ETV Bharat / crime

வீட்டு உரிமையாளர்களே உஷார்... ராணுவ அலுவலர்கள் போல் பேசி மோசடி

author img

By

Published : Aug 24, 2022, 4:11 PM IST

வீட்டு உரிமையாளர்கள் உஷார்...ராணுவ அதிகாரிகள் போல் பேசி மோசடி
வீட்டு உரிமையாளர்கள் உஷார்...ராணுவ அதிகாரிகள் போல் பேசி மோசடி

சென்னையில் ராணுவ அலுவலர்கள் போல் பேசி மோசடி செய்யும் கும்பல், மீண்டும் நூதன முறையில் மக்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளது. ஆன்லைனில் வீடு வாடகைக்கு விடுவதற்காக விளம்பரம் செய்யும் வீட்டு உரிமையாளர்களைக் குறி வைத்து நூதன மோசடி செய்யப்பட்டுவருகிறது.

சென்னை: அசோக் நகரில் வசித்து வருபவர், அசோக். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் ஆன்லைன் மூலமாகப் புகார் ஒன்றை அவர் அளித்துள்ளார். அதில் தனக்கு தாம்பரம் ஏர்ஃபோர்ஸ் பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த வீட்டை வாடகைக்கு விடுவதற்காக 99 ஏக்கர்ஸ்.com மற்றும் நோ ப்ரோக்கர். காம் போன்ற வீடு வாடகை மற்றும் விற்பனை தொடர்பான இணையதளங்களில் விளம்பரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்த விளம்பரத்தைப் பார்த்து திவாரி என்ற ராணுவ வீரர் தொடர்புகொண்டதாகவும் வாட்ஸ்அப் கால் மூலம் பேசியதாகவும் தெரிவித்துள்ளார். அதில் “தான் ராணுவத்தில் பணிபுரிந்து வருவதாகவும், ஆன்லைன் வாடகை வீடு விளம்பரத்தில் உள்ள வீட்டின் புகைப்படத்தை பார்த்து பிடித்ததாக” ராணுவ வீரர் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் ராணுவ வீரர் என்பதை நம்புவதற்காக ஆதார் அட்டை, பான் அட்டை மற்றும் ராணுவ அடையாள அட்டை ஆகியவற்றையும் வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக அசோக் தெரிவித்துள்ளார்.

வீட்டு உரிமையாளர்களே உஷார்...ராணுவ அதிகாரிகள் போல் பேசி மோசடி
வீட்டு உரிமையாளர்களே உஷார்...ராணுவ அலுவலர்கள் போல் பேசி மோசடி

மேலும் வீட்டிற்கான முன் தொகையானது ராணுவ வங்கிக்கணக்கில் இருந்து செலுத்த வேண்டும். அதற்கு ராணுவத்திலிருந்து தங்களது வங்கிக்கணக்காளர் உங்களைத்தொடர்பு கொள்வார் எனத் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி வாட்ஸ்அப் காலில் ராணுவ கணக்காளர் ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், ராணுவத் தலைமையகத்தில் இருந்து பேசுவதுபோல் பேசியதாகவும் தெரிவித்துள்ளார்.

தங்களது வங்கிக் கணக்கிலிருந்து, ராணுவ வங்கிக் கணக்கிற்கு 3,000 ரூபாய் பணம் செலுத்தினால், அதை நம்பகமாக வைத்து, ராணுவ வீரர் திவாரிக்காக, வீட்டிற்கான முன்தொகை மற்றும் நீங்கள் அனுப்பிய பணத்தையும் திருப்பி அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார். இதனை நம்பி அசோக் 3,000 ரூபாய் பணத்தை அனுப்பி உள்ளார். தொடர்ந்து மேலும் வீட்டிற்கான முன்தொகை பணத்தை முழுவதுமாக செலுத்துமாறும் மொத்தமாக வாடகையோடு சேர்த்து பணத்தை திருப்பி செலுத்துவதாகவும் ராணுவ கணக்காளராகப்பேசிய நபர் தெரிவித்துள்ளார்.

அப்போது சுதாரித்துக் கொண்ட அசோக், வீட்டு உரிமையாளரான தான் எதற்குப் பணம் அனுப்ப வேண்டும்? என்று தொடர்ந்து கேள்வி கேட்டதை அடுத்து வாட்ஸ்அப் அழைப்பைத் துண்டித்துள்ளனர். இது தொடர்பாக அசோக் விசாரித்துப் பார்க்கும்போது ராணுவ அலுவலர் எனக்கூறி, நூதன முறையில் பணமோசடியில் ஈடுபட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பொதுமக்கள், குறிப்பாக வீட்டு உரிமையாளர்கள் இதுபோன்று ராணுவ அலுவலர்கள் எனக் கூறிக்கொண்டு, வீடு வாடகைக்கு கேட்டு, மோசடி செய்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி கூறி சமூக வலைதளத்தில் புகைப்பட ஆதாரங்களுடன் பதிவு செய்துள்ளார்.

வீட்டு உரிமையாளர்களே உஷார்...ராணுவ அதிகாரிகள் போல் பேசி மோசடி
வீட்டு உரிமையாளர்களே உஷார்... ராணுவ அலுவலர்கள் போல் பேசி மோசடி

ஏற்கெனவே ராணுவ வீரர்கள் என தெரிவித்துக்கொண்டு, ஆன்லைனில் புல்லட், கார் உள்ளிட்டவை விற்பனை செய்வதாகக்கூறி பொதுமக்களிடம் நூதன முறையில் பல்வேறு மோசடிகளை அரங்கேற்றும் வட மாநில கும்பல், தற்போது வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்களைக் குறி வைத்து இந்த மோசடியில் இறங்கியது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: போலீஸ் போல் நடித்து ரூ.24 லட்சம் கொள்ளை...தொடர் திருட்டில் ஈடுபட்டது அம்பலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.