ETV Bharat / entertainment

லியோ வெற்றி கொண்டாட்டத்திற்கு காவல்துறை அனுமதி! கட்டுப்பாடுகளுடன் அனுமதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 1:15 PM IST

Leo movie success celebration: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாட காவல்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.

Leo movie success celebration
லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு காவல்துறை கட்டுப்பாடுகளுடன் அனுமதி

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி கடந்த அக்.19 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'லியோ'. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் படம் கலவையான விமர்சனத்தையும் பெற்றது.

இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ - லலித் குமார் மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள இப்படம் வசூல் வேட்டையில் கலக்கி வருகிறது.

அதவாது படம் வெளியாகி ஒரே வாரத்தில் சுமார் ரூ.461 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தற்போது வரை வசூலானது 500 கோடியைத் தாண்டியுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்தாத காரணத்தால், லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாடப்படும் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தற்போது லியோ படம் மாஸ் ஹிட் கொடுத்ததைத் தொடர்ந்து, படத்தின் வெற்றி விழா கொண்டாடப்படும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், வரும் நவம்பர் 1 ஆம் தேதி லியோ படத்தின் வெற்றி விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் எனவும், அதில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார் எனவே அதற்காக பாதுகாப்பு வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் கொடுக்கப்பட்டது.

அதற்கு பெரியமேடு காவல் நிலையம் தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு பதில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், "லியோ படத்தின் வெற்றி விழா எத்தனை மணிக்கு துவங்கப்பட்டு, எத்தனை மணிக்கு முடிக்கப்படும். முக்கியப் பிரமுகர்கள் யார்.. யார்? கலந்து கொள்கிறார்கள். மொத்தமாக எத்தனை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அங்கு 5000 இருக்கைகள் மட்டுமே உள்ளது?" என காவல்துறையினர் கட்டுப்பாடுகள் விதித்து கேள்விகளை எழுப்பியது. இதற்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் கொடுக்கப்படும் கடிதத்தின் அடிப்படையில் அவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு லியோ படத்தின் வெற்றி கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் லியோ நவம்பர் 1 ஆம் தேதி படத்தின் வெற்றி கொண்டாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கில் 8 ஆயிரம் நபர்கள் அமரும் வகையில் இட வசதி இருந்தாலுமே, 5 ஆயிரத்து 500 டிக்கெட்கள் மட்டுமே விற்பனை செய்யபட வேண்டும் எனவும், 500 இருக்கைகள் விஐபிகளுக்கு என மொத்தம் 6 ஆயிரம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும், நிகழ்ச்சிக்கு வருபவர்கள் கார்களில் வர வேண்டும், அதற்கான பார்கிங் வசதிகள் அரங்கம் எதிரே அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் இருக்கைகளுக்கு ஏற்றவாறு மட்டுமே ரசிகர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். நிகழ்ச்சி நடத்தும் நிறுவனம் வைப்பு தொகையாக ரூ.10 லட்சம் செலுத்த வேண்டும். ஒரு வேலை அரங்கில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதில் பிடிக்கும் செய்யப்பட்டு மீதத் தொகை திருப்பி வழங்கப்படும். தற்போது முறையான அனுமதி கடிதங்கள் விண்ணப்பித்ததால் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் இருக்கைகள் தவிர்த்து அரங்கில் மையப்பகுதியில் நாற்காலிகள் அமைத்துக் கொள்ளலாம் எனவும், அதிக அளவில் டிக்கெட்கள் விற்பனை செய்யகூடாது எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட பின்னரே காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தயாரிப்பு நிறுவனம் உடன் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து ரசிகர்களுக்காக லியோ பட இசை வெளியீட்டு விழாவிற்கு அதிக அளவில் பாஸ்கள் கேட்கப்பட்டதால் காவல் துறை அனுமதி தரவில்லை. இந்த நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் ரடிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தீபாவளி ரேஸில் களமிறங்கும் நடிகர் ஜெய்... ஆனால் தியேட்டரில் அல்ல!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.