ETV Bharat / city

சிலம்பத்தில் சிகரம் தொடத் துடிக்கும் மதுரை சிறுவன்!

author img

By

Published : Nov 13, 2021, 1:32 PM IST

Updated : Nov 16, 2021, 10:38 AM IST

மாவட்ட, மாநில, தேசிய, சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்துவருகிறார் மதுரையைச் சேர்ந்த சிறுவன் அதீஸ்ராம். சிலம்பம் கையில் வந்துவிட்டால் காற்றைப்போல் சுழன்றாடும் அதீஸ்ராம், சிலம்பத்தில் பயிற்சியாளராகத் திகழ வேண்டும் என்ற இலக்குடன் தன் திறமையை மேலும் மெருகேற்றிவருகிறார். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.

மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெறும் அதீஸ்ராம்
மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெறும் அதீஸ்ராம்

மதுரை: மதுரை மாவட்டம் அச்சம்பத்து அருகே வசித்துவருகிறார் ஜெயராமன். தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவரும் ஜெயராமனுக்கு, அதீஸ்ராம் இரண்டாவது மகன் ஆவார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக சிலம்பத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்துவரும் அதீஸ்ராம், விராட்டிபத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மாருதி சிலம்பப் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றுவருகிறார். மதுரை செக்காணூரணி அருகேயுள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு பயில்கிறார்.

சிலம்பத்தில் சிகரம் தொடத் துடிக்கும் மதுரை சிறுவன்

ஒற்றைக்கை சிலம்பம், இரட்டைக் கை சிலம்பம், சுருள்வாள், கத்தி, வேல்கம்பு, கத்திக் கேடயம், நீர் சுற்றுதல், தீக்கம்பு, நட்சத்திரப் பந்தம், சூரிய பந்தம், சக்கர பந்தம் எனச் சிலம்பத்தின் அனைத்துக் கூறுகளையும் தனது 11ஆவது வயதிலேயே கற்றுத் தேர்ந்துள்ளார்.

கடுமையான பயிற்சியில் மாணவர்

தற்போது 'சிலம்பன்' என்ற குறும்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவரும் அதீஸ்ராம், 2019ஆம் ஆண்டு செப்டம்பரில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகச் சிலம்ப சாம்பியன் போட்டியில் பங்கேற்று இரட்டைச் சிலம்பத்தில் முதல் பரிசு வென்றுள்ளார்.

விருதுகளுடன் அதீஸ்ராம்
விருதுகளுடன் அதீஸ்ராம்

2018ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பப் போட்டியில் பங்கேற்று முதல் பரிசை வென்றுள்ளார்.

ஸ்ரீ மாருதி சிலம்புப் பயிற்சிப் பள்ளியின் நிறுவனர் ராஜ மகா குரு ஸ்ரீ ராமகிருஷ்ணன் கூறுகையில், "ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியருக்கு சிலம்பத்தைக் கற்றுக் கொடுக்கும் நான்கு தலைமுறை பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான்.

மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் உடன் மாணவர் அதீஸ்ராம், ராஜ மகா குரு ஸ்ரீ ராமகிருஷ்ணன்
மக்கள் கண்காணிப்பகம் நிர்வாக இயக்குனர் ஹென்றி டிபேன் உடன் மாணவர் அதீஸ்ராம், ராஜ மகா குரு ஸ்ரீ ராமகிருஷ்ணன்

சிலம்பை சிறப்பிக்கும் அரசு

என்னுடைய மாணவர் அதீஸ்ராம் என்பதில் எனக்குப் பெருமை. தான் கலந்துகொண்ட போட்டிகள் அனைத்திலும் முதல் பரிசை மட்டுமே வென்றவர். தற்போது தொடர்ச்சியாக மூன்று மணி நேரம் சிலம்பு சுத்தும் பயிற்சியை என்னிடம் பெற்றுவருகிறார்.

இது மிகக் கடினமான பயிற்சியாகும். மலேசியாவில் தங்கப்பதக்கம் வென்றார். அதற்குப் பிறகு, அந்தத் தொடர் லண்டனிலும் இலங்கையிலும் நடைபெற்றது. கரோனா தொற்றுப் பரவல் காரணமாக எங்களால் செல்ல முடியவில்லை. மீண்டும் மலேசியாவில் சர்வதேச சிலம்பப் போட்டி நடைபெறவுள்ளது. அதற்குத்தான் தற்போது கடுமையாகப் பயிற்சி மேற்கொண்டுவருகிறார்" என்றார்.

மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெறும் அதீஸ்ராம்
மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டுச் சான்றிதழ் பெறும் அதீஸ்ராம்

அண்மையில் தமிழ்நாடு அரசு சிலம்ப விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சிலம்பப் பயிற்சியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கியுள்ளதோடு, சிலம்பம் கற்றுக் கொள்ளும் மாணவர்களுக்கு மூன்று விழுக்காடு வேலையில் ஒதுக்கீடுசெய்துள்ளது. அதேபோன்று சிலம்பத்தை பாடத்திட்டத்தில் சேர்க்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அரசு விழாவிலும் அதீஸ்ராம்

அதீஸ்ராம் தந்தை ஜெயராமன் கூறுகையில், "அதீசுக்கு ஏழு வயது இருக்கும்போது சிலம்பக் கலையில் நாட்டம் ஏற்பட்டது. அதற்கு, எந்தவிதத்திலும் முட்டுக்கட்டை போட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து ஸ்ரீ மாருதி சிலம்பப் பள்ளியில் சேர்த்துவிட்டேன். சிலம்பம் முதன்மையாக இருந்தாலும் ஸ்கேட்டிங், வில்வித்தையிலும் பயிற்சி பெற்றுவருகிறார்.

அவரது ஆர்வத்திற்கு எந்தவிதத்திலும் தடையேற்பட்டு விடக்கூடாது என்பதில் முழு உறுதியுடன் உள்ளேன். ஒன்றிய அரசும், கேலோ இந்தியாவில் சிலம்பம் விளையாட்டை சேர்த்துள்ளது. அதற்காக முயற்சி மேற்கொண்டு முதலமைச்சருக்கும், அமைச்சர் மெய்யநாதனுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

விருதுகளை குவிக்கும் அதீஸ்ராம்
விருதுகளை குவிக்கும் அதீஸ்ராம்

மதுரையில் நடைபெற்ற 72ஆவது குடியரசு தின விழாவில் கடந்த ஜனவரி 26ஆம் நாள் அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ளார். அரசு சார்பாக நடைபெறும் பல்வேறு விழாக்களில் அதீஸ்ராமின் சிலம்பம் முக்கிய நிகழ்வாக இடம்பெறுகிறது.

விருதை குவிக்கும் வித்தைக்காரர்

இது குறித்து மாணவன் அதீஸ்ராம் கூறுகையில், "நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக சிலம்பம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தேன். பிறகு சாலையோரம் சிலம்பப் பயிற்சி பெற்றவர்களைப் பார்த்து எனக்கும் ஆர்வம் ஏற்பட்டது. வரும் காலத்தில் சிலம்பத்தில் மிகச் சிறந்த பயிற்சியாளராக வர வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம்" என்கிறார்.

உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நூறு குழந்தைகளைத் தேர்வுசெய்து உலக குழந்தை சாதனையாளர்கள் என்னும் விருதை டிரிம் அச்சீவர்ஸ் என்ற ஹரியானாவைச் சேர்ந்த அமைப்பு ஒவ்வொராண்டும் வழங்கி கெளரவித்துவருகிறது.

டிரிம் அச்சீவர்ஸ் விருது பெறும் அதீஸ்ராம்
டிரிம் அச்சீவர்ஸ் விருது பெறும் அதீஸ்ராம்

அந்த விருதுக்கு சிலம்பப் பிரிவில் 2021ஆம் ஆண்டிற்கான விருதை சிறுவன் அதீஸ்ராம் பெறவிருக்கிறார். சிலம்பக் கலையில் பல்வேறு நுணுக்கங்களோடு தன்னை மெருகேற்றிவரும் அதீஸ்ராம், மேலும் பல்வேறு விருதுகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இதையும் படிங்க: Exclusive: 'நான் தென்னிந்திய குடும்பத்தைச் சேர்ந்தவன், வெற்றி ஒன்றே இலக்கு'- வெங்கடேஷ்

Last Updated :Nov 16, 2021, 10:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.