ETV Bharat / entertainment

சரிகிறதா சிவகார்த்திகேயனின் மார்க்கெட்... கோலிவுட் ’’பிரின்ஸ்’’க்கு என்ன ஆச்சு..!

author img

By

Published : Oct 26, 2022, 5:50 PM IST

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக கொடிகட்டிப் பறக்கத் தொடங்கிய சிவகார்த்திகேயனின் மாஸ் இமேஜ் சரிய தொடங்கியுள்ளதா என்பது குறித்த சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.

சரிகிறதா சிவகார்த்திகேயனின் மாஸ் இமேஜ்
சரிகிறதா சிவகார்த்திகேயனின் மாஸ் இமேஜ்

தமிழ் சினிமாவில் குடும்பங்கள் கொண்டாடும் நாயகனாக இருந்துவிட்டால் அவர்தான் மாஸ் ஹீரோ. அதுவும் குழந்தைகளுக்குப் பிடித்துவிட்டவராக மாறிவிட்டால் சொல்லவே வேண்டாம் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள். ரஜினி, விஜய் எல்லாம் அப்படி மாஸ் ஹீரோவாக அங்கீகரிக்கப்பட்டவர்களே. அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் சிவகார்த்திகேயன்.

சின்னத்திரையில் காமெடி நிகழ்ச்சி மூலம் மக்களுக்குப் பரிச்சயம் ஆனவர் தொடர்ந்து அதில் தனது நகைச்சுவை திறன், மிமிக்ரி ஆகியவற்றின் மூலம் ஒவ்வொரு இல்லங்களிலும் நுழைந்தார். அதுவே அவரது முதல் வெள்ளித்திரை பயணத்திற்குத் துணையாக வந்து நின்றது.

வெள்ளித்திரை பயணம்: ’மெரினா’ மற்றும் தனுஷின் ’3’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதித்தாலும் தனி நாயகனாக ’மனம் கொத்திப் பறவை’ படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படம் நகைச்சுவை படமாக இருந்ததால் குடும்பத்துப் பெண் ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

அதனைத் தொடர்ந்து காதல், காமெடி கதைகளிலேயே நடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டார் சிவகார்த்திகேயன். ’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ’ரஜினி முருகன்’, ’மான் கராத்தே’ எனத் தொடர்ந்தது அந்த பயணம். மெல்ல மெல்ல இளைஞர் பட்டாளமும் இவரது ரசிகர்களாக மாறத் தொடங்கினர்.

எங்கேயோ ஒரு ஊரிலிருந்து தனது திறமை மூலம் தமிழ் சினிமாவில் பெரிய நடிகராக உருவாகி விட்டாரே என்ற எண்ணமும், நம் பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றமும் சிவகார்த்திகேயனை ஏற்றுக் கொள்ள வைத்தது. இளைஞர்கள் சிவகார்த்திகேயனைத் தன்னை போல் உருவகப்படுத்திக் கொண்டனர்.

மாஸ் ஹீரோ அந்தஸ்து: தன்னால் முடியாததைத் திரையில் சிவகார்த்திகேயன் செய்வதாக நினைத்து இளைஞர்கள் உள்ளுக்குள் மகிழ்ந்தனர். அதன் விளைவு சாதாரண நடிகனாக இருந்த சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களில் மாஸ் ஹீரோ என்‌ற நிலைக்கு உயர்ந்தார். ரஜினி, விஜய், அஜித் படங்களுக்கு இருந்த முதல் நாள் ஓபனிங் இவருக்கும் இருந்தது. இப்படி மெல்ல மெல்ல மாஸ் ஹீரோவாக உயர்ந்தார்‌.

தன்னை வளர்ந்துவிட்ட தனுஷின் மார்க்கெட்டையே அசைத்துப் பார்த்தார் சிவகார்த்திகேயன் என்று கூடச் சொல்லலாம், அந்த அளவிற்கு கடந்த சில வருடங்களில் அவரது வளர்ச்சி அமைந்துள்ளது. ’டாக்டர்’ , ’டான்’ என அடுத்தடுத்து ரூ.100 கோடி வசூல் படங்களைக் கொடுத்தார். இவரது வளர்ச்சியைப் பார்த்து திரையுலகமே வாய் பிளந்தது.

மாஸ் ஹீரோவுக்கான அடையாளம் முதல் நாள் திரையரங்குகளில் கூடும் ரசிகர்களின் கூட்டமே. அதனைத் தனது ஒவ்வொரு படத்தின் வெளியீட்டின் மூலமும் நிரூபித்தார். ஆக்சன், காதல், சென்டிமென்ட், காமெடி என அனைத்து ஏரியாவிலும் கலந்து கட்டி அடித்தார் சிவகார்த்திகேயன். இதனால் சம்பளமும் உயர்ந்தது ரசிகர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கூடியது.

சரியும் மார்க்கெட்: ஆனால் அந்த மாஸ் இமேஜுக்கு தற்போது ஆபத்து வந்துள்ளது. என்னதான் கமர்ஷியல் வெற்றிப்படங்கள் கொடுத்தாலும் கதைத் தேர்வில் கவனம் இல்லை என்றால் நிலைமை மோசமாகிவிடும் என்பதை சிவகார்த்திகேயன் உணர வேண்டிய தருணம் இது என்பதை இந்த தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் திரைப்படம் உணர்த்தியுள்ளது.

ரஜினிக்கு இருந்த மாஸ் காரணமாக அவரது மோசமான திரைப்படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று விடும். ’பாபா’, ’லிங்கா’ போன்ற படங்கள் மோசமான இருந்தாலும் வசூல் கிடைத்தது. விஜய் படங்களும் அப்படித்தான். ’பிகில்’ படம் மோசமான விமர்சனங்களைப் பெற்றது. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ‌.300 கோடி வசூலித்தது.

அந்த நிலை சிவகார்த்திகேயனுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். அவரது ’மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் மோசமான தோல்வியைத் தழுவியது. வசூல் ரீதியாகவும் தோல்விதான் இப்படம். தற்போது அதே தான் பிரின்ஸ் திரைப்படமும் செய்து வருகிறது. படமாகவும், வசூலிலும் சறுக்கியுள்ளது.

என்னதான் ரசிகர்கள் முதல் நாளே வந்து படம் பார்த்தாலும் அடுத்தடுத்து வந்து பார்க்கும் குடும்பங்களின் கையில்தான் மாஸ் ஹீரோக்களின் வெற்றி இருக்கிறது. அது பிரின்ஸ் படத்திற்கு இல்லை என்பதே உண்மை. எனவே தொடர்ந்து இரண்டு படங்கள் 100கோடி ரூபாய் வசூல் செய்ததால் தானும் மாஸ் ஹீரோ என்ற எண்ணத்தில் சிவகார்த்திகேயன் இருப்பதாகக் கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

இந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்தால் தான் மார்க்கெட்டில் நீடிக்க முடியும் என்பதையும் சிவகார்த்திகேயன் உணர வேண்டும். அதற்கு இந்த பிரின்ஸ் திரைப்படம் ஒரு பாடமாக இருக்கும் என்பதே நிதர்சனம்.

இதையும் படிங்க: வருகிறது சர்தார் 2...கன்ஃபார்ம் செய்த படக்குழு...!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.