ETV Bharat / entertainment

வாங்க மறுக்கும் ஓடிடி நிறுவனங்கள்.. சிறிய பட்ஜெட் படங்களுக்கு தொடரும் சாபம்.. ரசிகர்களின் மனநிலை மாறக் காரணம் என்ன?

author img

By

Published : Mar 29, 2023, 11:22 AM IST

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் தொழில் நுட்பம் காரணமாகவும், எதிர்மறையான விமர்சனங்கள் காரணமாகவும் தொடர்ந்து சிறிய படங்களின் மீதான ரசிகர்களின் கண்ணோட்டம் மாறி வருகிறது. இதற்கான காரணம் குறித்து விளக்குகிறார் N4 படத்தின் இயக்குனர் லோகேஷ் குமார்.

tamil cinema
தொடரும் சிறிய படங்களுக்கு சாபம்

சென்னை: சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமே அல்ல, சமூக முன்னேற்றத்திற்கானது என்று கூறி வந்தாலும். சினிமா தொடங்கிய காலத்திலிருந்து பொழுதுபோக்கு மட்டுமே முக்கிய பிரதானமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. ஆரம்பக் காலத்தில் தியாகராஜ பாகவதர் படங்களை எடுத்துக் கொண்டால் வெறும் பாடல்களாலேயே படம் நிறைந்து இருக்கும். அதில் எந்த வித சமூக சிந்தனையுள்ள கருத்துகள் இருந்ததாக யாருக்கும் தெரியவில்லை. அதில் பொழுதுபோக்கு மட்டுமே முன்னிலையிலிருந்தது.

அதன் பிறகு வந்தவர்களால் சினிமா என்பது சமூக மாற்றத்திற்கான கருவியாகப் பார்க்கப்பட்டது. பலரால் சமூக சிந்தனை‌யுள்ள படங்கள் எடுக்கப்பட்டு வந்தன. அது மக்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சினிமா என்றால் கவலையை மறக்க மட்டுமல்ல, கொண்டாட்டத்திற்கு மட்டுமல்ல தங்களது கருத்துக்களை மக்களிடையே கொண்டு சென்று புரட்சியை ஏற்படுத்த மிக முக்கிய கருவி என மாறியது. ஆனால் காலம் செல்ல செல்ல மீண்டும் பொழுதுபோக்கு மட்டுமே பிரதானமானது.

அதேபோன்று‌ சினிமாவின் முகமும் மாறிவிட்டது. முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் பெரு நகரங்களில் பல மாதங்கள் ஓடி வெற்றி பெறும் அதன் பிறகுக் கிராமங்களில் திரையிடப்பட்டு அங்கும் ஆண்டுக்கணக்கில் ஓடும். மக்களும் குடும்பம் குடும்பமாகச் சென்று படங்களைப் பார்த்து மகிழ்ந்தனர். கொட்டகை தொடங்கி தியேட்டர் வரை ஒரே திருவிழா போன்று கோலாகலமாக இருக்கும். ஆனால் கால மாற்றத்தில் எல்லாம் மாறிப்போனது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகரித்தன. வருடக்கணக்கில் ஓடிய படங்களின் ஆயுள் தற்போது மூன்று நாட்களில் வந்து நிற்கிறது.

வெள்ளிக்கிழமை வெளியாகி சனி, ஞாயிறை கடந்து விட்டால் தற்போது அவை தான் வெற்றிப்படங்கள் என்ற நிலை வந்துவிட்டது. முன்பெல்லாம் வெற்றிகரமான 50-வது நாள், 100-வது நாள், 150-வது நாள் என்றெல்லாம் விளம்பரம் வெளியிட்டு விழா நடத்துவார்கள். இன்றோ வெள்ளிக்கிழமை மதியமே படம் வெற்றி பெற்றது என கேக் வெட்டும் நிலை உருவாகி விட்டது. அதை விட இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே இதுவரை காணாத ஒரு கொடுமை வெற்றிகரமாக இரண்டாவது நாள் என்று போஸ்டர் அடிக்கும் நிலை வந்துவிட்டது.

கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்துவிட்டது. அதன்பின் மக்களின் மனநிலையும் மாறிவிட்டது. திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்று அவர்களின் மனநிலையும் மாறிவிட்டது. இதனால் சிறிய படங்கள் மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. வெள்ளிக்கிழமை வெளியாகும் ஒரு சிறிய படம் நல்ல விமர்சனம், படம் பார்த்தவர்களின் வாய்வழி கருத்துக்களைக் கடந்து திரையரங்குகளில் குறைந்தது ஒரு வாரமாவது ஓடுவது என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

எப்படியும் அடுத்த மாதம் ஓடிடியில் வந்துவிடும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மக்களின் மனநிலை பல நல்ல சிறிய படங்களை வெற்றி பெறாமல் செய்து விட்டதை சமீபத்திய நிகழ்வுகளில் நாம் கண்கூடாகப் பார்த்துள்ளோம். உதாரணமாக இந்த மாதம் தொடக்கத்தில் வெளியான பல சிறிய படங்களை எடுத்துக்கொள்வோம். அயோத்தி, கொன்றால் பாவம், குடிமகான், என் 4 இந்த திரைப்படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்கள். ஆனால் திரையரங்குகளில் பார்க்க யாருமே வரவில்லை.

இதனால் நல்ல படம் என்ற பெயருடன் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தைக் கொடுத்த படங்களாக மாறிவிட்டன. இதுவே பெரிய நடிகர்களின் படங்கள் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க அடித்துப் பிடித்து ரசிகர்கள் கூட்டம் காத்துக் கொண்டுள்ளனர். சமீபத்தில் உயிர்ப் பலி கூட ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம்?. அதே படத்தை ஒரு மாதம் கழித்து ஓடிடியில் பார்க்கலாம் என்று யாரும் நினைப்பதில்லை. மாறி வரும் பொருளாதார சூழலில் ஒரு குடும்பம் திரையரங்கு சென்று படம் பார்த்தால் ஆயிரக்கணக்கில் பணம் செலவாகிறது அதனால் ஓடிடியில் பார்ப்பதாகச் சொல்கின்றனர்.

முன்பெல்லாம் பண்டிகை காலங்களில் பத்து முதல் பதினைந்து படங்கள் வெளியாகும், அதில் பத்து படங்கள் வெற்றி பெற்று நூறு நாட்கள் ஓடும். ஆனால் இப்போது பண்டிகை நாட்களில் ஒன்று அல்லது இரண்டு படங்கள் தான் வெளியாகின்றன. அதுவும் பெரிய நடிகர்களின் படங்கள். சிறிய படங்களை வெளியிடத் திரையரங்குகள் கிடைப்பதில்லை. இதனால் மற்ற வார இறுதி நாட்களில் வெளியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுக் காணாமல் போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

N4
N4 படத்தின் இயக்குனர் லோகேஷ் குமார்

இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் வெளியான என்4 (N4) படத்தின் இயக்குநர் லோகேஷ் குமார் நம்மிடம் கூறும்போது, "எங்கள் படத்தை நல்ல படம் என்று படம் பார்த்தவர்கள் பாராட்டினர். நடிகர்களின் தேர்வு அருமையாக இருந்தது என்றும் அவர்களின் நடிப்பும் பாராட்டப்பட்டது. தற்போதைய சூழலில் சின்ன படம் வெளியாகிறது என்பதைப் பார்வையாளர்களிடம் தெரியப்படுத்துவதே சவாலாக உள்ளது. படத்தை எடுப்பதை விட அதனை மார்க்கெட்டிங் செய்வது மிகப் பெரிய பணி. சிறிய படங்களுக்கு அந்த அளவுக்கு நிதி ஆதாயமும் இருக்காது.

