ETV Bharat / entertainment

'கொலைச்சேவல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 1:38 PM IST

kolaiseval movie first look: கலையரசன் நடிக்கும் 'கொலைச்சேவல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார்.

kolaiseval movie first look
'கொலைச்சேவல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: ஆர்பி பிலிம்ஸ், ஆர்.பி பாலா தயாரிப்பில், வி.ஆர் துதிவாணன் இயக்கத்தில் கலையரசன், தீபா பாலு முதன்மை வேடங்களில் நடிக்கும் திரைப்படம் 'கொலைச்சேவல்' (kolaiseval). மேலும் தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சம் கொண்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் நடிகர் கலையரசன். பா‌.ரஞ்சித் இயக்கிய பெரும்பாலான படங்களில் இவரது நடிப்பு வெகுவாக கவரும் வகையில் இருக்கும்.

தனி நாயகனாகவும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் கதை நாயகனாக கலையரசன் நடித்துள்ள படம் கொலைச்சேவல். பரபரப்பு நிறைந்த காதல் கதையாக உருவாகியுள்ள 'கொலைச்சேவல்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டார். ஆர்.பி. பிலிம்ஸ் ஆர் பி பாலா மற்றும் கௌசல்யா பாலா தயாரிக்கும் இரண்டாவது படம்தான் 'கொலைச்சேவல்'.

இப்படத்தின் தலைப்பையும், ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வை போஸ்டரையும் இயக்குநர் பா.ரஞ்சித் இன்று வெளியிட்டார். அறிமுக இயக்குநர் வி.ஆர் துதிவாணன் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தில் கலையரசன் கதைநாயகனாக நடிக்க, யூடியூப் குறும்படங்கள் புகழ் தீபா பாலு நாயகியாக திரையுலகில் அறிமுகம் ஆகிறார்.

பால சரவணனும் அகரன் வெங்கட்டும் முக்கிய பாத்திரங்களில் நடிக்க, மிகவும் வலுவான எதிர்மறை வேடத்தில் இதுவரை குணச்சித்திர பாத்திரங்களில் நடித்த ஆதவன் நடிக்கிறார். மேலும் கஜராஜ் உள்ளிட்ட பல நடிகர்களும் இப்படத்தில் உள்ளனர்.

'கொலைச்சேவல்' குறித்து பேசிய தயாரிப்பாளர் ஆர்.பி பாலா, "இது ஒரு மிகவும் அழகான காதல் கதை. அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. அதே சமயம் சமுதாயத்திற்கு தேவையான மிக முக்கியமான கருத்து ஒன்றையும் இப்படம் சொல்லும். குறிப்பாக திரைப்படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக, இதுவரை கண்டிராத வகையில் இருக்கும்.

திறமை வாய்ந்த இளைஞரான துதிவாணனை இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. கலையரசனுக்கு ஒரு திருப்புமுனையாக இந்த திரைப்படம் அமையும். படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மேலும் 'கொலைச்சேவல்' மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்" என்று தெரிவித்தார்.

'கொலைச்சேவல்' திரைப்படத்திற்கு பி.ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய, சாந்தன் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பிற்கு அஜய் மனோஜும், கலை இயக்கத்திற்கு சரவண அபிநாமனும், சண்டை பயிற்சிக்கு டேஞ்சர் மணியும் பொறுப்பேற்றுள்ளனர். விரைவில் இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நடிகர் சித்தார்த்தை சூழ்ந்த கன்னட அமைப்பினர்.. நடந்தது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.