ETV Bharat / entertainment

விஷாலின் காயம் குறித்து கேட்டறிந்த விஜய்!

author img

By

Published : Jul 25, 2022, 3:55 PM IST

நடிகர் விஷால் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் ‘லத்தி’ திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று(ஜூலை 24) சென்னையில் நடைபெற்றது.

விஷால் காயம் குறித்து கேட்டறிந்த விஜய்..!
விஷால் காயம் குறித்து கேட்டறிந்த விஜய்..!

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ’லத்தி’ திரைப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று(ஜூலை 25) நடைபெற்றது. இப்படத்தை அறிமுக இயக்குநர் எச்.வினோத்குமார் இயக்கி உள்ளார். இது விஷாலின் முதல் 'பான் இந்தியா' படம்.

இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால், திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டப்பலர் கலந்து கொண்டனர். ’லத்தி’ திரைப்படத்தின் தமிழ் டீஸரை உதயநிதி ஸ்டாலின், தெலுங்கு டீஸரை எஸ்.ஜே.சூர்யா, கன்னட டீஸரை நாசர், ஹிந்தி டீஸரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால், “என்னுடைய இயக்கத்தில் உருவாகும் படத்திற்கு யுவன் இசையமைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவருடைய அப்பா இளையராஜா என்னுடைய ’துப்பறிவாளன் - 2’ படத்திற்கு இசையமைத்துள்ளார். இதைவிட பெரிய பாக்கியம் வேறென்ன வேண்டும்” எனப் பேசினார்.

'விஷாலும் நானும் கிளாஸ்மேட்ஸ்': இதைத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், “நானும் விஷாலும் சேர்ந்து ஒரு படம் பண்ண வேண்டியது. ஆனால், நல்ல கதை அமையவில்லை. நானும் விஷாலும் சேர்ந்து பள்ளிக்குச்சென்றோம். நானும் விஷாலும் சேர்ந்து கல்லூரிக்குச்சென்றோம். அவ்வளவு தான் சொல்ல முடியும்.

’லத்தி’ படத்தின் படப்பிடிப்பில் நிறைய அடிபட்டதாகச்சொன்னார்கள். எங்களுடைய பால்ய கால பொதுநண்பனிடம் ஏன் விஷால் இப்படி பண்றான் என்று கேட்பேன். நானும் ஒரு போலீஸ் படம் பண்ணேன். ‘நெஞ்சுக்கு நீதி’, அதில் ஒரு சண்டை, பாடல் காட்சி கூட இருக்காது. அப்படித்தான் நான் படத்தைத்தேர்வு செய்வேன்’ என்றார்.

இதனையடுத்துப்பேசிய விஷால், 'நடிகர் சங்க கட்டடத்தில் கலைஞர் மற்றும் ஸ்டாலின் பெயர் இடம்பெற வேண்டும் என ஆசை. அது விரைவில் நடைபெற உள்ளது' என்றார்.

அப்போது இடைமறித்த உதயநிதி, 'அந்த நடிகர் சங்க கட்டடத்தை சீக்கிரம் கட்டி முடிங்க. அப்போ தான் இவன் கல்யாணம் பண்ணுவான்னு சொல்லி இருக்கான்” என விஷாலை கலாய்த்தார்.

அதற்கு, “உதயநிதி உடன் இணைந்து படம் பண்ணாமல் இருக்க காரணம் வேறு. எனக்கு நட்பு முக்கியம். விரைவில் உதயநிதி உடன் ஒரு படம் பண்ணுவேன்" என்று விஷால் பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “விஷால் மனதளவில் மிகவும் நல்லவர். ’மார்க் ஆண்டனி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும். அந்தப்படத்தில் அவருடைய உழைப்பை நான் பார்த்துள்ளேன்” எனப் பேசினார்.

விஷாலே ஒரு ஆயுதம் தான்: நடிகர் நாசர் பேசுகையில், “ விஷாலே ஒரு ஆயுதம் தான். அந்த ஆயுதத்துடன் தான் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். மலேசியாவில் மீண்டும் நிகழ்ச்சி நடந்தால், அது நம்மால் தான் முடியும் என்று சொன்னார்கள். அதை நடத்திக்காட்டினார்கள்” என்றார்.

மேலும் பேசிய சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன், “எதிர்காலத்தில் நான் படம் இயக்கினால் விஷால் மாதிரி நல்ல மனிதரை வைத்து தான் படம் இயக்குவேன். தனிப்பட்ட முறையில் எனக்குப் போலீஸ் பிடிக்கும். படப்பிடிப்பில் 100 நாட்களுக்கும் மேல் விஷால் கஷ்டப்பட்டுள்ளார். ஆனால், அவர் எதையும் வெளியில் சொல்லாமல் சிரித்துக்கொண்டு உள்ளார். நான் அனைத்தையும் பார்த்துள்ளேன்.

என்னுடைய 27 ஆண்டுகால பணி அனுபவத்தில் நிறைய நல்ல படங்களைப்பண்ண ஆசைப்பட்டேன். விஷாலோடு படம் பண்ண ஆசைப்பட்டேன். அதனை ராணா, தயாரிப்பாளர்கள் நிறைவேற்றினர். ரித்திக் ரோஷனை நான் பார்த்துள்ளேன். என்ன சொன்னாலும் அவர் செய்வார். விஷால் கயிறு இல்லாமல் சண்டை காட்சிகள் நடித்ததோடு பாதுகாப்பிற்கு போடப்பட்ட கயிறும் வேண்டாம்” என்றார்.

நடிகை சுனைனா பேசுகையில், “ ’லத்தி’ படத்தின் டீஸர் வெளியீட்டு விழாவுக்கு விமானத்தில் வரும்போது எனக்கு அருகில் நடிகர் விஜய் இருந்தார். ’தெறி’ படத்திற்குப் பிறகு சந்திப்பதால் நிறைய விஷயங்கள் பேசினோம். நான் கண்டிப்பாக ’லத்தி’ டீஸர் வீடியோவை யூ-டியூப்பில் பார்ப்பேன் என்று விஜய் சொன்னார். விஷாலின் காயம் எப்படி இருக்கிறது என்று விஜய் கேட்டார்” எனப் பேசினார்.

மேலும் நடிகர் விஷால், “இந்தப் படத்தில் நான் ஒரு ஸ்டன்ட் மேனாக நினைத்து தான் இந்தப் படத்தில் நடித்தேன். நான் ஹீரோவாக நினைத்து நடிக்கவில்லை. இந்தப்படம் கண்டிப்பாக விஷுவல் கொண்டாட்டமாக இருக்கும்.

என்னுடைய அம்மா, அப்பாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: கத்ரீனா கைஃப், விக்கி கவுஷலுக்குக் கொலை மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.