ETV Bharat / city

’வரி விலக்கு குறித்த கேள்விக்கு ஒன்றிய அரசிடம் உரிய பதில் இல்லை’ - பழனிவேல் தியாகராஜன்

author img

By

Published : May 29, 2021, 10:24 PM IST

தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் போன்றவைக்கு வரி விலக்கு அளித்தால் என்ன பாதிப்பு வரும் என்ற கேள்விக்கு, ஒன்றிய அரசிடம் பதில் இல்லை என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

PTR, PALANIVEL THIAGARAJAN, பழனிவேல் தியாகராஜன், பிடிஆர்
ptr-palanivel-thiagarajan-attacks-central-government

சென்னை: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில், 43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று (மே.28) நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு சார்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று (மே.29) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "நேற்று நடைப்பெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட பெரிய மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் சார்பில் கரோனா மருந்துகள், தடுப்பூசி, மருத்துவ உபகரணங்கள் மீது வரி விலக்கு அல்லது வரி குறைப்பு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் வருமானம் குறைந்துவிடும் என காரணம் கூறி மத்திய அரசு அதற்கு சம்மதிக்கவில்லை.

வரி விலக்கு அளித்தால் அல்லது குறைத்தால் எவ்வளவு இழப்பு வரும் என்ற கேள்விக்கு மத்திய அரசிடம் உரிய பதில் இல்லை" எனக் கூறிய அமைச்சர், ”பேரிடர் காலத்திலும் மருந்து, தடுப்பூசி, ஆக்ஸிஜன், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றுக்கு வரி பெற்றுதான் அரசு பிழைக்க வேண்டும் என்றால் அது திறமையில்லாத அரசு” என ஒன்றிய அரசை விமர்சித்தார்.

தொடர்ந்த அவர், "மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கவே, கடன் வாங்க வேண்டியுள்ள சூழலில் மத்திய அரசு உள்ளது. மத்திய அரசு பெறும் கடன் குறுகிய கால கடனாக இல்லாமல் நீண்ட நாள்களுக்கான கடனாக இருக்கும்பட்சத்தில், மாநில அரசுகளுக்கு நிதி வழங்குவதில் பிரச்சனை இருக்காது என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆட்சியின் தவறான அணுகுமுறையால் தமிழ்நாட்டின் வரி வருமானம் குறைந்துவிட்டது. உரிய முறையில் வரி வருமானம் வந்திருந்தால் கரோனா நிவாரணம் அதிக அளவில் கொடுத்திருக்க முடியும்" எனவும் அவர் கூறினார்.

வரி வருமானத்தை எவ்வாறு உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிக்கும் அறிவுரையின்படி நாங்கள் செயல்படுவோம் எனவும் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: பேரிடர் காலத்தில் மருந்துகளுக்கு வரிவாங்கி பிழைக்கும் திறமையில்லாத ஒன்றிய அரசு’ - பிடிஆர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.