ETV Bharat / city

செல்போன் சிக்னல், இணையதளம் என துளியும் தொலைத்தொடர்பு இல்லாத நடுக்காட்டில் உருவாகும் முதல் பட்டதாரி பெண்!

author img

By

Published : Aug 7, 2022, 7:18 PM IST

அடிப்படை தேவைகளுக்காக இம்மக்கள் சுமார் 20 கிமீ தூரம் புலிகள், சிறுத்தைகள், யானைகள் வாழும் காட்டில் கால் கடுக்க நடந்து சென்று வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில், முதல் பட்டதாரி ஆகப்போகும் அபிநயா குறித்த சிறப்பு தொகுப்பை காணலாம்.

செல்போன் டவர், இணையதளம் என துளியும் தொலைதொடர்பு இல்லாத நடுக்காட்டில் உருவாகும் முதல் பட்டதாரி பெண்
செல்போன் டவர், இணையதளம் என துளியும் தொலைதொடர்பு இல்லாத நடுக்காட்டில் உருவாகும் முதல் பட்டதாரி பெண்

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான மக்களுக்குத்தெரியாத ஊர், இஞ்சிக்குழி. இப்படி ஒரு ஊர் இருப்பதும் அங்கு மக்கள் வசிக்கின்றனர் என்பதும் மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இஞ்சிக்குழி என்பது பாபநாசம் - காரையாறு அணையில் இருந்து சுமார் 10 கி.மீ., தொலைவில் அடர்ந்த காட்டுக்குள் வீற்றிருக்கும் அமைதியான வனப்பகுதி ஆகும்.

இப்படிப்பட்ட ஊரில் 'காணி' பழங்குடியினத்தைச்சேர்ந்த எட்டு குடும்பத்தினர் வாழ்ந்துவருகிறார்கள். நவநாகரிக உலகத்தில் வாழும் நமக்கு ஏதாவது பிரச்னை என்றாலோ அல்லது ஏதும் அவசரம் என்றாலோ அலைபேசியில் அழைத்த அடுத்த நிமிடமே ஒரு கூட்டம் ஓடி வரும். ஆனால், இங்கு வசிக்கும் மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், அதைத் தெரிவிக்க எந்த தொலைத்தொடர்பு வசதியும் கிடையாது.

லட்சியக் கனவு: இப்படிப்பட்ட ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு, நகரத்து மக்களைப்போன்று படித்து சாதிக்க வேண்டும் என கனவு கண்ட பலரது வாழ்க்கை கடைசி வரை கனவாகவே இருந்துள்ளது.

ஆனால், இஞ்சிக்குழியில் வசிக்கும் அய்யப்பன், மல்லிகா தம்பதியினர் தங்களது ஒரே மகளான அபிநயாவை எப்படியாவது பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக, தங்களது ஆசை மகளை சிறு வயது முதலே நகரத்தில் தங்கிப் படிக்க வைத்துள்ளனர்.

வழக்கறிஞர் ஆக வேண்டும் என்ற ஆசையுள்ள அபிநயா 1ஆம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நகரப்பகுதியில் உள்ள விடுதியில் தங்கிப்படித்துள்ளார். அதன்பின் கடந்த ஆண்டு அபிநயா நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால், ஊரில் இணையதள வசதி இல்லாததால் கல்லூரியின் சேர்க்கை விவரங்களை அறிந்துகொள்ள முடியாமல் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஒரு ஆண்டு வீணான நிலையில், இந்த ஆண்டு எப்படியாவது படிக்க வேண்டும் என்ற வெறியோடு பல்வேறு கல்லூரிகளில் விண்ணப்பித்துள்ளார், அபிநயா.

மேலும் கல்லூரிகளில் இருந்து அழைப்பு வரும் என்பதால் தனது மகளுக்காக அய்யப்பன் கடந்த மூன்று மாதங்களாக வேலையை விட்டுவிட்டு இஞ்சிக்குழியில் இருந்து இடம் பெயர்ந்து 'காரையாறு' எனும் அணைப்பகுதியின் அருகே உள்ள சின்னமைலார் 'காணி' குடியிருப்பில் வசித்துவந்தார்.

