ETV Bharat / city

11ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்த வலியுறுத்தல்

author img

By

Published : Feb 4, 2022, 11:15 AM IST

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரசுப் பொதுத்தேர்வை ரத்துசெய்யக் கூடாது எனத் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்களுக்கு பொதுத்தேர்வு
மாணவர்களுக்கு பொதுத்தேர்வு

சென்னை: தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார் கூறுகையில், "தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுப் பொதுத்தேர்வு நடத்தாமல் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துவிட்டனர்.

இந்நிலையில், இந்த ஆண்டும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தாமல் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புவரை, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது மிகவும் வேதனையான செயலாகும். கல்வியைக் கேள்விக்குறியாக்கும் நிலை. இனி உள்ள இரண்டு மூன்று மாதங்களும் பாடமே நடத்தாமல் அப்படியே விட்டுவிடுவதற்கான திட்டமாகத் தெரிகிறது.

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஆர். நந்தகுமார்

அரசு விளக்கமளிக்க வேண்டும்

11ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வை ரத்துசெய்ய வேண்டும் என்று யார் கேட்டார்கள்? எதற்காக இந்தத் திட்டம் என்பதை அரசு விளக்க வேண்டும். தமிழ்நாட்டில் தனியார் பள்ளியில் அதிகமான மாணவர்கள் படித்துவருகின்றனர்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தவில்லை என்றால் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழில் எந்த மதிப்பெண்ணை போடுவீர்கள்? அந்த மாணவர்களின் உயர் கல்வி கேள்விக்குறி ஆக்கப்படும். அவர்களின் திறமை என்னவென்று அவர்களுக்கே தெரியாமல் போகும். உயர்கல்வி படிப்பதற்கு 11ஆம் வகுப்பு பாடத்திட்டம் மிக மிக முக்கியம்.

11ஆம் வகுப்பு மதிப்பெண்களைச் சேர்த்துதான் உயர் கல்வியில் சேர்வதற்கான மதிப்பெண்ணை நிர்ணயிக்க முடியும். இரண்டு ஆண்டுகளாக தனியார் பள்ளி மாணவர்களிடம் தேர்வுக் கட்டணத்தை அரசுக்குச் செலுத்தியும், தேர்வு எழுதாமல் அந்தக் கட்டணத்தைத் திருப்பியும் தராமல் இருப்பதுபோல் இந்த ஆண்டும் செய்வதற்கான திட்டமா?

இந்த ஆண்டும் பொதுத்தேர்வு நடத்தவில்லை என்றால் வருங்காலங்களில் மாணவர்கள் பல்வேறு தகுதித் தேர்வு எழுதுவதற்கான தகுதியையும் திறமையையும் இழந்துவிடுவார்கள் என்பதை அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் நலன்கருதி அரசு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவதை உறுதிசெய்திட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நீட் மசோதா: அரசியல் சாசனம் (பிரிவு 200) என்ன சொல்கிறது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.