ETV Bharat / city

உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் எம்.எம். சுந்தரேஷ் - மருத்துவர் ராமதாஸ் வாழ்த்து

author img

By

Published : Aug 27, 2021, 10:32 PM IST

உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் எம்.எம். சுந்தரேஷ், வரலாற்று தீர்ப்புகளை வழங்க வாழ்த்துகள் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாகும் எம்.எம். சுந்தரேஷ்
உச்சநீதிமன்ற நீதிபதியாகும் எம்.எம். சுந்தரேஷ்

சென்னை: உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதியரசரான எம்.எம். சுந்தரேஷ், உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த மேலும் ஒரு நீதியரசர் உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்று சென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்த சில நாள்களில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ள நீதியரசர் எம்.எம்.சுந்தரஷுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உச்ச நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 33 நீதிபதிகள் பணியிடங்களில் 10 இடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் நோக்கத்துடன் ஒன்பது நீதிபதிகளை மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரையுடன் ஒன்றிய அரசு நியமித்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள ஒன்பது நீதிபதிகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் பணியாற்றி வந்த நீதியரசர் எம்.எம். சுந்தரேஷும் ஒருவர் ஆவார்.

தமிழ்நாட்டு மக்களின் நீதியரசர்

ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் இராமசுப்பிரமணியன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் நிலையில், நீதியரசர் எம்.எம்.சுந்தரேஷும், பதவி உயர்வின் மூலம் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் இரண்டாக உயர்ந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாட்டிற்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்று மனவருத்தம் கொண்டிருந்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நீதியரசர் சுந்தரேஷின் நியமனம் மிகுந்த மனநிறைவை அளித்திருக்கிறது.

ராமதாஸ்
ராமதாஸ்

நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு அனைத்து வகைகளிலும் தகுதியானவர். 23ஆவது வயதில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட அவர், 29ஆவது வயதில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர். விசாரணைகளின் போது அவர் முன்வைத்த துல்லியமான வாதங்கள் பல தருணங்களில் நீதிபதிகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

கடுஞ்சொல் உரைக்காதவர்

சென்னை உயர் நீதிமன்றத்தில் 18 ஆண்டுகள் சிறப்பாக வழக்குகளை நடத்திய அவர், 2009ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 12 ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான வழக்குகளை விசாரித்துள்ள நீதியரசர் சுந்தரேஷ், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் ஏராளமான தீர்ப்புகளை வழங்கியிருக்கிறார்.

ராமதாஸ்
ராமதாஸ்

‘காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்’ என்ற திருக்குறளுக்கு ஏற்ற வகையில் மிகவும் எளிமையானவராகவும், வழக்குதாரர்கள், வழக்கறிஞர்களிடம் கடுஞ்சொல் உரைக்காதவராகவும் திகழ்பவர். இறுதி நம்பிக்கையாக நீதிமன்றங்களை நாடி வரும் பொதுமக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்ற கொள்கை கொண்டவர். சமூகநீதியில் மிகுந்த அக்கறை கொண்டவர்.

ராமதாஸின் வாழ்த்துகள்

தமிழ் மொழிப்புலமை கொண்டவர், விவசாயத்தின் மீது பற்று கொண்டவர், நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர், அவர் வழங்கும் தீர்ப்புகளில் இந்த அம்சங்கள் சாதகமான வழிகளில் எதிரொலிக்கும், மொத்தத்தில் நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் மக்களின் நீதிபதியாவார்.

ராமதாஸ் வாழ்த்து
ராமதாஸ் வாழ்த்து

ஒப்பீட்டளவில் இளம் வயதில் உச்ச நீதிமன்ற நீதியரசராக பொறுப்பேற்கவிருக்கும் எம்.எம். சுந்தரேஷ், ஆறு ஆண்டுகளுக்கு அப்பொறுப்பில் நீடிப்பார். உச்ச நீதிமன்றத்தின் மூன்றாவது மூத்த நீதியரசர் என்ற நிலைக்கு அவர் உயரக்கூடும். உச்ச நீதிமன்ற நீதிபதியாக எம்.எம். சுந்தரேஷ் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்குவார், அவரது பணி சிறக்க வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் பிரிவு உபசார விழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.