல்லுமாறு தங்களின் X தளத்தில் மக்களை வலியுறுத்தி இருந்தனர்.

இதன் எதிரொலியாக, சில இந்தியர்கள் மாலத்தீவுக்கு செல்ல திட்டமிடப்பட்ட பயணத்தை ரத்து செய்வதாக சமூக ஊடகங்களில் பதிவுகள் இருந்தன. இதனிடையே, அமைச்சர்களின் இத்தகைய வெறுப்பு கருத்துகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு இந்திய அமைச்சகம் மாலத்தீவு தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வமாக கேள்வி எழுப்பி இருந்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக வெறுப்பு கருத்துகளை பகிர்ந்த மூன்று அமைச்சர்களான மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோர் இடைநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் அமைச்சர்களின் இந்த கருத்துக்கள் தனிப்பட்டவை எனவும் அவை மாலத்தீவு அரசாங்கத்தின் நிலைப்பாடு இல்லை எனவும் கூறி தனது X தளத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, “வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் எங்களின் நெருங்கிய அண்டை நாடுகளுக்கு எதிராக சமீபத்தில் வெளியான கருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. மேலும், அவை மாலத்தீவு அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடுகள் கிடையாது. பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலின் அடிப்படையில் எங்கள் ஆதரவு நாடுகள் குறிப்பாக எங்கள் அண்டை நாடுகளுடன் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலை வளர்க்க முயற்சிப்பதில் உறுதியாக இருக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது குறித்து மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள X தளப்பதிவில், “வெளிநாட்டுத் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட நபர்களுக்கு எதிராக சமூக ஊடக தளங்களில் பதிவிடப்பட்ட தரக்குறைவான கருத்துகளை அறிந்திருக்கிறோம். இந்த கருத்துக்கள் தனிப்பட்டவை, இவை மாலத்தீவு அரசாங்கத்தின் கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி குறித்து அவதூறு: 3 மாலத்தீவு அமைச்சர்கள் இடைநீக்கம்.. முழு பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.