ETV Bharat / crime

பூசாரி கொலை வழக்கு: மனைவிக்கு அரசு வேலை வழங்க பரிந்துரை!

author img

By

Published : Apr 24, 2021, 8:49 AM IST

பூசாரி கொலை வழக்கில் சாதி மோதல்களை தடுக்க சீவலப்பேரி சுடலை கோயிலில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி அளித்துள்ளார். மேலும் பூசாரியின் மனைவிக்கு அரசு வேலை வழங்கவும் பரிந்துரை செய்துள்ளார்.

nellai seevalaperi sudalai temple poosari murder
nellai seevalaperi sudalai temple poosari murder

திருநெல்வேலி: பூசாரி கொலை வழக்கில், அவரது மனைவிக்கு அரசு பணி வழங்க மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அரசு முதன்மை செயலாளர் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "சீவலப்பேரியில் பூசாரி சிதம்பரம் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அளித்த அறிக்கையின்படி புறக்காவல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சார் ஆட்சியர் அளித்த அறிக்கையின்படி, தேர்தல் நடவடிக்கைகளுக்கு பிறகு கோயில் நிலம் அளவீடு செய்யப்படும் என்றும் உயிரிழந்த பூசாரி சிதம்பரத்தின் பெயரில் சொத்துக்கள் எதுவும் இல்லை. எனவே அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி மற்றும் அவரது மனைவிக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம்" என்றும் தெரிவித்துள்ளார்.

nellai seevalaperi sudalai temple poosari murder
மாவட்ட ஆட்சியர் பரிந்துரை

சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற சுடலைமாட சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் 1ஆம் தேதி கோடை விழா நடைபெறும். அன்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்காணோர் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்வார்கள். அப்போது நுாற்றுக்கணக்கில் ஆடு, கோழிகள் பலியிடப்படும். இச்சூழலில், ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்துள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பூஜை சுருக்கமாக நடந்துள்ளது. அதை முன்னிட்டு கோயிலில் பலர் கடைகள் அமைத்துள்ளனர். அப்போது கோயிலை நிர்வகிக்கும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கும் கடைகள் அமைத்த வேறு சமூகத்தினருக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

பிரச்னை தொடர்வதை விரும்பாத கோயில் நிர்வாகத்தினர், ஞாயிற்றுக்கிழமை அன்று கோயிலில் அனைத்து தரப்பு முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பேச்சுவார்த்தையின் போது அங்கு இருந்தவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி சண்டை நடந்துள்ளது. அதில், பூசாரி சிதம்பரம், நடராஜ பெருமாள் ஆகியோரை சிலர் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.

படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியில், சிதம்பரம் உயிரிழந்தார். நடராஜ பெருமாள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி அரசு மருத்துவமனையில் சிதம்பரத்தின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உயிரிழந்த சிதம்பரத்தின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காவல் துறையினரின் பேச்சுவார்த்தைக்குப் பின் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இதற்கிடையே, சீவலப்பேரி காவல்நிலையத்தில், 23 வயதான முருகன், பேச்சிக்குட்டி, 19 வயதான இசக்கி முத்து, மாசான முத்து, முத்துமாரிதுரை, 24 வயதான தங்கப்பாண்டி மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 7 பேர் சீவலப்பேரி காவல்நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களைக் கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.