ETV Bharat / city

'என்னது.. அழகர் மதுரைக்குள்ள வந்தாரா..?' - அழகரின் ஆயிரமாண்டு வரலாறும் வியப்பில் ஆழ்த்தும் சிறப்பு தொகுப்பும்

author img

By

Published : Apr 8, 2022, 9:57 AM IST

Updated : Apr 8, 2022, 7:48 PM IST

ராமனின் பாதுகையைக் கொண்டு அரசாண்ட பரதனுக்கும், ராமேஸ்வரம் கோயிலின் அருகேயுள்ள ராமர் பாதத்திற்கும் எவ்வளவு வரலாற்று சிறப்பு உள்ளதோ, அதேபோன்று மதுரை அழகரின் அழகரடிக்கும் ஒரு வரலாறு உள்ளது.

அழகர் மதுரை
அழகர் மதுரை

மதுரை: அழகர் மலை.. அழகர் கோயில்.. சரி..! அது என்ன? அழகர் பாதம்..? அதுவும் பாதத்தில் வழிபாடா? இதுபோன்ற கேள்விகளுக்கான இந்தக் கட்டுரையில் தெளிவாகக் காணலாம். மதுரை மாநகரின் கரிமேடு பகுதியின் மதுரா கோட்ஸ் அருகே உள்ளது அழகரடி எனும் பகுதி. இப்பகுதியில் 'அழகர் பாதம்' என்ற கோயில் உள்ளது. அந்த கோயிலின் உள்ளே இருக்கும் கருங்கல்லால் ஆன அழகர் பாதத்தை மக்கள் வணங்கிவருகின்றனர். குறிப்பாக அழகரடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நாள்தோறும் வழிபட்டுச் செல்கின்றனர்.

அழகரின் பொற்பாதம்: ஆடம்பரம் ஏதும் இல்லாமல் பார்ப்பதற்கு சிறிய கோயிலாக உள்ளது. ஆனாலும் கருவறைக்குள் பெருமாளின் திருவுருவம் சுவற்றோடு பதிக்கப்பட்டு பார்ப்பதற்கே கம்பீரமான உள்ளது. இந்த பெருமாளின் கால்களுக்குக் கீழே கருங்கல்லாலான ஓரடிக்கு ஓரடியில் இரண்டு பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. குங்குமமும் சந்தனமும் பூசப்பட்டு மலர்கள் அலங்காரத்துடன் பூஜை செய்யப்படுகிறது.

அப்படி நாள்தோறும் காலையும், மாலையும் பூஜைகள் நடைபெற்றுவருகின்றன. அழகரின் அடி, அதாவது அழகரின் பாதம் பட்டதால், இந்த இடம் 'அழகரடி' என்று அழைக்கப்படுவாக மக்கள் கூறுகின்றனர். இதே பெயரில் நான்கு தெருக்களும் கூட இந்த பகுதியில் அமைந்துள்ளன.

ஜல்.. ஜல்.. சலங்கைச் சத்தம்: இந்த அழகரடி குறித்து கோயிலைப் பராமரித்தும் பூஜைகளும் செய்து வரும் கலாவதி என்ற பெண் கூறுகையில், "பல நூறு ஆண்டுகளாக இந்தப் பாதத்தை மக்கள் வழிபடப்பட்டுவருகின்றனர். ஒரு காலத்தில் தேனூர் வைகையாற்றில் எழுந்தருளிய அழகர், அங்கிருந்து இந்த வழியாகச் செல்லும்போது, இங்கே ஓய்வெடுத்தார் என்று முன்னோர்கள் கூறினர். அதன் அடிப்படையில், அவரது பாதம் பதிந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலை 40 ஆண்டுகளாக பராமரித்து வருகிறோம்.

இந்த கோயிலை சுற்றி மற்றொரு சுவாரசியமான நிகழ்கவுகளும் நடந்துள்ளன. சில இரவு நேரங்களில் இங்கு ஜல்.. ஜல்.. எனும் சலங்கைச் சத்தம் கேட்பதாக எனது குடும்பத்தார் சொல்லி கேட்டுள்ளேன். அதேபோன்று, அவ்வப்போது நாசியைத் துளைக்கும் மலர்களின் நறுமணத்தையும் நாங்கள் நுகர்ந்துள்ளோம். எங்களை பொறுத்தவரை அவையெல்லாம் அழகர் பெருமாளின் நடவடிக்கைகளே என்று கருதுகிறோம்' என்றார். இதைக் கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும், இங்குள்ள மக்கள் அனைவருமே இதையே உண்மை என்கின்றனர்.


அழகர் பாதம் கோயில்: மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் தினத்தன்றே இந்தக் கோயிலிலும் திருவிழா நடைபெறுகிறது. சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன. அழகரைத் தரிசித்துவிட்டு வரும் பக்தர்களில் ஆயிரக்கணக்கானோர் இந்த 'அழகர் பாதம்' கோயிலுக்கு வருகை தந்து வணங்குவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது பக்தர்களுக்கு அன்னதானமும் நீர்-மோரும் வழங்கப்படுகிறது.

