ETV Bharat / crime

100 ரூபாய் தகராறு: கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை

author img

By

Published : Dec 9, 2021, 2:49 PM IST

ஆவடியில் ரூ.100 கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில், குடிபோதையில் இருந்த கட்டடத் தொழிலாளியை இரும்பு ராடால் அடித்துக் கொலைசெய்த சக தொழிலாளியை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

avadi construction labour death, ஆவடி கட்டட தொழிலாளியை அடித்துக்கொன்ற சக தொழிலாளி
avadi construction labour death

சென்னை: ஆவடி, ஆனந்தம் நகர், புலவர் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (50). இதே பகுதி கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் பூபதி (25). இவர்கள் இருவரும் கட்டடத் தொழிலாளிகள். நண்பர்களான இவ்விருவரும் நாள்தோறும் ஒன்றாகப் பணிக்குச் சென்று வீடு திரும்புவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (டிசம்பர் 7) காலை சிவகுமார், பூபதி இருவரும் வீட்டிலிருந்து புறப்பட்டு வேலைக்குச் சென்றனர். பின்னர், இவர்கள் ஆவடி, காமராஜர் நகர் முதல் தெருவில் உள்ள ஒரு வீட்டில் கட்டடப் பணியில் ஈடுபட்டனர்.

100 ரூபாயில் தொடங்கிய சண்டை

பின்னர், மாலை வேலை முடிந்ததும் சிவகுமாருக்கு பூபதி 1,000 ரூபாயை கூலியாகக் கொடுத்துள்ளார். அப்போது, சிவக்குமார் வீட்டு உரிமையாளர் கொடுத்த சாப்பாடு பணம் 100 ரூபாயைத் தனக்குத் தர வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், அவர் கேட்ட பணத்தை பூபதி கொடுக்கவில்லை.

இதனையடுத்து, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் தகராறு செய்தபடியே வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தனர். பின்னர், வீட்டருகே சிவகுமார் வந்த பிறகு, பூபதியிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

சரமாரி தாக்குதல்

அப்போது ஆத்திரமடைந்த சிவகுமார் வீட்டில் இருந்த இரும்பு ராடை எடுத்துவந்து பூபதியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், பூபதிக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த பூபதி இரும்பு ராடை அவரிடமிருந்து பிடுங்கி, திருப்பி சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதில், மண்டை உடைந்து ரத்தம் வெள்ளத்தில் சிவகுமார் தரையில் விழுந்தார். இதோடு, ஆத்திரம் தீராத பூபதி அருகில் கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து மீண்டும் சிவகுமாரின் தலையில் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த சிவகுமார் உயிருக்குப் போராடினார்.

இதனையடுத்து, உறவினர்கள் விரைந்துவந்து சிவகுமாரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டுசென்றனர். அங்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு, மேல் சிகிச்சைக்காக அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

பூபதி கைது

அங்கு சிவகுமாரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் இறந்ததாகத் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் ஆவடி காவல் ஆய்வாளர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்தார்.

இதன்பிறகு, காவலர்கள் தனிப்படை அமைத்து பூபதியைத் தேடினர். பின்னர், தனிப்படையினர் தலைமறைவாகி இருந்த பூபதியைப் பிடித்து காவல் நிலையம் கொண்டுவந்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு பூபதியை காவலர்கள் கைதுசெய்தனர். பின்னர், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் காவலர்கள் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பேருந்தை முந்த முயன்ற இளைஞர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.