ETV Bharat / entertainment

"இளைஞர்கள் சினிமாவில் நேரத்தை வீணடிக்காதீர்கள்" - ஆர்.ஜே.பாலாஜியின் நோக்கம் என்ன?

author img

By

Published : Jan 26, 2023, 7:42 PM IST

Actor
Actor

இளைஞர்கள் சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வருத்தமளிப்பதாகவும், படத்தின் வசூல் குறித்து இளைஞர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்தார். இதுபோன்ற நடவடிக்கைகளால் இளைஞர்களின் ஆற்றல் வீணாகிறது என்றும் தெரிவித்தார்.

சென்னை: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்களின் படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடும் போக்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. நட்சத்திரங்கள் மாறினாலும் இந்த ட்ரெண்ட் எப்போதும் மாறவில்லை. ஒரு நடிகருக்கு மற்றொரு நடிகர் போட்டி என்ற கோணத்தில், ரசிகர்களும் பிரிந்து நின்று சண்டைப் போட்டுக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது.

சான்றாக, தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களாக திகழும் விஜய் மற்றும் அஜித் குமாரை சொல்லலாம். இவர்களது படங்கள் வெளியாகும்போதெல்லாம் இருவரது ரசிகர் கூட்டம் சண்டையிடுவது தவிர்க்க முடியாத ஒன்று. படம் குறித்த அறிவிப்பு வெளியாவது முதலே சமூக வலைதளங்களில் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசுவது, வெறுப்புப் பிரசாரம் செய்வது என தெறிக்கவிடுவார்கள்.

படம் வெளியாகும்போது திரையரங்குகளிலும் சம்பவம் செய்வார்கள். கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது, கேக் வெட்டுவது, அடிதடி போன்றவை இந்த கொண்டாட்டங்களில் கட்டாயம் இருக்கும். படத்தின் வசூலை வைத்தும், எந்த நடிகர் பெரியவர்? என்று அடித்துக் கொள்வார்கள். ரசிகர்களின் இந்த போக்கை சம்மந்தப்பட்ட நடிகர்களும் விரும்புவதில்லை. திரைப்படங்களுக்காக, நடிகர்களுக்காக ரசிகர்கள் அடித்துக் கொள்வதை தற்போது திரையுலகினரும் விமர்சித்து வருகின்றனர்.

ரோகிணி தியேட்டரில் துணிவு கொண்டாட்டம்
ரோகிணி தியேட்டரில் துணிவு கொண்டாட்டம்

அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தமிழ் சினிமா ரசிகர்களின் போக்கு குறித்து கவலை தெரிவித்திருந்தார். ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள "ரன் பேபி ரன்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, இளைஞர்கள் சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது வருத்தமளிப்பதாக தெரிவித்திருந்தார். அவர் பேசும்போது, "இப்போது, படத்தின் வசூல் பற்றி இளைஞர்கள் அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவில் எவ்வளவு வசூல், ஐரோப்பாவில் இவ்வளவு வசூல் என்று பேசி அவர்களின் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குகிறார்கள்.

கோடிகளை செலவழித்து படம் தயாரிப்பவர்கள் இதுபற்றி கவலைப்பட்டுக் கொள்வார்கள். இதற்கு இளைஞர்கள் கவலைப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தற்போது பல நாடுகளில் வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில் இளைஞர்களின் ஆற்றல் முக்கியம். அந்தச் சக்தியை, திரைப்படங்களின் வசூல் உள்ளிட்டவற்றுக்காக இழக்க வேண்டாம்" என்று கூறினார்.

ஆர்.ஜே.பாலாஜி இவ்வாறு பேசக் காரணம் இந்த பொங்கலுக்கு வெளியான "வாரிசு" மற்றும் "துணிவு" திரைப்படங்கள்தான். இரண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானது. அப்போது வழக்கம்போல் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் பல இடங்களில் மோதலில் ஈடுபட்டனர். சென்னை ரோகிணி திரையரங்கில் துணிவு படம் ‌பார்க்கச் சென்ற இளைஞர் ஒருவர், லாரியில் ஏறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.

வாரிசு, துணிவு கொண்டாட்டம்
வாரிசு, துணிவு கொண்டாட்டம்

அதேபோல் ரோகிணி திரையரங்கில் நடந்த துணிவு, வாரிசு வெளியீட்டின்போது, அஜித் படத்தின்‌ பேனர்களை விஜய் ரசிகர்களும் விஜய் படத்தின் பேனர்களை அஜித் ரசிகர்களும் கிழித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர். டிக்கெட் எடுக்காமல் வந்த ரசிகர்களும் உள்ளே நுழைய முயன்றதால், திரையரங்கு வாயிலில் உள்ள கண்ணாடி உடைந்து சிதறியது‌. போலீசார் வந்து கட்டுப்படுத்திய பின்னரே திரைப்படம் போடப்பட்டது.

இதுபோன்ற கண்மூடித்தனமாக ஒரு நடிகரையோ, சினிமாவையோ இளைஞர்கள் கொண்டாடுவதைத்தான் ஆர்.ஜே.பாலாஜி சுட்டிக்காட்டினார். இளைஞர்களின் இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது மற்றும் தேவையற்றது என்று எடுத்துரைத்தார்.

நமது வேலையை விட்டுவிட்டு இதுபோன்ற கொண்டாட்டங்களில் முழு மூச்சாக இருப்பதை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். ஒரு படம் நல்ல அனுபவத்தையும், ரசனையையும் தருகிறதா? என்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். நமது வேலையை அல்லது வாழ்க்கையினை கெடுத்துக் கொள்ளும் அளவுக்கு படங்களை கொண்டாடுவது நம் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும்.

ஒரு படத்தின் வசூலால் நடிகர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்குப் பயன் கிடைக்கும், ரசிகர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களுக்கான வேலை வாய்ப்புகள் குறைந்துவரும் இந்தச் சூழ்நிலையில், இளைஞர்கள் சினிமாவை மட்டுமே பெரியதாக நினைத்து தங்களது நேரம், அறிவை வீணடித்து வருவது வருந்தத்தக்கதாக இருக்கிறது என்று ஆர்.ஜே.பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: Thalapathy 67 Update: லோகேஷ் போட்டிருக்கும் அல்டிமேட் பிளான்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.