ETV Bharat / city

கல்வித்தொலைக்காட்சி விவகாரத்தில் அரசாங்கமும், நானும் ஏமாந்துவிடமாட்டோம்... டிரெண்டிங் குறித்து அன்பில் மகேஷ்

author img

By

Published : Aug 17, 2022, 5:45 PM IST

Updated : Aug 17, 2022, 5:53 PM IST

அரசின் கல்வித்தொலைக்காட்சி நிர்வாகி நியமன விவகாரத்தில் அரசாங்கமும், தானும் ஏமாந்துவிட மாட்டோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

திருச்சி: கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் கல்வித்துறை செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக. 17) நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

மரத்தடி பள்ளிகளுக்கு முன்னுரிமை: கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளரைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'இந்த கூட்டத்தில் பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை என்பது, உட்கட்டமைப்பு வசதிகள்தான். ஒவ்வொரு பள்ளிகளிலும் தேவைப்படும் கட்டடங்கள், இடிக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்குப் பதிலாக புதிய கட்டடங்கள், கழிப்பறைகள் உள்ளிட்டவைகளைக் கேட்டுள்ளனர்.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ், 1300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த நிதி வந்தவுடன் மரத்தடியில் செயல்படும் பள்ளிகளுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 'படிக்கலாம் வாருங்கள்,வெளிநாடு பறக்கலாம் வாருங்கள்' என்ற முன்னெடுப்பின்கீழ் பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பு திறனை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளியில் உள்ள நூலகத்தில் புத்தகம் எடுத்து வாரத்திற்கு ஒரு முறை வாசிக்கலாம்.

''என்னடா... அன்பில் பேரனுக்கு வந்த சோதனை..'': படித்து அதன் மூலம் அவர்கள் எழுதுகிற விமர்சனமாக இருந்தாலும், கட்டுரையாக இருந்தாலும், ஓவியமாக இருந்தாலும் அதில் சிறந்த மாணவர்களாக சுமார் 114 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை மாநில அளவில் எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளர்களுடன் உரையாட வைத்து, அதில் இருந்து 25 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களை வெளிநாடு கூட்டிச்செல்லும் திட்டத்திற்கு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மரத்தடியின் கீழ், நடைபெறும் சுமார் 2500 பள்ளிகளைக்கண்டறிந்து, வரும் பணத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளோம்.

சமூக வலைதளத்தில் ஒரு ஹேஷ்டேகை கண்டேன். அதைப் பார்த்து, என்னடா... அன்பில் பேரனுக்கு வந்த கொடுமை என்று நினைத்துக்கொண்டேன். இதில் விவாதம் செய்த நண்பர்கள், ஆதரவு தெரிவித்த நண்பர்கள், கோரிக்கையாக அறிவுரை சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்பு

'நான் தேர்வு செய்யவில்லை': பள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சி கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. அதை மேம்படுத்த வேண்டும் என்று கூட்டத்தொடரில் பேசினோம். அப்போது ஒரு தொலைக்காட்சி போதாது, இரண்டாவது தேவை என்று சொல்லி அதை நிர்வகிப்பதற்காக ஒரு அழைப்பாணை விடுவித்தோம்.

அதில் 79 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், தகுதியின் அடிப்படையில் 11 பேரை தேர்ந்தெடுத்து அதில் மூன்று பேரை தேர்வு செய்தனர். நாங்கள் அதை தேர்வு செய்யவில்லை, அதற்காக தனி கமிட்டி அமைக்கப்பட்டு, அதில் கல்வித்துறை இயக்குநர் என ஐந்து பேர் சேர்ந்து தேர்வில் ஈடுபட்டனர்.

'பாசிட்டிவ்வாக எடுத்துக்கொள்கிறேன்': இதுதொடர்பாக பலர் என்னிடம் இவர் அவருக்கு நண்பர், இவருக்கு நண்பர் என கூறினர். அவர் நண்பர் என மட்டும் பாராமல் அவர் எப்படி வேலை செய்கிறார் என்று பார்க்கலாம் என்பதுபோல் நினைத்தேன். இரண்டு நாள்களாக வந்த செய்திக்குப் பின்தான், அவருடைய பின்புலம் என்ன என்பது குறித்து தெரியவந்தது.

அவரின் நியமன உத்தரவ நிறுத்திவைக்க கூறி இருக்கிறேன். மேலும், பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறேன். அரசாங்கமும், அன்பில் பொய்யாமொழியும் இந்த விஷயத்தில் ஏமாந்துவிட மாட்டோம் என்பதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

அன்பில் மகேஷ் வளர்ந்திருக்கிறேன் என்றால் அது உங்களால் தான். இதையும் நான் பாசிட்டிவ்வாகவே எடுத்துக் கொள்கிறேன். நான் எந்த அளவு கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களோ, அந்த அளவு நான் கவனமாக இருப்பேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காவடி தூக்கவா டெல்லி போகிறேன்...ஸ்டாலின்

Last Updated :Aug 17, 2022, 5:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.