ETV Bharat / city

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: 28ஆவது கட்ட விசாரணை தொடக்கம்!

author img

By

Published : Jul 5, 2021, 3:23 PM IST

Updated : Jul 5, 2021, 3:39 PM IST

கரோனா தொற்றின் 2 ஆவது அலையின் தீவிரம் குறைந்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணையத்தின் 28ஆவது கட்ட விசாரணை இன்று(ஜூலை 5) தொடங்கியது.

thoothukudi massacre
thoothukudi massacre

தூத்துக்குடி: துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் ஒரு நபர் ஆணையத்தின் 28ஆவது கட்ட விசாரணை இன்று தொடங்கி வரும் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நடந்து வருகிறது.

கடந்த ஏப்ரலில் நடைபெற்ற 27ஆவது கட்ட விசாரணையை அடுத்து, கலவரம் குறித்த இடைக்கால விசாரணை அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.

அதன்படி, ஆணையம் பரிந்துரைத்தக் கோரிக்கைகளான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது காவல்துறையால் தேவையின்றி போடப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறப்பட்டன.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிவாரணமாக, 93 நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்த நிலையில் அடுத்தகட்ட விசாரணை மே 17 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கரோனா 2ஆவது அலையின் தீவிரம் காரணமாக ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை மறு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

இச்சூழலில், 28ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள ஒரு நபர் ஆணைய அலுவலகத்தில் இன்று (ஜூலை 5) தொடங்கி, வரும் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஒருநபர் ஆணையத்தின் 28ஆவது கட்ட விசாரணையில் ஆஜராகி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விளக்கம் அளிப்பதற்காகக் கலவரத்தின் போது கல்வீச்சால் பாதிக்கப்பட்ட காவல் துறையினர், பாதுகாப்பில் ஈடுபட்ட காவலர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை 1,052 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில், 719 பேர் ஆணையத்தின் முன்பு ஆஜராகி விளக்கமளித்துள்ளனர். இதுவரை 1,126 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated :Jul 5, 2021, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.