ETV Bharat / city

ஜிஎஸ்டி குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழ்நாடு அரசு கடைபிடிக்க வேளாண் சங்கத்தினர் கோரிக்கை

author img

By

Published : Jul 17, 2022, 11:19 AM IST

தமிழ்நாடு அரசு ஜிஎஸ்டி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை கடைப்பிடிக்க இது சரியான தருணமாகும் என வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேல் கோரிக்கை விடுத்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் ஜி.எஸ்.டி தீர்ப்பை தமிழக அரசு கடைபிடிக்க வேளாண் சங்கத்தினர் கோரிக்கை
உச்சநீதிமன்றத்தின் ஜி.எஸ்.டி தீர்ப்பை தமிழக அரசு கடைபிடிக்க வேளாண் சங்கத்தினர் கோரிக்கை

மதுரை: அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீது மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்துள்ள நிலையில், இதுகுறித்து மதுரையில் உள்ள வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ரத்தினவேல் நேற்று (ஜூலை 16) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், "அனைத்துத் தரப்பு மக்களும் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வரிவிலக்கு தொடரவேண்டும்.

வணிகப்பெயர் இருந்தாலும் வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்று எங்கள் வேளாண் உணவுத்தொழில் வர்த்தக சங்கம் உள்ளிட்ட அனைத்திந்திய அளவில் பல்வேறு வர்த்தக சங்கங்கள் வலிமையாக வலியுறுத்தியும் கூட, இதுவரை வரிவிலக்கு பெற்றிருந்த உணவுப் பொருள்களுக்கு 2022 ஜூலை 18ஆம் தேதி (நாளை) முதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது.

அரிசி, மாவு, பயறு, பருப்பு வகைகள், தயிர், பன்னீர், மோர், வெல்லம், கண்டசரி, சீனி, சோளம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் வரி வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் விலைகள் உயர்ந்து மக்கள் பாதிக்கப்படுவர்.

முன்னதாகவே பேக் செய்து லேபிள் இடப்பட்ட, எடையளவு சட்டப்படி "சில்லறை விற்பனைக்கான பேக்கிங்கிக்கு" வரி விதிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சிலின் 47ஆவது கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஆனால் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல், "சில்லறை விற்பனைக்கான பேக்கிங்" என்ற வார்த்தைகள் விடுபட்டுள்ளன.

எனவே மொத்த விற்பனைக்கான பேக்கிங்கிக்கும் வரி உண்டு என வரி ஆலோசகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஜிஎஸ்டி அமலாக்கத்தில் ஏற்படுகின்ற குழப்பத்திற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு. அமலாக்கத் தேதி நெருங்கிவிட்ட சூழலில் உணவுப்பொருள் விற்பனையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாது திகைத்துப்போய் உள்ளனர்.

ஜிஎஸ்டி வரி குறித்து தொழில் வணிகத்துறையின் குரல் யார் காதிலும் விழுவதில்லை. பல்வேறு பொருள்களுக்கும், சேவைகளுக்கும் வரி உயர்வை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்த அமைச்சர்கள் வணிகத்துறையின் கருத்துக்களை கேட்கவே இல்லை.

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது என மாநில அரசுகளின் வரி விதிக்கும் உரிமையை நிலை நாட்டி உச்ச நீதிமன்றம் 19.05.2022ஆம் நாள் வெளியிட்ட தீர்ப்பை தமிழ்நாடு அரசு கடைப்பிடிப்பதற்கு சரியான சந்தர்ப்பம் இது.

அன்றாடம் பயன்பாட்டிற்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்கக் கூடாது என்பது தமிழ்நாடு அரசின் அறிவிக்கப்பட்ட கொள்கை முடிவாகும். உணவுப் பொருள்களுக்கு வரிவிதிக்கும் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: வணிகம் புரிதலை எளிதாக்குதல் தரவரிசையில் 3ஆவது இடம்: தமிழ்நாடு சிறந்த சாதனையாளர் பிரிவிற்கு முன்னேற்றம் - இதுதான் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.