ETV Bharat / crime

குமரியில் இளைஞர் ஆணவக்கொலை..?: மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போராட்டம்!

author img

By

Published : Nov 9, 2021, 10:03 PM IST

காவல் நிலையம் சென்று திரும்பிய இளைஞர் சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்த நிலையில், இறப்பிற்குக் காரணமானவர்களைக் கைது செய்யக் கோரி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

கன்னியாகுமரியில் இளைஞர் ஆணவக்கொலை..?
கன்னியாகுமரியில் இளைஞர் ஆணவக்கொலை..?

கன்னியாகுமரி: தோவாளையைச் சேர்ந்தவர் 27 வயதுடைய சுரேஷ்குமார். எம்.ஏ., பட்டதாரியான இவர், அதே பகுதியில் வசித்து வந்த மற்றொரு சமூகத்தைச் சார்ந்தப் பெண்ணைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு, பெண்ணின் வீட்டார் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக காதல் புரிந்து வந்துள்ளனர்.

திருமண ஏற்பாடு

இதற்கிடையே அப்பெண்ணுக்கு அவரது வீட்டார் அவசர அவசரமாக, வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்துள்ளனர். தனது பெற்றோரிடம் வந்து பேசுமாறு சுரேஷை அப்பெண் அழைத்து இருந்ததாகவும், கடந்த நவ.7ஆம் தேதி அன்று இதற்காக, சுரேஷ் குமார் வீட்டை விட்டு வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, அப்பெண் வீட்டார் சுரேஷ் குமார் தங்களது மகளின் திருமணத்திற்கு இடையூறாக இருக்கலாம் என்பதால், அவர் மீது பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார்

பெண்ணின் வீட்டார் அளித்தப் புகாரின் அடிப்படையில், பூதப்பாண்டி காவல் துறையினர் சுரேஷ் குமாரை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வரும்படி வீட்டுக்குச் சென்று அழைத்துள்ளனர். எனவே, விசாரணைத் தொடர்பாக காவல் நிலையம் சென்று வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு சென்ற சுரேஷ் குமார் பல மணி நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

கொடூரமாக இறப்பு

சுரேஷ் என்ற இளைஞர்

இதனால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் அப்பகுதியில் உள்ள காவல் நிலையம் மற்றும் பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளனர். இந்தச் சூழலில் சுரேஷ் குமாரின் இருசக்கர வாகனம், அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இருப்பதைக் கண்ட அவர்கள், அங்கு சென்று பார்த்த போது, கழுத்து மற்றும் கைப்பகுதிகளில் சுரேஷ் குமார் ரத்தக் காயங்களுடன் சுருண்டு விழுந்து கிடந்துள்ளார்.

இதையடுத்து, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது சம்பந்தமாக, பூதப்பாண்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பெற்றோர் - உறவினர்கள் போராட்டம்

கைது செய்யக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

சுரேஷ் குமாரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறிய அவரின் பெற்றோர், அவரது உடலை வாங்க மறுத்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் சற்று நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.

மேலும், தங்களது மகனின் இறப்பைத் தற்கொலை வழக்காக மாற்றப் பெண் வீட்டார் முயற்சிப்பதாக சுரேஷ் குமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த வழக்கு குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கற்பி... ஒன்று சேர்... புரட்சி செய்...! - நூற்றாண்டைக் கடந்து நிற்கும் 'ஜெய்பீம்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.