ETV Bharat / city

பாலிடெக்னிக் தேர்வு கட்டுபாடுகள் - மையத்திற்குள் நகை, பெல்ட், ஷூ அணிய தடை

author img

By

Published : Oct 23, 2021, 3:01 PM IST

பாலிடெக்னிக் தேர்வினை எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் பெல்ட், நகைகள், ஷூ, அதிகம் உயரம் கொண்ட செருப்பு போன்றவை அணியக் கூடாது. சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும் என நீட் தேர்வு கட்டுபாடுகளை போல ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வறை நுழைவுச்சீட்டில் அறிவுறுத்தியுள்ளது.

trb polytechnic exam restrictions
trb polytechnic exam restrictions

சென்னை: பாலிடெக்னிக் தேர்வினை எழுதும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் வரும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடு வழிமுறைகளை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ளது.

2017-18ஆம் ஆண்டிற்கான அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகள் வருகின்ற அக்டோபர் 28 முதல் 31ஆம் தேதி வரையிலும், காலை மற்றும் மாலை நேரத்திலும் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு www.trb.tn.nic என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பயனர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட்டு, 22ஆம் தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

trb polytechnic exam restrictions
பாலிடெக்னிக் தேர்வு கட்டுப்பாடு வழிமுறைகள்

தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டு இணையதளம் மூலம் மட்டுமே வழங்கப்படும். நேரடியாக வழங்கப்படாது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தேர்வு நுழைவுச்சீட்டில், தேர்வின்போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளளன.

அதில், "தேர்வர்களுக்கான தேர்வு மையம், மாவட்டம் போன்றவை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கொள்கைப்படி குலுக்கல் முறையில் நடைபெறும். தேர்வு மைய நுழைவுச் சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள நேரத்துக்கு, நுழைவுச் சீட்டின் பிரதியுடன் தேர்வர்கள் செல்ல வேண்டும். நுழைவுச்சீட்டு இல்லாவிட்டால் தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்.

மேலும் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையுடன், விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்த புகைப்படத்தின் அசல் பிரதியும் தவறாமல் எடுத்து வர வேண்டும். காலை தேர்வுக்கு 7.30, பிற்பகல் தேர்வுக்கு 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பதாரர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

தேர்வு மையத்திற்கு முன்பு காவல்துறை மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் தேர்வர்களை சாேதனைச் செய்தப்பின்னர் அனுப்புவார்கள். தேர்வு மையத்திற்குள் மின்னணு சாதானப்பொருட்கள், கைபேசி, மைக்ரோ போன், கால்குலேட்டர், மடிக்கணினி, பேஜர், டிஜிட்டல் டைரி போன்ற மின்சாதனப் பொருட்களும் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. தேர்வு மையத்தில் பொருட்களை வைத்தால் அதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பொறுப்பேற்காது.

trb polytechnic exam restrictions
பாலிடெக்னிக் தேர்வு கட்டுப்பாடு வழிமுறைகள்

தேர்வு மையத்திற்குள் பெல்ட், நகைகள், ஷூ, அதிக உயரம் கொண்ட செருப்பு போன்றவை அணியக் கூடாது. சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும். தேர்வு மையத்திற்குள் நுழைவுச் சீட்டினை தவிர வேறு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.

தேர்வு அறையில் தேர்வர்களுக்கு விடைகளை போட்டுப் பார்பதற்கு தேவையான தாள்கள், பேனா, பென்சில் அளிக்கப்படும். தேர்வு முடிந்தப் பின்னர் விடைகளை போட்டுப் பார்த்த தாளை தேர்வு அறையின் கண்காணிப்பாளரிடம் மீண்டும் திருப்பி தந்துவிட்டு வர வேண்டும்.

பாலிடெக்னிக் தேர்வுகள் 3 மணி நேரம் நடைபெறும். 150 கேள்விகள் 190 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். பகுதி 1இல் 110 கேள்விகள் தலா 1 மதிப்பெண் வீதம் 110 மதிப்பெண்களுக்கும், பகுதி 2இல் 40 கேள்விகள் தலா 2 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும். தேர்வர்கள் தவறான விடைகளை அளித்தால் அதற்காக மதிப்பெண்கள் குறைக்கப்படாது.

தேர்வு அறையில் அமைதி கடைபிடிக்க வேண்டும். தேர்வு அறையில் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்ட நபர்களை தவிர வேறு நபர்களுக்கு அனுமதி கிடையாது. தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், துறையின் மூலம வரும் காலத்திலும் தேர்வெழுத முடியாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்வு அறைக்குள் நுழையும் போது உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுவதுடன், கைகளை கிருமி நாசினி வைத்து சுத்தம் செய்யவேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட 26 கட்டுப்பாடுகளையும் பின்பற்றுவேன் என உறுதிமாெழி பெறப்படுகிறது. மேலும் தேர்வினை ரத்துச் செய்யும் அதிகாரம் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உள்ளது எனவும் அறிவித்துள்ளது.

தேர்விற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மீண்டும் ஒரு முறை தேர்வு மையத்தை குறிப்பிட்டு நுழைவுச்சீட்டு வெளியிடப்படும். தேர்வர்கள் அதனையும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்பது குறிபிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிக்கிய இளங்கோவன்: 21 கிலோ தங்கம், 10 சொகுசு கார்கள் பறிமுதல் - அதிர்ந்துபோன அலுவலர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.