ETV Bharat / entertainment

பிரதாப் போத்தன் என்னும் வித்தியாச கலைஞன்!

author img

By

Published : Jul 15, 2022, 3:59 PM IST

தமிழ்சினிமாவில் ஓர் முக்கிய கலைஞனாகத் திகழ்ந்து, மறைந்த நடிகர் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தன் பற்றிய ஓர் சிறப்பு பார்வை.

பிரதாப் போத்தன் என்னும் வித்தியாச கலைஞன்!
பிரதாப் போத்தன் என்னும் வித்தியாச கலைஞன்!

1952ம் ஆண்டு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த பிரதாப் போத்தன் சிறு வயதிலேயே தமிழ்நாட்டில் செட்டில் ஆனவர். பள்ளிப்பருவத்தை ஊட்டியில் முடித்தவர். சென்னையில் கல்லூரிப்படிப்பை முடித்தார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த அவர் கல்லூரி படிக்கும் போது நிறைய மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.

முதன்முதலில் மலையாள படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாலுமகேந்திரா இயக்கிய அழியாத கோலங்கள் படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார். பின்னர் வறுமையின் நிறம் சிவப்பு, பன்னீர் புஷ்பங்கள், மூடுபனி உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டு இந்திய சினிமாவின் தன்னிகரற்ற திரை பிரபலமாக வலம் வந்தவர் பிரதாப் போத்தன். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.

சிறந்த நடிகருக்கான பிலிம்ஃபேர் விருது, சிறந்த அறிமுக இயக்குநர் படத்திற்கான இந்திரா காந்தி விருது, கேரள மாநில திரைப்பட விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் பிரதாப் போத்தன். சினிமா மேல் அவருக்கு ஈர்ப்பு வர காரணம், அவரது அண்ணன் தயாரிப்பாளர் ஹரி தான் என்று சொல்லுவார்கள். பிரதாப் போத்தன், அமலா சத்யநாத் என்பவரை 1990ல் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் கெயா போத்தன் என்ற ஒரு மகள் உள்ளார்.

பிரதாப் போத்தன் இயக்கத்தில் கமல்ஹாசன், பிரபு, அமலா, குஷ்பூ போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த படம் வெற்றி விழா. ஆக்ஷன் த்ரில்லர் கலந்த இந்தப் படம் இன்றும் ரசிகர்களுக்கு பார்க்கத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. இந்தப் படம் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது.

நெப்போலியன், சரண்யா நடிப்பில் 1994-ல் வெளிவந்தது ’சீவலப்பேரி பாண்டி’. இந்தப் படம் கிட்டத்தட்ட 175 நாட்களுக்கு மேல் ஓடியது. இந்தப் படத்தின் கதாபாத்திரம் நெப்போலியனுக்கு சினிமாவில் திரும்பிப் பார்க்கக் கூடிய கதாபாத்திரமாகவே அமைந்தது. ’சீவலப்பேரி பாண்டியன்’ வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கதை நகரும், ஆதித்யனின் இசை இப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது.

ஆனால் சத்யராஜை வைத்து இவர் இயக்கிய ’ஜீவா’, ‘மகுடம்’ ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவியது. கார்த்தியை வைத்து இயக்கிய ’லக்கிமேன்’ படமும் வியாபார ரீதியாக தோல்வியடைந்தது. ’மைடியர் மார்த்தாண்டன்’ என்ற படத்தை ஃபேண்டஸி வகையில் எடுத்தார்.

'மூடுபனி' படத்தில் சைக்கோத்தனமான கதாபாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். அப்படத்தில் வந்த 'என் இனிய பொன்நிலாவே..!' பாடல் இன்றுவரை ரசிகர்களின் ஃபேவரைட்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் பிரதாப் போத்தன் இன்று(ஜூலை 15) காலை திடீரென காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவரது மறைவுக்கு ரசிகர்கள், நடிகர்கள், இயக்குநர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ’மாவீரன்’னாக நடிக்கும் சிவகார்த்திகேயன்!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.