ETV Bharat / entertainment

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு: உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

author img

By

Published : Jun 23, 2023, 2:27 PM IST

மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரிய மனுவுக்கு உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனம் பதிலளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ‘ஏஞ்சல்’ என்ற படத்தை நான் தயாரித்துள்ளேன். அதில் ஹீரோவாக உதயநிதி நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆனந்தி, பாயல் ராஜ்புத் ஆகியோர் நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் 80 விழுக்காடு முடிவடைந்துவிட்டது.

இந்த படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவு செய்துள்ள நிலையில் மீதமுள்ள 20 விழுக்காடு படப்பிடிப்பில் உதயநிதி நடிக்க முன்வரவில்லை. மாமன்னன் படமே எனது கடைசி படம் என கூறி வருகிறார். மேலும் ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் எமக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படும்” என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனவும் ராமசரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு முன் இன்று (ஜூன் 23) விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனையடுத்து, ஜூன் 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளிவைத்தார்.

முன்னதாக மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய விஷயங்கள் தற்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் மாமன்னன் படத்திற்கு அடிக்கு மேல் அடி விழுந்துகொண்டு இருக்கிறது. அதாவது, மாமன்னன் உருவாவதற்கு தேவர் மகனும் ஒரு காரணம் என கூறியிருந்த மாரி செல்வராஜ், “தேவர் மகன் பார்க்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி, விளைவுகள், அதிர்வுகள், பாசிடிவ், நெகடிவ் என அனைத்து விதமான உணர்வுகள் எல்லாமே இருந்தது.

ஒரு சினிமா, சமூகத்தின் பிரதிபலிப்பினை எப்படி புரட்டி போடுகிறது என ஒரு பக்கமும் மற்றொரு பக்கமாக திரை மொழியாக வேற ஒரு கட்டத்துக்கு எடுத்து செல்கிறது. இந்த மற்றொரு பக்க பிரதிபலிப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவை இரண்டுக்குள்ளும் பின்னிப் பிணைந்து சரியா, தப்பா என்று தெரியாமல் நான் சிக்கித் தவித்தேன்.

தேவர் மகன் ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக், எல்லா இயக்குநர்களும் அதை பார்த்துட்டு படம் எடுப்பார்கள். நானும் அப்படித்தான். ஆனால் தேவர் மகன் எனக்கு ஒரு பெரிய மனப்பிறழ்வை உண்டாக்கிய படம். அந்த கால கட்டங்களில் நடப்பதெல்லாம், ரத்தமும், சதையுமாய் இருந்தது. இந்த படம் சரியா தப்பா என தெரியாம அப்படியொரு வலி இருந்தது. ஆனால், இந்த தேவர் மகன் உலகத்துக்குள்ள பெரிய தேவர் இருக்கிறார், சின்னத்தேவர் இருக்கிறார், எல்லாரும் இருக்காங்க.

இதுக்குள்ள எங்க அப்பா இருந்தா எப்படி இருப்பாரு, அப்படின்னு முடிவு பண்ணி, எங்க அப்பாவுக்காக பண்ணிய படம் தான் மாமன்னன்” என குறிப்பிட்டிருந்தார். அவரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், படத்தின் வெளியீட்டிற்கு தடை விதிக்ககோரி வழக்கும் தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வைரல் பெண் டிரைவர் ஷர்மிளா பணி நீக்கம் - கனிமொழியுடன் சந்தித்த நிலையில் நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.