ETV Bharat / crime

மோசடி விவகாரம்: சத்தமில்லாமல் சிக்கிய முன்னாள் வங்கி அலுவலர்கள்!

author img

By

Published : Jan 8, 2022, 6:36 AM IST

சென்னையில் இருவேறு மோசடி விவகாரத்தில் உதவியாக இருந்த இரண்டு முன்னாள் வங்கி அலுவலர்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்

வங்கி அலுவலர் கைது
வங்கி அலுவலர் கைது

சென்னை: கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (50). இவர் சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்கவேண்டும் நினைத்துள்ளார்.

இதனையறிந்த சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், அவரது மனைவி லட்சுமி என்ற தம்பதியும், சுரேஷ்பாபு, அவரது மனைவி காமாட்சி என்ற தம்பதியும் கணேசனை அணுகி, தங்களுக்குச் சொந்தமாக கோடம்பாக்கம் ரெங்கராஜபுரத்தில் இரண்டு தளங்கள் கொண்ட வீடு உள்ளது. அவ்வீட்டை உங்களுக்கு விற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளனர்.

கணேசனை பகடையாக பயன்படுத்திய கும்பல்

மேலும், அந்த வீட்டை விற்பதற்கு கிரையத் தொகையாக 3 கோடியே 15 லட்சம் ரூபாயையும் நிர்ணயம் செய்து கணேஷிடம் தெரிவித்து கிரைய ஒப்பந்தத்தையும் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் போட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் வீட்டிற்கு கிரைய முன்பணமாக 1 கோடியே 15 லட்சத்தை வெங்கடேசன் உள்ளிட்ட நான்கு பேரும் கணேஷிடமிருந்து ரொக்கமாகவும், வங்கி மூலமும் பெற்றதுடன், கணேசனுக்குச் சொந்தமான இரண்டு கோடி மதிப்புள்ள வீட்டையும் வெங்கடேசன் பெயரில் கிரையம் செய்துகொண்டுள்ளனர்.

தொடர்ந்து, கிரையம் செய்து கொடுத்த வீட்டின் பெயரில் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் 1 கோடி கடன் பெற்று அந்த தொகையையும் சேர்த்து மொத்தம் 4.15 கோடி ரூபாயை மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர். இது தொடர்பாக கணேசன் கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.

சுற்றிவளைத்த காவல்துறை

அப்புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப் பிரிவு காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்ட வெங்கடேசன், சுரேஷ் பாபு, காமாட்சி ஆகியோரை கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடி விவகாரத்தில் தலைமறைவாக இருந்து வந்த வெங்கடசனின் மனைவி லட்சுமியை (43) காவல்துறையினர் தொடர்ந்து வலைவீசித் தேடி வந்தனர். மேலும், லட்சுமியின் செல்போன் சிக்னலையும் காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்நிலையில், சென்னை கே.கே நகர் பகுதியில் லட்சுமி பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தலைமறைவுக் குற்றவாளியான லட்சுமியை கைது செய்தனர். பின்னர், அவரை எழும்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

உதவி செய்த வங்கி அலுவலர் கைது

அதேபோல் சென்னையில் கட்டப்படாத குடியிருப்புக் கட்டடத்தை அடமானம் வைத்து 42.78 லட்சம் ரூபாய் கடன் பெற உடந்தையாக இருந்த முன்னாள் வங்கி அலுவலரை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மற்றொரு புகார்- இங்கிருந்த கிணத்த காணோம்?

இதேபோல் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் வங்கி மேலாளர் மகேந்திரன் என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

அந்தப் புகாரில், “கடந்த 2017 ஆம் ஆண்டு கோயம்பேட்டைச் சேர்ந்த முரளிதரன், அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் வங்கிக்கு வந்து திருவான்மியூரில் தங்களுக்குச் சொந்தமான இரண்டு அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் குடியிருப்பு இருப்பதாக போலி ஆவணங்கள் தயாரித்து வங்கியில் அடமானம் வைத்தனர். மேலும், வங்கியில் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் ஸ்ரீநிவாஸ் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் என்ற முரளிதரனுக்குச் சொந்தமான நிறுவனம் பெயரில் 42.78 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததுள்ளனர்.

இல்லாத கட்டடத்தின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து, வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட முரளிதரன்-ஜெயந்தி தம்பதியையும், அவர்களுக்கு மோசடியில் உறுதுணையாக இருந்த கூட்டாளிகளையும் கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தீவிர விசாரணை செய்த காவல்துறை

அந்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், திருவான்மியூரில் குடியிருப்புக் கட்டடங்கள் கட்டிவந்த தனியார் கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான கோயம்பேட்டைச் சேர்ந்த முரளிதரன், கடந்த 2017 ஆம் ஆண்டு தனியார் வங்கியை ஏமாற்றும் நோக்கில் தனது மனைவியையும், தன்னையும் பங்குதாரர்களாக காண்பித்து தன் பெயரில் போலியாக நிறுவனம் ஒன்றை தொடங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அந்த நிறுவனத்தின் பெயரில் தனியார் வங்கியில் குடியிருப்பின் தரைத்தளத்தில் ஏற்கனவே கட்டடம் கட்டப்பட்டதாக போலி ஆவணங்கள் தயாரித்து அளித்து, அதன் மூலம் வங்கியிலிருந்து 42.78 லட்சம் ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இந்த விவகாரத்தில் காவல்துறையினர், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மோசடியில் ஈடுபட்ட முரளிதரனையும், அவரது மனைவி ஜெயந்தியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உதவி செய்த வங்கி அலுவலர்

இதனையடுத்து முரளிதரனிடம் மேற்கொண்ட விசாரணையில், மயிலாப்பூர் தனியார் வங்கிக் கிளையின் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உதவி பொது மேலாளரான கோயம்புத்தூரைச் சேர்ந்த ரோசாரியோ சில்வர்ஸ்டைன் ஷேன் (57) என்பவர், முரளிதரனுக்கு உடந்தையாக செயல்பட்டு கட்டப்படாத குடியிருப்புக் கட்டடத்தை நேரடியாக ஆய்வு செய்து கடன் வழங்க தகுதியானது என பொய்யான ஆய்வறிக்கை தயார் செய்துள்ளார். பின்னர் வங்கி மூலம் முரளிதரன் கடன் பெற உதவியுள்ளார் என தெரியவந்தது.

அதனடிப்படையில் முன்னாள் வங்கி அலுவலரான ரொசாரியோவை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: திருச்சி மக்கள் அதிர்ச்சி: ஒரே இரவில் 5 இடங்களில் திருட்டு... ஒரே கும்பலா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.