வேண்டுதல் நிறைவேறும்: இந்த கோயிலின் சிறப்பு குறித்து அதே பகுதியில் வசிக்கும் ஷகீலாதேவி கூறுகையில், "ஆனையூர், அனுப்பானடி உள்ளிட்ட மதுரையின் பல்வேறு கிராமப்புறங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வேண்டுதல் வைத்தால் நிறைவேறுவதாக கூறக்கேட்டிருக்கிறேன். இதனாலேயே, இங்கு எப்போதும் மக்கள் வழிபாட்டுக்குவருகின்றனர். கரோனா காலகட்டத்தில் அழகர் வைகை ஆற்றில் இறங்க வாய்ப்பில்லாமல் போனது. ஆனாலும் அந்த விழா நாள்களில் அழகர் பாதம் குறித்துத் அறிந்த மக்கள் இங்கு வந்து வழிபட்டனர்' என்றார்.

திருமலை நாயக்கர் மதுரையை ஆண்டபோது தான், சோழவந்தான் அருகேயுள்ள தேனூர் வைகையாற்றங்கரையில் எழுந்தருளிய அழகரை, மதுரைக்கு அழைத்து வந்து மீனாட்சி கோயில் விழாக்களோடு ஒருங்கிணைத்தார். இதற்கு முன்னதாக தேனூருக்கும் அழகரடிக்கும் மிகுந்த தொடர்பிருந்துள்ளது.

ஆட்டமாடி வரும் அழகர்: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின்போது, அழகர் மலையிலிருந்து மதுரைக்கு கள்ளழகராய் புறப்படும் அழகர், தங்கக்குதிரை மீதேறி, வைகையாற்றில் எழுந்தருளுவார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் 'ஹரி..கோவிந்தோ.. ஹரி.. கோவிந்தா' என்கிற கோஷங்களுடன் கண்டுகளிப்பர்.

சித்திரை மாத வெயிலில் ராஜ அலங்காரத்துடன் பரியேறிய பெருமாளை சுமந்தபடியே வரும் பக்தர்களுக்கு குளிர்ச்சியை தரவேண்டும் என்று பக்தர்கள் கூட்டம் தண்ணீரைப் பீச்சி அடிக்கின்றனர். இவர்கள் சாதாரணமாக இதைச் செய்யவில்லை. அதற்கும் விரதங்களோ, வேண்டுதல்களோ வைத்திருப்பர். இந்த விரதம்கூட கிட்டதட்ட கேரள ஐயப்ப சாமிக்கு விரதம் இருப்பதைப் போன்றது.

வரலாற்றில் மதுரைக்குள் வந்து சென்றது: திருமாலிருஞ்சோலை அழகர் கோயிலில் இருந்து மதுரைக்கு வரும் அழகர் கள்ளழகர் வேடமிட்டு வருகிறார். இதற்கு காரணமாக அந்த காலகட்டத்தில் அழகர் ஊர்வலத்தை ஒருமுறை கள்ளர்கள் மறித்தாகவும் இதனாலேயே அழகர் கள்ளழகராக எழுந்தருளி மதுரைக்கு வந்துள்ளார்.


இந்த சடங்குகளெல்லாம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு நிகழந்துள்ளது. இருப்பினும் கள்ளழகர் திருக்கோல அவதார வரலாற்றுக்கு முன்பும் அழகர் வைகையைக் கடந்து மதுரை நகருக்குள் வருகை தந்துள்ளார் என்பது மறைந்த வரலாற்று அறிஞர் தொ.பரமசிவனின் எழுத்துக்கள் குறிப்பிடுகின்றன. அந்த காலத்தில் இருந்தே அழகரடி கோயில் சிறப்பு பெற்றுவந்துள்ளது.

கள்ளழகர்கோயில் நிர்வாகம் கவனத்தில் கொள்ளுமா: இதுகுறித்து அழகர் பாதம் கோயிலைப் புனரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் ஜெயபாண்டி கூறுகையில், "பல நூறு ஆண்டு கால வரலாற்றின் எச்சம்தான் அழகர் பாதம். இந்தக் கோயில் 15 ஆண்டுகளுக்கு முன்பாக மதுரை மாநகராட்சியால் இடிக்கப்பட்டபோது, அழகரடியை அப்படியே தூக்கி ஓரமாக வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.

அதனை எடுத்து சிறுகோயில் ஒன்றை கட்டி அதில் வைத்து வழிபாட்டுவருகிறோம். மதுரை மீனாட்சி கோயில், அழகர் கோவில், வைகையாறு ஆகியவைக்கும் அழகர் பாதத்திற்கும் மிகுந்த தொடர்புள்ளது. அதனை நாங்கள் நம்புகிறோம். இதுகுறித்த செப்புப் பட்டயங்கள் இருப்பதாகவும் அழகர் கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அழகர் பாதம் கோயிலை அழகர் கோவில் நிர்வாகம் ஏற்று நடத்தினால் சிறப்பாக இருக்கும்" என்றார்.

ராமனின் பாதுகையைக் கொண்டு அரசாண்ட பரதனுக்கும், ராமேஸ்வரம் கோயிலின் அருகேயுள்ள ராமர் பாதத்திற்கும் எவ்வளவு வரலாற்று சிறப்பு உள்ளதோ, அதேபோன்று மதுரை அழகரின் அழகரடிக்கும் வரலாறு உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.


இதையும் படிங்க: வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்; விழாக்கோலம் கொண்ட மதுரை!

Last Updated :Apr 8, 2022, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.