ETV Bharat / city

”இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழியாக முடியாது” முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Jul 30, 2022, 4:10 PM IST

Updated : Jul 30, 2022, 4:28 PM IST

இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழியாக முடியாது. ஒற்றை மொழியை, ஒற்றை மதத்தை, ஒற்றைப் பண்பாட்டை திணிக்க நினைப்பவர்கள் நாட்டின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

”ஒற்றை மொழியை திணிக்க நினைப்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறார்கள்” ஒன்றிய அரசை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
”ஒற்றை மொழியை திணிக்க நினைப்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறார்கள்” ஒன்றிய அரசை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 30) கேரள மாநிலம், திருச்சூரில் மலையாள மனோரமா நியூஸ் சார்பில் நடைபெற்ற ‘இந்தியா - 75’ என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.

அப்போது ஸ்டாலின் பேசுகையில், "மலையாள மனோரமா இதழானது 1890ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று, இந்தியா முழுவதும் அதிகமான வாசகர்களை கொண்ட இதழாக இருக்கிறது. வெறும் செய்தி நிறுவனமாக மட்டுமல்லாமல், தனக்கென ஒரு கொள்கை - கோட்பாடு கொண்ட நிறுவனமாக இருந்ததால், பல்வேறு சோதனைகளை சந்தித்தது. இத்தகைய துணிச்சல்தான் இந்தளவுக்கு இந்த நிறுவனத்தை வளர்த்துள்ளது.

கேரளாவை பொறுத்தவரையில், மலையாள மனோரமா என்பது பெரும்பாலானவர் குடும்பத்தில் ஓர் அங்கம் என்று சொல்லத்தக்க நிலையை அடைந்துள்ளது. அத்தகைய பெருமைமிகு நிறுவனத்தின் சார்பில் நடைபெறும் கருத்தரங்கில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகளானதையொட்டி, இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

”இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழியாக முடியாது” முதலமைச்சர் ஸ்டாலின்

கூட்டாட்சிக் கருத்தியலும், விடுதலையால் பெற்ற உரிமைகளும், வளர்ச்சிக்கான முற்போக்குச் சிந்தனைகளும் இணைந்துதான் இந்தியாவை இந்தளவுக்கு வளர்த்துள்ளன. இந்தியாவின் வேற்றுமைகளை மதிக்கக் கூடியவராக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு இருந்தார். பல்வேறு மொழி பேசும் மக்கள் ஒற்றுமையாக வாழ மொழிவாரி மாகாணங்களை உருவாக்கிக் கொடுத்தார். இந்தி பேசாத மக்கள், விரும்பும் வரை இந்தி அவர்கள் மீது திணிக்கப்பட மாட்டாது என்று உறுதி அளித்தார்.

ஐந்தாண்டுத் திட்டங்களைக் கொண்டுவந்து அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொடுத்தார். வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்தினார். அனைத்து மாநிலங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கித் தந்தார். மதச்சார்பற்ற மனிதராக இருந்தார். சகோதரத்துவத்தை வலியுறுத்தினார். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அனைத்து தரப்பும் விவாதம் செய்யும் களமாக நாடாளுமன்றத்தை நடத்திக் காட்டினார்.

கூட்டாட்சி நெறிமுறைகளை அடிக்கடி பேசினார். இந்தியா முழுவதும் இருந்த பல்வேறு மாநில முதலமைச்சர்களோடு அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்தினார். கடிதங்கள் எழுதினார். முதலமைச்சர்களுக்கு அவர் எழுதிய கடிதங்களே பல்வேறு தொகுப்புகளாக வெளியாகி இருக்கின்றன. இத்தகைய காரணங்களாலேயே இந்தியாவா 75 ஆண்டுகள் வலிமையோடு நின்று கொண்டு இருக்கிறது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையாக இருக்க வேண்டுமானால் இதே கருத்தியல்களை மேலும் மேலும் வலிமைப்படுத்த வேண்டும்.

