ETV Bharat / entertainment

''கார்கி' படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த சூர்யாவுக்கு நன்றி' - சாய் பல்லவி!

author img

By

Published : Jul 23, 2022, 4:00 PM IST

''கார்கி' படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த சூர்யா சாருக்கு நன்றி' - சாய் பல்லவி!
''கார்கி' படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த சூர்யா சாருக்கு நன்றி' - சாய் பல்லவி!

இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கார்கி’ திரைப்படத்தின் வெற்றி விழா இன்று(ஜூலை 23) நடைபெற்றது.

பிளாக்கி ஜெனி & மை லிஃப்ட் புட் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெருமையுடன் வழங்கிய திரைப்படம் 'கார்கி'. இயக்குநர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சாய் பல்லவி, ஆர்.எஸ்.சிவாஜி, சரவணன், காளி வெங்கட், இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குனர் கவுதம் ரவிச்சந்திரன் பேசும்போது, “’கார்கி’ படத்தின் பத்திரிகையாளர் காட்சியில் அனைவரும் ஆதரவு கொடுத்தது தான் இப்படத்தின் வெற்றிக்கு வைத்த முதல் புள்ளி. இடைவேளையிலேயே நேர்மறையான விமர்சனங்கள் வந்தது.

இதுபோன்று மற்றொரு வெற்றி மேடையில் சந்திப்போம். மிர்ச்சி செந்தில் இப்படத்திற்கு கொடுத்த ஒத்துழைப்பு மிகப் பெரியது. ஆனால், அவருடைய பகுதியை விரைவில் வெளியிடுவோம்” என்றார்.

நடிகை சாய் பல்லவி பேசும்போது, ”பத்திரிகையாளர் காட்சியை பார்த்து விட்டு படத்தை பற்றி மட்டுமல்லாமல், நடிகர்கள், வசனம், தொழில்நுட்பம் என்று அனைத்து பணிகள் குறித்து பாராட்டி எழுதியதற்கு மிக்க நன்றி.

மக்களிடம் கொண்டு சென்ற சூர்யாவுக்கு சிறப்பு நன்றி. இப்படத்தை சூர்யா வரைக்கும் கொண்டு சென்ற தயாரிப்பாளர் சக்திக்கு நன்றி. நான் திரையரங்கிற்கு சென்று மக்களோடு படம் பார்த்தேன். அவர்கள் பாராட்டுவதை விட உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்கள். அதைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

நடிகர் காளி வெங்கட் பேசுகையில், “பெரிய படங்களுக்குத் தான் இடைவேளையில் இருந்தே விமர்சனம் ஆரம்பித்து விடும். அந்த வரிசையில் ’கார்கி’ படம் இருப்பதில் மகிழ்ச்சி. தத்து பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுத்தது போல, பத்திரிகையாளர்கள் இப்படத்திற்கு விமர்சனம் எழுதியிருக்கிறார்கள். இப்படத்தில் ஒரு வசனம் பேச கிட்டத்தட்ட 9 டேக் போனது.

ஒரு கலைஞர் தனது கதாபாத்திரத்தை எந்தளவுக்கு உள்வாங்கியிருந்தால் சாய் பல்லவி வசனம் இல்லாமல் உடல் மொழியிலேயே கூறி இருப்பார். அப்பாவை பார்க்க முடியாமல் நடந்து வரும் காட்சியில் அருமையாக நடித்திருப்பார். குறுகிய காலத்தில் இப்படம் அனைவரையும் சென்று சேர்ந்திருக்கிறது. எனக்கு ’கார்கி’ மிகவும் முக்கியமான படம்” என்றார்.

அடுத்ததாக நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, “’கார்கி’ ஒரு வித்தியாசமான படம் என்று நான் சொல்லத் தேவையில்லை. இயக்குனர் கவுதமுக்கு இருந்த தைரியத்தைப் பாராட்ட வேண்டும். கதையை கூறியதும் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன். உடனே நாளைக்கே படப்பிடிப்பு வந்து விடுங்கள் என்றார்.

இரண்டாம் நாள் படப்பிடிப்பில் ஏன் கவுதம் இப்படி அநியாயம் செய்கிறீர்கள். எனக்கு முழுதாக கதையே தெரியாது. ஆனால், இரண்டாவது நாளே எப்படி கிளைமாக்ஸ் காட்சியில் நடிக்க முடியும் என்று கேட்டேன். நான் சொல்லித் தருகிறேன் என்றார்.

சாய் பல்லவியுடன் நடித்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. நான் தற்போது அழகான நடிகைகளுக்கு அப்பாவாக நடித்து வருகிறேன். முதலில் நயன்தாராவிற்கு அப்பாவாக நடித்தேன். இப்போது சாய்பல்லவிக்கு அப்பாவாக நடித்திருக்கிறேன். காளி வெங்கட் யார் என்பது அவர் நடிப்பில் உணர்த்தி விடுவார். அவர் நடிகர் அல்ல நட்சத்திரம்” என்றார்.

நடிகை திருநங்கை சுதா பேசுகையில், “இந்த நேரத்தில் இயக்குனருக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். இந்த கதாபாத்திரத்திற்கு ஏன் திருநங்கையை தேர்ந்தெடுத்திருக்கிறார்? என்று யோசித்தேன். இப்படம் பார்த்த பிறகு எனது தோழிகள் பாராட்டினார்கள்.

என்னுடன் நெருங்கிய உறவினர்கள் மட்டும் தான் பேசுவார்கள். ஆனால், இப்படம் வெளியான பிறகு கேரளாவில் இருக்கும் தூரத்து உறவினர்களும் என்னைத் தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். காளிவெங்கட் மாதிரி மனிதரை இனிமேல் பார்க்க முடியுமா? என்று தெரியவில்லை. எல்லோரும் சாப்பிட்டார்களா? என்று பார்த்துவிட்டு தான் அவர் சாப்பிடுவார். ஆகையால், தான் அவர் நாயகன் ஆகியிருக்கிறார்” என்றார்.

நடிகர் மிர்ச்சி செந்தில் பேசுகையில், “தமிழ் சினிமாவை அசத்திய படம் ’கார்கி’. திரையரங்குகளில் வெளியாகும் முன்பு இப்படத்தை பார்க்கும்படி இயக்குனர் அழைத்தார். எனக்கு மட்டும் பிரத்யேக காட்சியைக் காண்பித்தார்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படத்தை காட்டினீர்கள்? என்று கேட்டேன்.

அப்போது இயக்குனர் நீங்கள் நடித்த காட்சி இப்படத்தில் துண்டாக இருக்கிறது, உங்களிடம் இப்படத்தை காட்டிவிட்டு பிறகு நீக்கி விடலாம் என்று இருக்கிறோம் என்றார். ஒரே ஒரு காட்சியில் நடித்த எனக்கு இவ்வளவு மதிப்பு கொடுத்து என்னிடம் உத்தரவு கேட்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது. அவர் கூறியது போலவே நான் நடித்த காட்சி இப்படத்திற்கு தேவையில்லை என்று தோன்றியது. ஆகையால், நீங்கள் நீக்கிவிடுங்கள் என்று மனதாரக் கூறினேன்.

’சூரரைப் போற்று’ படத்தில் நான் டிரைலரில் மட்டும் தோன்றுவேன். இப்படத்திற்கு தற்போது 5 தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. அதேபோல் இப்படத்திற்கும் தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

இதையும் படிங்க: 'தேசிய விருது நல்ல திரைப்படங்களில் நடிக்க ஊக்கமளிக்கிறது' - நடிகர் சூர்யா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.