ETV Bharat / entertainment

மாமன்னன் படத்தில் வேறு மாதிரியான வடிவேலுவை பார்ப்பீர்கள் - இயக்குநர் மாரி செல்வராஜ்!

author img

By

Published : Apr 19, 2023, 7:28 PM IST

''மாமன்னன் படத்தில் வேறு மாதிரியான வடிவேலுவை பார்ப்பீர்கள். இதுவரை இல்லாத மாதிரி வித்தியாசமாக காட்டி இருக்கிறோம். ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும்'' என இயக்குநர் மாரி செல்வராஜ் கூறினார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: தென்சென்னை மாவட்டம் அனைத்து இந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் கோடைக்கால நீர் மோர் பந்தல் துவக்க நிகழ்ச்சி சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டு, நீர் மோர் பந்தலை துவக்கி வைத்து மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரி மற்றும் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை வழங்கினார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் மாரி செல்வராஜ் பேசுகையில், ''இன்று தனுஷ் ரசிகர்கள் மன்றம் சார்பில் கோடைகால நீர் மோர் பந்தலை துவக்கி வைத்துள்ளோம். அடுத்தடுத்து இது போன்ற பணிகளை செய்து வருகிறேன். தனுஷ் உடன் படம் பண்ணுவது முன்னரே திட்டமிட்டது தான்'' என்றார்.

வடிவேலு இருக்கிறாரா என்ற கேள்விக்கு, ''இல்லை. இன்னும் அதைப் பற்றி திட்டமிடவில்லை'' என்றும் கூறினார்.

மாமன்னன் படம் குறித்து பேசியவர், ”மாமன்னன் படம் முடியும் நிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த வாரத்தில் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியாகும். மாமன்னன் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக இருக்கும். முக்கியமான அரசியலை பேசக்கூடிய படமாக இருக்கும். இந்த மாதிரி படம் எடுக்க முடியுமா என்று நான் ஆசைப்பட்டு எடுத்தேன். இந்த படத்தில் வேறு மாதிரியான வடிவேலுவை பார்ப்பீர்கள். இதுவரை இல்லாத மாதிரி வித்தியாசமாக காட்டி இருக்கிறோம். தமிழ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கும்.

ஏ.ஆர். ரஹ்மான் உடன் பணியாற்ற வேண்டும் என்று எல்லா இயக்குநர்களுக்கும் ஆசை இருக்கும். அதே ஆசை எனக்கும் இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றி உள்ளேன். அவருடன் வேலை செய்தது நல்ல அனுபவம். ரஹ்மான் மாதிரியான ஒருவருடன் (அரசியல் உள்ளிட்ட சில விஷயங்களைப் புரிந்து கொண்டது) வேலை செய்தது, ரொம்ப சந்தோஷமாக இருந்தது’’ என்றார்.

சூரியை ஹீரோவாக வைத்து வெற்றிமாறன் படம் பண்ணிவிட்டார். உங்கள் படங்களில் அதிகமாக யோகி பாபுவை நடிக்க வைக்கிறீர்கள். அவரை ஹீரோவாக வைத்து படம் வருமா என்ற கேள்விக்கு, ''அதை கதை தான் முடிவு செய்யும். எனக்கு அதே மாதிரியாக சில நல்ல கதைகள் கிடைத்தால் யாரை வைத்து வேண்டுமானாலும் கதைக்கு ஏற்ப ஹீரோவாக வைத்து பண்ணுவேன்'' என்று கூறினார்.

''தனுஷ் படம் எனது கேரியரில் முக்கியமான பாய்ச்சலாக இருக்கும். கர்ணன் படத்துக்குப் பிறகு மீண்டும் தனுஷ் உடன் சேர்ந்து படம் பண்ணும்போது அவருக்கான கதையாக யோசித்து எடுக்க வேண்டும். வடிவேலு, பஹத் ஃபாசில் என எல்லோரும் ஒவ்வொரு ஜார்னரில் இருக்கிறார்கள். அவர்களை ஒரே படத்தில் காட்டியது சந்தோஷம். படம் பார்க்கும்போது பெரிய அனுபவமாக இருக்கும்'' என்றார்.

முன்பெல்லாம் ஒரு படம் 100 நாட்களுக்கு மேல் ஓடினால் வெற்றி பெற்றதாக சொல்வார்கள். ஆனால், தற்போது சில படங்களில் 4 அல்லது 5 நாட்கள் ஓடினாலே வெற்றி என்று சொல்கிறார்கள் என்பது குறித்த கேள்விக்கு, ''அது அவரவர் படங்களைப் பொறுத்தது. எந்த படமாக இருந்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டால் சரி தான். மக்களை எப்படி சென்றடைகிறது. அவர்கள் ஏற்றுக்கொண்டார்களா? என்பது தான். படம் எப்படி இருந்தாலும், அந்த படக்குழுவினர் உழைப்பை போட்டிருக்கிறார்கள். அதற்காக அவர்கள் கொடுத்துக்கொள்ளும் ஒரு ஊக்கம் என்று எடுத்துக்கொள்ளலாம். வரலாற்றைச் சார்ந்த படங்கள் வரும்போது மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்'' என்றார்.

உங்களுக்கு நாவலை மையமாக கொண்டு கதை ஏதும் எடுக்கத் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, ''நாவலை எடுப்பதற்கு முன் பத்து படமாவது எடுத்து முடிக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலினுக்கு மாமன்னன் படம் எப்படி இருக்கும் என்பதை அறிய நானும் காத்திருக்கிறேன்'' என்று கூறினார்.

இதையும் படிங்க: "ஒரு கோடை Murder Mystery" திரில்லர் வெப் சீரிஸ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.