ETV Bharat / city

'புதிய அணைகள் 60 ஆண்டுகளில் கட்டப்படாததால் இருக்கின்ற அணைகளை நாம் காக்க வேண்டும்'

author img

By

Published : Oct 3, 2022, 5:46 PM IST

புதிய அணைகள் எதுவும் 60 ஆண்டுகளில் கட்டப்படாததால் இருக்கின்ற அணைகளை நாம் காக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகா செயலாளர் பரமசிவம் தெரிவித்தார்

Etv Bharat
Etv Bharat

கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் விவசாயத்தையும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில், முன்னாள் முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு - கேரள அரசுகளுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் நீர்ப் பங்கீட்டு கொள்ளப்படுகிறது.

பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டத்தை PAP என்று சுருக்கமாக கூறுவதுமுண்டு. இத்திட்டத்தில் சோலையாறு, பரம்பிக்குளம், காடம்பாறை, ஆழியாறு உட்பட 10 அணைகள் உள்ளன. இதில் காடம்பாறை அணை மட்டும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரால் கட்டப்பட்டது.

காடம்பாறை மற்றும் ஆழியாறு அணைகளில் நீர் இருப்பு இருக்கும் வேளைகளில் மின் நிலையத்தின் மூலமாக மின்சாரம் உற்பத்தியும் செய்து வந்தனர். இதன்மூலம் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் மின் தேவைகள் பூர்த்தி செய்யபட்டன.

இந்நிலையில், அணைகளில் போதிய நீர் இருந்தும் மின் உற்பத்தி செய்வதை நீண்டகாலமாக நிறுத்தி வைத்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

தற்போது அதிக விலை கொடுத்து மற்ற மாநிலங்களில் மின்சாரம் பெற்றுவரும் நிலையில், நமது நீர் மின் உற்பத்தி நிலையங்களை செயல்படுத்தினாலே கணிசமான வருமானம் அரசுக்குக் கிடைக்கும். ஒரு சில அணைகளில் மின் உற்பத்திக்காக நீரை வெளியேற்றினாலும், மீண்டும் அணைகளுக்கே அந்த தண்ணீர் சேரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் உள்ள அணைகள் நீர் நிரம்பியே காணப்படுகிறது. இருந்தும் அரசு ஏன் மெத்தனப்போக்காக செயல்பட்டு அதிக விலை கொடுத்து வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்குகிறது என விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகா செயலாளர் பரமசிவத்தின் பேட்டி

அதேபோல் PAP திட்டத்தில் முக்கியப்பங்காற்றி வரும் 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணை போதிய பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இதனால், மதகு உடைந்து 6 TMC தண்ணீர் கேரளாவில் உள்ள அரபிக்கடலில் வீணாக கலந்து வருகிறது.

வெளியேறிய 6 TMC தண்ணீரை கொண்டு 40 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிட்டு விளைச்சல் கண்டு இருக்கலாம் எனவும்; காமராஜர், எம்ஜிஆர், கக்கன் போன்ற தலைவர்கள் விட்டுச்சென்ற வளங்களையும், கட்டமைப்புகளையும் பேணி காக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை எனவும் விவசாயிகள் கூறினர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுகா செயலாளர் பரமசிவம் கூறுகையில், 'புதிய அணைகள் எதுவும் 60 ஆண்டுகளில் கட்டப்படாததால் இருக்கின்ற அணைகளை நாம் காக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.


இதையும் படிங்க: பாலிவுட்டிலும் சாதித்த 'விக்ரம் வேதா' படக்குழு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.