ETV Bharat / city

'அடையாற்றில் பாதிய காணோம்' - பசுமை தீர்ப்பாயத்தில் மனு!

author img

By

Published : Aug 26, 2020, 5:27 PM IST

சென்னை: மணப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலர் ஸ்ரீதரன் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், அடையாறு ஆற்றில் பாலம் கட்டுவதாகக் கூறி சுருக்கிவிட்டனர் என்று குற்றஞ்சாட்டி மனு அளித்துள்ளார்.

அடையாறு ஆறு
அடையாறு ஆறு

சென்னை: அடையாறு ஆற்றின் குறுக்கே ஓ.டி.ஏ சார்பாக பாலம் கட்டியுள்ளதால் நீர்வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளதா? என நேரில் ஆய்வுசெய்து, அறிக்கையை தாக்கல் செய்ய பொதுப்பணித்துறைக்கு தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மணப்பாக்கத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலர் ஸ்ரீதரன், தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “சென்னையில் கூவம், அடையாறு ஆறு, ஓட்டேரி நல்லா, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை நான்கும் முக்கிய நீர் ஆதாரங்களாகவுள்ளது. இதில் அடையாறு ஆறு மணிமங்கலத்தில் தொடங்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

இதில் 2015 நவம்பர், டிசம்பர் மாதம் 85.4 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி கனமழை காரணமாக அடையாறு ஆற்றில் திறந்து விடப்பட்டதில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஏராளமான தொழிற்சாலைகளின் ஆலைக் கழிவுகளும் அடித்துச் செல்லப்பட்டன.

இவ்வேளையில், அடையாறு ஆற்றின் குறுக்கே ஓ.டி.ஏ சார்பாக ஐரீஷ் மற்றும் பெய்லி என்ற சட்டவிரோதமாக பாலம் கட்டப்பட்டதால் 100மீ அகலமுள்ள ஆறு, 40 மீட்டராக சுருங்கியதால் நீர்வழித்தடம் பாதிக்கப்பட்டு, மழை காலங்களில் வெள்ள நீர் குடிசை பகுதிக்குள் புகுந்துவிடுகிறது.

வெள்ளத்தின் காரணமாக உடைந்த பெய்லி பாலத்தின் கட்டுமானப் பொருள்களை அப்புறப்படுத்த ஓ.டி.ஏ நிர்வாகத்திடமும், பொதுப்பணித்துறை அலுவலர்களிடமும் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால், ஓ.டி.ஏ சார்பில் புதிய பாலங்கள் கட்டவும், உடைந்த பாலத்தின் பாகங்களை அகற்ற வேண்டும், நீர்வழித்தடத்தை தடை செய்யும் தூண்களை அகற்ற வேண்டும், அபராதத்துடன் ஓ.டி.ஏ நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தின் உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் சாய்பால் தாஸ்குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, பொதுப்பணித்துறை அலுவலர்கள் நேரில் ஆய்வுசெய்து இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.