ETV Bharat / city

'பனங்கொட்ட தாத்தா தெரியுமா?' - பாரம்பரியத்தை காக்க போராடும் இளைஞர்!

author img

By

Published : Oct 31, 2020, 8:12 PM IST

Updated : Nov 30, 2020, 6:42 AM IST

மதுரை: பனங்கொட்டையில் பொம்மைகள் செய்து அசத்துவதுடன் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து பாரம்பரியத்தை காக்கும் மதுரையைச் சேர்ந்த இளைஞர் அசோக்குமாரின் சிறப்புத் தொகுப்பை தற்போது காணலாம்.

பாரம்பரியத்தை காக்க போராடும் இளைஞர்
பாரம்பரியத்தை காக்க போராடும் இளைஞர்

ஒரு காலத்தில் வீட்டு வாசலில் பனங்கொட்டை தாத்தா உருவத்தை செய்து திருஷ்டி கழிக்க தொங்க விட்டிருப்பார்கள். மேலும் அந்தக் கொட்டையின் மூலமாக பல்வேறு உருவங்களை செய்து அசத்திய தலைமுறை ஒன்று இருந்தது. தற்போதைய பிளாஸ்டிக் யுகத்தில் அவையெல்லாம் மக்கி மறைந்து மண்ணாகிப் போய்விட்டன.

தங்களுக்குத் தேவையான பொம்மைகளை தாங்களே செய்து கொண்டு விளையாடிய காலமெல்லாம் இப்போது மலையேறிப்போய்விட்டது காலத்தின் கோலம். ஆனால் அதனை மறந்து விடாது பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வின் அடிப்படையிலும், நம் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற உந்துதலின் காரணமாகவும் மதுரையைச் சேர்ந்த இளைஞர் அசோக்குமார் தற்போதைய தலைமுறை குழந்தைகளுக்கு பனங்கொட்டையில் பொம்மை செய்யும் கலையை தன்னார்வத்துடன் கற்றுத் தருகிறார்.

பாரம்பரியத்தை காக்க போராடும் இளைஞர்

பனம் பழத்தை தேடித்தேடி பொறுக்கி எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கொண்டு வரும் அவர், அதனை சரியான முறையில் தண்ணீரில் ஊறவைத்து பிறகு மேல் உள்ள தோலை பிரித்து உள்ளிருக்கும் கொட்டையை வெளியே எடுத்து பக்குவப் படுத்துகிறார். பிறகு நார் நாராக இருக்கும் பனங்கொட்டையை வெயிலில் காயவைத்து நன்றாக உலர்ந்த பின்னர் மறுபடியும் அக்கொட்டை அனைத்தையும் தலைவாரி சிக்கெடுத்து முதற் கட்டத்திற்கு தயார் படுத்துகிறார்.

நன்றாக காய்ந்த பிறகு ஒவ்வொரு கொட்டையும் ஏதேனும் ஒரு உருவத்தை நமக்கு காட்டும் ஆகையால் அதனை அடிப்படையாக வைத்து அதற்குரிய உருவத்தை வாட்டர் கலர் அல்லது பெயிண்ட் ஆகியவற்றைக் கொண்டு செம்மை படுத்தி பொம்மைகளை உருவாக்குகிறேன் என்கிறார் இளைஞர் அசோக்குமார்.

மேலும் அவர் கூறுகையில், நான் சிறிய வயதில் இதுபோன்ற பனங்கொட்டை தாத்தா உருவங்களை பல்வேறு வீடுகளில் பார்த்திருக்கிறேன். சுற்றுச்சூழலுக்கு எந்தவித கேடும் விளைவிக்காத இந்த விதைகளைக் கொண்டு விதவிதமான பொம்மைகள் செய்து விளையாடிய காலம் ஒன்று இருந்தது. அதனை ஏன் தற்போதைய தலைமுறை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து நமது பாரம்பரியத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்தின் பால் இதனை சேவை நோக்கோடு செய்து வருகிறேன்' என தெரிவித்தார்.

பனங்கொட்டை தாத்தா உருவம் மட்டுமன்றி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், பிள்ளையார், சிங்கம், குரங்கு போன்ற உருவங்களை உருவாக்கி அசத்துகிறார். குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் பனையின் அருமைகளை சொல்லிச் சொல்லி பனங்கொட்டையில் பொம்மைகள் உருவாக்க பயிற்றுவிக்கிறார்.

இதுகுறித்து 9-ஆம் வகுப்பு பயிலும் தீபிகா கூறுகையில், இது எங்களுக்கு மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பனங்கொட்டையின் மூலமாக வித்தியாசமான உருவங்களை உருவாக்க முடியும் என்பதை முழுவதுமாக தெரிந்து கொண்டேன். எனது நண்பர்களின் பிறந்தநாளன்று இந்த பொம்மைகளை பரிசாக வழங்குவேன் என்கிறார்.

நம் மரபு சார்ந்த வழக்கங்கள் எல்லாம் மறைந்து கொண்டிருக்கும் காலத்தில் அதனை நினைவூட்டி அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு கடத்திச் செல்வது ஆக்கப்பூர்வ வரலாற்றுப் பணி என்றால் அது மிகைச்சொல் அல்ல. அதனை கடமையாகப் செய்து கொண்டிருக்கும் அசோக்குமார் போன்ற இளைஞர்களே இன்றைய காலத்தில் நமக்கு தேவை.

இதையும் படிங்க: 'மாநில அரசாணையில் ஆளுநர் தலையிட முடியாது' மூத்த பத்திரிகையாளர் வெங்கட்ரமணன்!

Last Updated :Nov 30, 2020, 6:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.