சிறிய படங்களுக்கு எப்போது வெளியீட்டுத் தேதி என்று தெரியாது. இதனால் படத்தை விளம்பரப்படுத்த போதிய நேரமும் இருக்காது. ஆகையால் மக்களையும் நாம் குறை சொல்ல முடியாது. பெரிய படங்களுக்கே வெளியீட்டுத் தேதி என்பது சவாலாக இருக்கும் போது சிறிய படங்களுக்கு இதைவிடப் பெரிய சவாலாக இருக்கிறது. இத்தகைய சூழலில் திரையரங்குகளும் எங்களுக்கு உதவுகின்றனர். அவர்கள் படங்களை வெளியிட முன்வருகின்றனர். சிட்டியில் காட்சி எண்ணிக்கை அதிகமாகக் கிடைத்தாலும் பிசி சென்டர்களில் ஒரு சில காட்சிகள் தான் கிடைக்கின்றது. அவர்களையும் குறைசொல்ல முடியாது. ஏனென்றால் பார்வையாளர்கள் திரையரங்கங்களுக்கு வராத பட்சத்தில் காட்சிகளை ரத்து செய்யும் நிலை ஏற்படுகிறது.

பெரிய படங்களுக்கு உள்ள பிராண்ட் வரவேற்பு எப்போதும் இருக்கும். ஆனால் சிறிய படங்களுக்கு இதுபோன்று நடப்பதில்லை. அதுமட்டுமின்றி இன்றைய காலகட்டத்தில் வெற்றிப் படம் அல்லது தோல்விப் படம் இந்த இரண்டு நிலைதான் உள்ளது. சராசரி படம் என்ற நிலை எப்போதோ மாறிவிட்டது. சமூக வலைத்தளங்களிலும் ஒரு படத்தைப் பற்றி மோசமாகப் பதிவிடுவதால் வசூலும் பாதிக்கிறது. நல்லாயில்லை என்றாலும் சராசரி என்ற நிலையைக் கடந்து மோசமான படமாகிறது. ஒரு படத்தைத் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுவது நல்லதல்ல. அதேபோன்று தனிமனித தாக்குதலும் சமூக வலைத்தளங்களில் அதிகரித்துள்ளது" என மன வருத்தத்துடன் கூறினார்.

தமிழ் திரைத்துறையில் ஆண்டுக்கு 100-ல் இருந்து 200 படங்கள் தயாரிக்கப்படுகிறது. அதில் பெரிய நடிகர்களின் படங்கள் என்று பார்த்தால் 10 அல்லது 12 தான் வெளியாகும் மீதி எல்லாமே சிறிய படங்கள் தான். தமிழ் திரைத்துறையை வாழ வைப்பது சிறிய படங்கள் தான் என்று அவ்வப்போது முக்கிய நபர்கள் ஆடியோ விழாவில் பேசியதை நாம் கேட்டிருப்போம். அத்தகைய சிறிய படங்கள் ஓடிடி வளர்ச்சி மற்றும் பார்வையாளர்களின் வரவேற்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் மோசமான நிலையில் உள்ளது.

சிறிய படங்களை வாங்க எந்தவொரு ஓடிடி தளங்களும் முன்வருவதில்லை. ஆரம்பத்தில் ஓடிடி தளங்கள் சிறிய படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தன. பின்னர் படிப்படியாகச் சிறிய படங்களைக் கண்டுகொள்ளவில்லை. கரோனா பாதிப்புக்குப் பிறகு திரையரங்குகள் கிடைக்காமலும் ஓடிடியில் விற்பனை செய்ய முடியாமலும் நூற்றுக்கணக்கான சிறிய படங்கள் தேங்கியுள்ளன. இவைகளுக்கு எல்லாம் சாபம் நீங்கி விடிவு காலம் பிறக்குமா? என்பது காலத்தின் கையில் தான் உள்ளது.

இதையும் படிங்க: 'பத்து தல' நாயகி பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் மாடர்ன் க்ளிக்ஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.