முதல் பட்டதாரி: இங்கிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் செல்போன் சிக்னல் கிடைக்கும், எனவே தினமும் அய்யப்பன் செல்போன் சிக்னல் கிடைக்கும் இடத்துக்குச்சென்று விடுவார். அய்யப்பனின் இந்த லட்சியப்பயணத்தின் பலனாக தற்போது அபிநயாவுக்கு நெல்லை ராணி அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. வரலாறு படிக்க இடம் கிடைத்துள்ளது.

இதன்மூலம் இஞ்சிக்குழியின் முதல் பட்டதாரி என்ற பெருமைக்கு ஆளாகிறார், அபிநயா. அட்மிஷன் முடிந்த நிலையில் கல்லூரி வகுப்பு எப்போது தொடங்கும் என கல்லூரியில் இருந்து மெயில் வரும் என்பதால், அனைவரும் தொடர்ந்து சின்ன மைலாரிலேயே தங்கியுள்ளனர்.

செல்போன் சிக்னல், இணையதளம் என துளியும் தொலைத்தொடர்பு இல்லாத நடுக்காட்டில் உருவாகும் முதல் பட்டதாரி பெண்!

இதுகுறித்து அபிநயா கூறும்போது, ''எங்கள் ஊரில் எந்த அடிப்படை வசதியும் கிடையாது. எங்க அப்பா, அம்மா படிக்கவில்லை. எனவே, என்னைப் படிக்க வைக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள். நான் நன்றாகப்படித்து அப்பாவுக்கு பெருமை சேர்ப்பேன்'' எனத் தெரிவித்தார்.

எட்டாக்கனியான கல்வியை எட்டிப்பிடித்த இளம்பெண்: அபிநயாவின் இந்தப்பயணம் குறித்து அவரின் தாய் மல்லிகா கூறும்போது, ''நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் இஞ்சிக்குழியில் தான். எங்கள் ஊரில் இருந்து பள்ளிக்குச்சென்று வரமுடியாது என்பதால் நிறைய மக்களால் படிக்க முடியாமல் போனது. நானும் படித்ததில்லை. என் குடும்பத்திலும் யாரும் படித்ததில்லை. எனது கணவர் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.

ஆகையால், எங்களது மகளைப்படிக்க வைக்க வேண்டும் என்பதால் சின்ன வயதில் இருந்தே எங்களது ஒரே மகளைப் பிரிந்து வாழ்கிறோம். மகளைப்பார்க்க முடியாமல் பலமுறை அழுதுள்ளேன். ஆனால், அவள் படிக்க வேண்டுமென்றால் பிரிந்துதானே இருக்க வேண்டும். அதன் பலனாக இப்ப அவளுக்கு கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது. இன்னும் மூணு வருஷம் பிரிஞ்சி இருக்கனும்'', என்று தெரிவித்தார்.

மலைக்கிராமத்தில் வாழை, கிழங்கு, மிளகு, தேன் போன்ற பொருட்களை விவசாயம் மட்டுமே செய்து, அடிப்படை தேவைகளுக்காக இம்மக்கள் சுமார் 20 கி.மீ. தூரம் புலிகள், சிறுத்தைகள், யானைகள் வாழும் காட்டில் கால் கடுக்க நடந்து வந்து, பின்னர் சுமார் நான்கு கி.மீ. தூரமுள்ள அணையைக்கடந்து காரையாறுக்கு வந்து செல்ல வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில் வாழ்ந்து வரும் இஞ்சிக்குழி மக்களுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வந்த நிலையில் பெற்றோரின் உதவியுடன் முதல்முறையாக கல்லூரிக்குச்சென்று சாதிக்கவுள்ளார், அபிநயா.

இதையும் படிங்க: பாரம்பரியத்தை கையில் எடுக்கும் இளைய தலைமுறை..! நெசவுத்தொழிலில் பொறியியல் பட்டதாரி..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.