ETV Bharat / international

மோடி-ட்ரம்ப் இணக்கத்தால் அமெரிக்க இந்திய உறவு பாதிப்புக்குள்ளாகுமா?

author img

By

Published : Nov 14, 2020, 4:09 PM IST

Updated : Nov 14, 2020, 10:31 PM IST

ட்ரம்ப்பின் ஆதரவு நிலைப்பாட்டை மோடி எடுத்ததால் அமெரிக்க இந்திய உறவில் பாதிப்பு ஏற்படாது என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர்.

Modi
Modi

கடந்த ஆண்டு அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியின் ’ஹவுடி மோடி’ பேரணியின்போது, முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை அழைத்திருந்தார். அந்தப் பேரணியில் ’ஆப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்’ என்ற முழக்கத்தை முன் வைத்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறி, டிரம்பை எதிர்த்து நின்ற ஜோ பைடன் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய பிரதமரின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ட்ரம்ப் தோல்வியை தழுவியதால், இந்திய-அமெரிக்க உறவுக்கு இடையே விரிசல் ஏற்படுமா என்ற கேள்வி மிகப்பெரிதாக உருவெடுத்துள்ளது.

மோடி கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து, ஆப் கி பார் சர்க்கார் என்ற முழக்கத்தை வைத்ததால், தற்போது இந்திய-அமெரிக்க நல் உறவில் விரிசல் ஏற்படும் என்று இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் குறை கூறியுள்ளது.

ஆனால் டிரம்ப் உடனான நெருக்கத்தால் இந்தியாவுக்கு, குறிப்பாக மோடிக்கு எதிராக புதிய பிரதமர் பைடன் செயல்படுவார் என்ற கூற்றை, பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர் ராம் மாதவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

”இந்திய பிரதமர் மோடி மட்டுமே டிரம்புக்கு ஆதரவு தெரிவித்தார் என்ற நிலைப்பாடு தவறானது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரேசில் அதிபர் போல் சோனாரோ, மற்றும் ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் பலரும் தரப்புக்கு ஆதரவாக இருந்துள்ளனர். அவர்களும் தற்போதைய புதிய அமெரிக்க அரசுக்கு ஏற்றாற்போல், தங்களது வெளியுறவுக் கொள்கைகளை மாற்றியாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபராக பைடன் பதவி ஏற்பதால், இந்திய-அமெரிக்க நல்லுறவு பாதிக்கப்படும் என்ற கூற்றை நாட்டின் முக்கிய அதிகாரிகளும், வெளியுறவுக் கொள்கை நிபுணர்களும் மறுத்துள்ளனர். அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தியாவின் நல்லுறவு நிச்சயம் தேவை, இந்தியாவுக்கு அமெரிக்காவின் நல்லுறவும் அவசியம் தேவை என்பதால், நிச்சயம் இணக்கமான சூழலை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதில் ஐயமில்லை என்று, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் வெவ்வேறு பாதைகளில் பயணித்தாலும், இந்தியாவுடனான நல்லுறவு விவகாரத்தில் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளனர். அதனால் இந்தியாவில் யார் ஆட்சியில் இருந்தாலும் அமெரிக்காவுடனான உறவில் எந்த சுணக்கமும் ஏற்படாது என்று, ஒபாமா ஆட்சிக்காலத்தில் அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றிய மீரா ஷங்கர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்கா, மெக்ஸிகோ, மியான்மர் மற்றும் கென்யா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றிய ராஜீவ் பாட்டியா இதுகுறித்து கூறும்போது, ”இந்திய பிரதமர் மோடி மற்றும் ட்ரம்ப் இடையிலான நெருக்கத்தின் காரணமாக, இந்திய அமெரிக்க உறவில் எந்த விரிசலும் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் அமெரிக்காவில் எந்த அரசு பதவி ஏற்றாலும் வெளியுறவுக் கொள்கையின் நலனுக்காக செயல்படுவார்கள். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அமெரிக்கா உடனான நட்புறவை பொறுத்தவரை மோடி மிகச் சரியாகத்தான் செயல்பட்டார். சீனாவுடனான எல்லை பிரச்சனையில் இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுப்பதற்கு, மோடி-டிரம்ப் இடையிலான நல்லுறவு மிக முக்கிய காரணமாக அமைந்தது,” என்றார்.

