ETV Bharat / entertainment

"குரைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை"... ரஜினியின் குட்டிக் கதை யாருக்கு?

author img

By

Published : Jul 29, 2023, 9:34 PM IST

குரைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை, ஆகமொத்தத்தில் இந்த ரெண்டும் சொல்லாத ஊருமில்லை என ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினி காந்த் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Rajini
Rajini

சென்னை : நடிகர் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்து உள்ளார். இந்த படத்தில் தமன்னா, மோகன் லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட திரைப் பட்டாளங்கள் நடித்து உள்ளனர்.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா : ஆகஸ்ட் 10 ம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள், லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, "உங்களுடைய திரைப்படங்களில் ரசிகர்களுக்காக பாட்டு வைத்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அவர்களை உற்சாகப்படுத்த இந்த திரைப்படத்தில் ஹூக் ஹூம் என்று ஒரு பாடல் வைத்துள்ளோம் என்று அனிருத் என்னிடம் கூறிவிட்டு, கவிஞர் சூப்பர் சுப்பு எழுதிய பாடலை என்னிடம் காட்டினார்.

பாட்டு தாறுமாறாக இருந்தது. வெவ்வேறு வார்த்தைகள் பயன்படுத்தி இருந்தார்கள். அதனை எல்லாம் எடுக்க சொல்லி விட்டேன் அதேபோல்இந்த சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை எல்லாம் வேண்டாம் என்றேன். ரசிகர்களுக்கானது இருக்கட்டும் என்று கூறி விட்டார்கள். இந்த சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தையை எனக்கு எப்போதும் தொல்லை தான்.

சூப்பர் ஸ்டார் பதவி வேண்டாம் : 1977ல் எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த போது, சார் எனக்கு வேண்டாம் என்றேன். உடனே, சிலர் ரஜினி பயந்துட்டாரு என்று சொன்னார்கள். நான் பயப்படுவது இரண்டே இரண்டு பேருக்கு தான். ஒருவர் கடவுள், இரண்டாவது நல்ல மனிதர்கள். அப்போது இருந்த காலக்கட்டத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஹீரோவாக நடித்துக் கொண்டு இருந்தார்.

நடிகர் கமல் உச்சத்தில் இருந்தார். இதனால் வேண்டாம் என்றேன். ஏனென்றால் அவர்கள் மீது இருந்த மரியாதை.. திரையுலகில் எல்லோருக்கும் விருப்பு, வெறுப்பு உண்டு. ஆனால், திரையுலகில் எனக்கு இருந்த வெறுப்பு சுனாமி போன்றது. இப்பொழுது இருக்கும் 2k கிட்ஸ்களுக்கு இதெல்லாம் தெரியுது என்றார்.

வெறுப்பில் உருவான நெருப்பு நான் : ஏனென்றால், தற்போது இருப்பது போல் சோஷியல் மீடியா அப்போது இல்லை. அதனால், இதெல்லாம் வெளியே தெரியாமல் போனது. அந்த வெறுப்பில் இருந்து உருவான நெருப்பில் உருவான செடி நான். இந்த செடியை காப்பாற்றியது கடவுள். என்னுடைய உழைப்பு. இதனால் சம்பாதித்த ரசிகர்கள்.

நான் ஸ்டைலாக நடிக்க தொடங்கிய போது தாய் குலம் தியேட்டருக்கு வந்திருச்சுன்னு சொன்னா, யானை வந்து கரும்பு தோட்டத்தில் புகுந்தது மாதிரி அவ்வளவு தான். எல்லாத்துறையில் வெறுப்பு இருப்பது போன்று திரைத்துறையில் நான் வெறுப்பு, நெருப்பில் வளர்ந்து வந்தவன் அந்த நெருப்பு எனக்குள் இன்னும் ஆறவில்லை.

பருந்துக்கு போட்டி காகா : விலங்குகளில் மிகவும் குறும்பு பிடித்தது குரங்கு, அதுபோல் பறவைகளில் காக்கா. பருந்து உயர பறந்துக்கொண்டிருக்கும். காக்கா ஒரு இடத்தில் இருக்காது. அங்கும் இங்கும் தாவிக் கொண்டிருக்கும். சின்ன சின்ன பறவையான புறா, குருவி ஆகியவற்றை கொத்தும். பின்பு பருந்தை பார்த்து விட்டு காக்கா தனது றெக்கையை படபடவென அடித்து மேலே பறந்து உயரத்திற்கு செல்லும்.

ஆனால், உயர பறந்து கொண்டிருக்கும் பருந்து தனது சிறகை அடிக்காமல் மிதந்து கொண்டிருக்கும். காக்கா மேலே போய் பருந்தை கொத்தும். ஆனால் பருந்து காகத்தை ஒன்றும் செய்யாது. இன்னும் கொஞ்சம் உயர பறந்து விடும். ஆனால், காக்காவும் பருந்து உயரத்திற்கு பறக்க ஆசைப்பட்டு மேலே போக பார்க்கும் முடியாமல் கீழே விழுந்து விடும்.

குரைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை.. : எனவே, நம்மை யாராவது எதிர்த்தால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் உழைத்து முன்னேறி போய் கொண்டே இருக்க வேண்டும். உடனே சமூக ஊடகங்களில் ரஜினிகாந்த் அவரை காகமாக சொன்னார், இவரை பருந்தாக சொன்னார் என்று ஏதாவது எழுதுவார்கள். "குரைக்காத நாயுமில்லை, குறை சொல்லாத வாயுமில்லை, ஆகமொத்தத்தில் இந்த ரெண்டும் சொல்லாத ஊருமில்லை”.

எனவே, நாம் நம்முடைய வேலையை பார்த்துக் கொண்டு போயிக்கிட்டே இருப்போம். முன்பெல்லாம் தென்னிந்திய படங்கள் என்றால் தமிழ் தான். ஆனால் தற்போது அப்படி இல்லை காலம் மாறிவிட்டது. தற்போது கன்னடம் மற்றும் தெலுங்கு படங்கள் இந்தியா முழுக்க தெரிகிறது. தமிழ் திரையுலகில், நிறைய படங்கள் வந்தாலும் பெரிய ஹீரோக்கள் படங்கள் ஓடினால் தான் தியேட்டர்காரர்கள் பணம் சம்பாதிக்க முடியும்.

நல்ல படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும் : தியேட்டருக்கு கூட்டம் வருகிறது. சிறிய படங்களுக்கு தியேட்டரில் கூட்டம் வருவதில்லை். இதனால், தியேட்டருக்கு இழப்பு ஏற்படுகிறது. எனவேஓடிடியில் வந்து விடுகிறது. அந்த ஹீரோ படம், இந்த ஹீரோ படம் என்று பார்க்காமல் நல்ல திரைப்படங்களை தியேட்டருக்கு சென்று பாருங்கள். அப்போது தான் திரையுலம் நன்றாக இருக்கும்" என்று ரஜினிகாந்த் கூறினார்.

இதையும் படிங்க : "கோலிவுட் படங்களில் தமிழர்களுக்கு மட்டுமே இடம்?" - பெப்சி விளக்கம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.