ETV Bharat / city

சீருடைப் பணியாளர் தேர்வு முறைகேடு - சிபிஐ விசாரணை கோரி வழக்கு!

author img

By

Published : Feb 18, 2020, 1:21 PM IST

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணைய தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

highcourt
highcourt

காவல் துறையில் இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறை வார்டன்கள், தீயணைப்பு வீரர்கள் என 8 ஆயிரத்து 888 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பாணையை வெளியிட்டது. பின், எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஆகியவை நடத்தப்பட்டு, பிப்ரவரி 2ஆம் தேதி, தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில், வேலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 19 பேர், விழுப்புரத்தில் 763 பேர் தேர்வானதாகவும், இவர்கள் அனைவரும் 'சிகரம்' என்ற பயிற்சி மையத்தில் படித்தவர்கள் எனவும், இவர்களில் பலர் முறைகேடு செய்து தேர்வானதாகக் கூறி இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அந்த மனுவில், தேர்வில் கலந்துகொண்டவர்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் மொழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீடு ஆகியவை முறையாக வழங்கப்படவில்லை என்பதால், தற்காலிக தேர்வுப் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

சீருடைப் பணியாளர் தேர்வாணைய அலுவலர்கள் உதவியுடன், தனியார் பயிற்சி மையங்கள் காவலர் தேர்வுகளில் முறைகேடுகளை நடத்தி வருவதாகவும் அதில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு முறைகேடுகளைவிட, சீருடைப் பணியாளர் தேர்வுகளில் பெரியளவில் மோசடி நடந்துள்ளதாலும் மாநில காவல் துறை விசாரித்தால் நியாயம் கிடைக்காது என்பதால் சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இதையும் படிங்க: குரூப் 2 தேர்வு முறைகேடு: விசாரணைக்கு ஆஜராக ஒரே ஊரைச் சேர்ந்த 12 பேருக்கு அழைப்பாணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.