ETV Bharat / international

இப்படிதான் தப்பித்தேன் - பாகிஸ்தான் காவலில் இருந்து தப்பித்து விளக்கமளித்த பயங்கரவாதி

author img

By

Published : Feb 18, 2020, 7:43 PM IST

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய எசானுல்லா எசான் என்ற தாலிபான் பயங்கரவாதி, அந்நாட்டு காவலில் இருந்து தப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Taliban militant active on Twitte
Taliban militant active on Twitte

பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய் மற்றும் பெஷாவர் ராணுவ பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு காரணமான முன்னாள் தெஹ்ரீக்-இ-தாலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பின் செய்தித் தொடர்பாளர் எசானுல்லா எசான் என்பவர் பாதுகாப்பு காவலில் இருந்து தப்பித்ததாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இஜாஸ் ஷா, "ஆம், அவர் தப்பித்தது உண்மைதான். இருப்பினும் அவரை பிடிக்க பல்வேறு முயற்சிகளை பாகிஸ்தான் மேற்கொண்டுவருகிறது. விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்" என்றார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் தாலிபான் பயங்கரவாதி எசானுல்லா எசான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சரணடைந்தார். மற்ற தாலிபான் பயங்கரவாதிகள் குறித்து அவரளித்த தகவல்களுக்கு பதிலாக, அவரை கைது செய்யாமல் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அவருடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது.

அதன்படி, எசானுல்லா வசித்த கிராமத்தில் இடிக்கப்பட்ட அவரது வீட்டை மீண்டும் கட்டித்தரவும், அவருக்கு பாதுகாப்பான இடத்தையும் 1 கோடி ரூபாய் (பாகிஸ்தான் ரூபாய்) பணத்தை தரவும் பாகிஸ்தான் ராணுவம் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுமட்டுமின்றி அவர் செல்போன் மற்றும் இணையத்தைப் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் காவலில் இருந்து தப்பித்த எசானுல்லா எசான், தான் தப்பித்தது எப்படி என்பது குறித்த தகவல்களையும், பாகிஸ்தான் ராணுவத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் குறித்த ஸ்கிரீன் ஷாட்களையும் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து அவரது பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது.

இதையும் படிங்க: பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு - 7 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.