இந்தியாவுக்கான தூதரும் வெளியுறவுக் கொள்கைகளில் நிபுணருமான விஷ்ணு பிரகாஷ் இதுகுறித்து கூறும்போது, ”இந்திய-அமெரிக்க உறவை பொறுத்தவரை தனிநபர் விவகாரமாக இதைப் பார்க்கக்கூடாது. இரு நாடுகளின் நலன் சார்ந்த விவகாரமாகவே பார்க்கவேண்டும். சீனாவின் எல்லை மீறலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது உள்ளிட்ட, பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் கூட்டிணைந்து செயல்பட்டு வந்துள்ளன. இனியும் அது தொடரும்” என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப் நம்பிக்கைக்கு பாத்திரமாக மாறுவதில் ஏற்பட்ட தொடக்ககால சிக்கல்

2016 ஜனவரி மாதம் ட்ரம்ப் பதவியேற்ற போது அவரது நம்பிக்கையைப் பெறுவதற்கு மோடி மிகுந்த சிரமப்பட வேண்டி இருந்தது. காரணம் அதற்கு முன் அதிபராக இருந்த பாரக் ஒபாமா உடன் மோடி காட்டிய நெருக்கம். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில், முதல்முறையாக அதிபர் ஒபாமா கலந்து கொண்டதால் அவர் மோடிக்கு மிக நெருக்கமானவர் என்று டிரம்ப் உறுதியாக நம்பினார்.
”அதிபராக பதவியேற்ற தொடக்க காலத்தில் நாங்கள் அவரை அணுகுவதற்கு மிகுந்த சிரமப்பட்டோம் அவருடனான சந்திப்புக்கு நேரம் கேட்பதற்கும், அவரது வருகைக்காக அழைப்பு விடுப்பதற்கும் கடினமாக இருந்தது. காரணம் இந்திய பிரதமர் மோடி முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் நெருக்கமாக இருந்ததால் சற்று தயக்கம் காட்டினார்” என்று மீரா சங்கர் நமது ஈடிவிக்கு தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவுக்கான இந்திய தூதராகவும், கனடாவுக்கான உயர் அதிகாரியாகவும் பணியாற்றிய விஷ்ணு பிரகாஷ் கூறும்போது, ”பைடன் அரசை அணுகி நல்லுறவைப் பேணுவதற்கு, அதிகாரிகள் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் முன்னாள் அதிபர் டிரம்ப் உடன் மோடி மிகுந்த இணக்கமாக இருந்ததால், அதிக முயற்சி எடுத்து தற்போதைய அரசுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சுருக்கமாக சொல்வதென்றால் யார் அதிகாரத்தில் இருந்தாலும் அவர்களுடன் நல்லுறவை உருவாக்கி அதை பலப்படுத்துவது தான் எங்கள் கடமை” என்றார்.

ஜனநாயக கட்சியினருடன் இணக்கமற்ற போக்கு
ஹூஸ்டன் பேரணியில் ட்ரம்ப்புக்கு அழைப்பு விடுத்தது மட்டும் தான், மோடிக்கு எதிரான போக்கை ஜனநாயக கட்சியினர் கடைபிடிக்க காரணம் என்று கூறிவிட முடியாது. ஜனநாயகக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஏற்கனவே மோடியின் பல்வேறு நடவடிக்கைகளை விமர்சித்துள்ளனர். குறிப்பாக துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ் பிரதிநிதியான சென்னையில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்ற பிரமிளா ஜெயபால் உள்ளிட்ட, பல்வேறு தலைவர்கள் ஏற்கனவே பிரதமர் மோடியின் மனித உரிமைகள் தொடர்பான விவகாரம், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் போன்றவற்றில் மோடிக்கு எதிரான கருத்துக்களை வலுவாக முன்வைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கே அமைச்சர்கள் மட்டத்திலான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையின்போது, அமெரிக்க வெளியுறவுத்துறை கமிட்டி உறுப்பினர்கள் உடனான சந்திப்பை தவிர்த்தார். காரணம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரமிளா ஜெயபால் அந்தக் கமிட்டியில் உறுப்பினராக இருந்தார். அவரை கூட்டத்திலிருந்து நீக்கும்படி ஜெய்சங்கர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது, அதனால் அந்த கூட்டத்தை ரத்து செய்தார். அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை நீக்கிய இந்திய அரசின் நடவடிக்கைக்கு பிரமீளா ஜெயபால் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தனது வாதங்களை முன் வைத்திருந்தார். இதனால் தான் ஜெய்சங்கர் அந்த கூட்டத்தை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகின.
பிரமீளா ஜெயபால் உறுப்பினராக இருந்த காரணத்தினால் ஜெய்சங்கர் அந்த கூட்டத்தை நிராகரித்ததை, தற்போது துணை அதிபராக பதவியேற்றுள்ள கமலா ஹாரிஸ் மற்றும் எலிசபெத் வாரன் ஆகியோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இணக்கமான எண்ணங்கள்தான் எதிர்கால நல் உறவை பலப்படுத்தும்
இது போன்ற விவகாரங்களால் இந்திய அமெரிக்க உறவு சறுக்கலை சந்திக்கும் என்ற கூற்றை உயரதிகாரிகள் மறுத்துள்ளனர்.
”ஒபாமா ஆட்சியில் இருந்தபோதே, மோடி அமெரிக்க அரசுடன் நெருக்கமான உறவைப் பேணுவதில் அதிக ஆர்வம் காட்டினார். தற்போது ஆட்சியில் அமர்ந்துள்ள பைடன் மற்றும் அவரது கட்சியினர் இதை நன்கு அறிவார்கள். அரசியலிலும் ஆட்சியிலும் இருப்பவர்கள் அனுபவத்தால் முதிர்ந்தவர்கள். அதனால் எது நாட்டிற்கு நன்மை அளிக்குமோ, அதற்கே முக்கியத்துவம் அளிப்பார்கள். அமெரிக்காவைப் பொறுத்தவரை, இந்தியாவின் உறவு முக்கியம். இந்தியாவுக்கும் அமெரிக்காவின் உறவு மிக முக்கியமானது” என்று ராஜீவ் பாட்டியா கூறியுள்ளார்.

”இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு கூட்டிணைவில் நல்லுறவு இருந்து வந்துள்ளது. எதிர்காலத்திலும் இந்த நல்லுறவு பேணப்பட வேண்டும் என்பதை, இரு நாட்டு அரசுகளும் நன்கு உணர்ந்துள்ளனர். ஆதலால் பொதுவான இணக்கத்தன்மையை நோக்கி இரு நாடுகளும் ஒன்றாகவே பயணிக்கும்” என்று இந்திய தூதர் விஷ்ணு பிரகாஷ் கூறியுள்ளார்.

தனிப்பட்ட முரண்பாடுகளுக்கு ஆட்சியில் இடம் இல்லை

விஜயலட்சுமி பண்டிட்டுக்கு பிறகு, அமெரிக்காவுக்கான இரண்டாவது பெண் தூதராக நியமிக்கப்பட்ட மீரா சங்கர், ஏற்கனவே ஒபாமா ஆட்சி காலத்தின்போது பைடனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கிறார். மோடி அரசு ட்ரம்ப்புடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பெரும் முயற்சிகளை ஏற்படுத்தி இருப்பதால், இந்தியாவுடனான நல்லுறவை அமெரிக்கா கைவிடும் என்பதை மீரா சங்கர் மறுத்துள்ளார்.
”முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எதையும் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்வார். ஆனால் பைடன் அப்படி இல்லை. இந்தியாவுடன் இணக்கமான சூழலை ஏற்படுத்தவே அவர் விரும்புவார். அதனால் இரு நாட்டு உறவுகள் இடையே எந்த சுணக்கமும் ஏற்படாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளுடனான இணக்கமே பலன் தரும்

தனது ஹூஸ்டன் பேரணியில், டிரம்புக்கு மோடி அழைப்பு விடுத்ததால சில சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்பதையும் உயர் அதிகாரிகள் ஒப்புக் கொள்கின்றனர்.


”அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் தலையிடுவதால், இந்தியா சில பாதிப்புகளை சந்திக்க நேரிடும். குடியரசுக் கட்சியும் ஜனநாயக கட்சியும் நேரெதிர் துருவங்களாக இருக்கும் போது, ஏதேனும் ஒரு கட்சிக்கு ஆதரவு தரும் போது மற்றொரு கட்சி ஆட்சிக்கு வரும்போது நிச்சயம் சில பாதகங்களையும் சந்திக்க நேரிடும். அது இந்தியாவின் வெளியுறவுப் பலன்களை பாதிக்கும்” என்று மீரா சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தக் கூற்றை ராஜீவ் பாட்டியாவும் ஒப்புக்கொண்டுள்ளார். ”ஹூஸ்டன் பேரணியில் ட்ரம்புக்கு அழைப்பு விடுத்த விவகாரம், பல்வேறு ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதை மறுக்க இயலாது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும். இந்த அரசியல் மாற்றங்களால் பாதிப்புகள் ஏற்படாது என நம்புகிறேன். புதியஅரசு அமைந்த உடனேயே பிரதமர் மோடி தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பி இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். விரைவில் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று நம்புகிறோம்” என்று ராஜீவ் பற்றிய நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Last Updated : Nov 14, 2020, 10:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.