* Federalism (கூட்டாட்சி)
* State Autonomy (மாநிலத் தன்னாட்சி)
* Secularism (மதச்சார்பின்மை)
* Equality (சமத்துவம்)
* Fraternity (சகோதரத்துவம்)
* Socialism (சமதர்மம்)
* Social Justice (சமூகநீதி)
இவற்றை நாம் வலிமைப்படுத்த வேண்டும். இவை அனைத்தையும் காப்பாற்றுவதுதான் இந்தியாவைக் காப்பாற்றுவதாகும். 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவது என்பது வெறும் கொண்டாட்டமாக இருக்கக் கூடாது. இன்னும் பல நூறு ஆண்டுகளுக்கு இந்தியா வலிமையோடு இருப்பதற்கான திட்டமிடுதலாக நமது சிந்தனைகள் அமைய வேண்டும்.

இந்தியா என்பதை வெறும் நிலப்பரப்பின் எல்லைகளாக நாம் கருதக் கூடாது. இந்தியா என்பது இங்கு வாழும் மக்கள்தான். இந்தியா என்பது ஒற்றை அரசு அல்ல! பல்வேறு மாநில அரசுகளின் ஒன்றியமே இந்திய அரசு. ஒன்றியம் - யூனியன் என்பது தவறான சொல் அல்ல. அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவை வரையறுக்கப் பயன்படுத்தும் சொல் யூனியன்தான்.

இந்தியாவை காப்பாற்ற வேண்டுமானால், இந்திய ஒன்றியத்துக்குள் உள்ளடங்கியுள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பாற்ற வேண்டும். மாநிலங்கள் காப்பாற்றப்பட்டால்தான் இந்தியா காப்பாற்றப்படும். தமிழ்நாட்டின் மாபெரும் அடையாளமான பேரறிஞர் அண்ணா கூறியது போல, ஒன்று போல ஆக்குவது என்பது ஒற்றுமையில் இருந்து வேறுபட்டது. ஒற்றைத்தன்மையை திணிப்பதன் மூலம் ஒற்றுமையைக் கொண்டுவர முடியாது.

அன்புக்குரிய மலையாளிகளே, பிரபல மலையாள எழுத்தாளர் சிஹாபுத்தின் பொய்த்தும்கடவு ‘Truecopy Think’ தளத்தில் எழுதிய ஒரு கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பை நான் அண்மையில் வாசித்தேன். அது திமுகவின் நாளேடான முரசொலியில் வெளியிடப்பட்டிருந்தது. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு கூட தமிழில் இணையான சொற்கள் உண்டு. ஆனால், மலையளத்தில் பல வட்டார வழக்குகளிலும் உள்ள அழகிய சொற்கள் அழிந்து வருகின்ற என வேதனையோடு அவர் அக்கட்டுரையில் எழுதியிருந்தார்.

மலையாளத்துக்கும் தமிழுக்கும் இடையேயான ஆழமான உறவை குறித்தும் அவர் குறிப்பிடுகிறார். பிறமொழிச் சொற்களின் ஆக்கிரமிப்பைத் தமிழ் எவ்வாறு தடுத்து நிறுத்தியது என்றும் அவர் அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். மலையாளிகள் எல்லாரும் அக்கட்டுரையைப் படிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இந்தியாவில் ஒற்றை மொழி தேசிய மொழி ஆக முடியாது. ஏனென்றால் இந்தியாவில் எத்தனையோ மொழிகள் இருக்கின்றன. இந்தியாவுக்கு ஒற்றை மதம், அனைவர்க்குமான மதமாக இருக்க முடியாது. ஏனென்றால், இந்தியாவில் பல்வேறு மத வழிபாட்டு முறைகள் இருக்கின்றன.

இந்தியாவில் ஒற்றைப் பண்பாடு இல்லை. உணவு, உடை அனைத்திலும் ஆயிரம் வேறுபாடுகள். இவ்வளவு வேற்றுமைகளை வைத்துக் கொண்டும் ஒன்றாக வாழ - நமக்குள் இருப்பது அன்பும் மனிதநேயமும் மட்டும்தான். ஒற்றை மொழியை - ஒற்றை மதத்தை - ஒற்றைப் பண்பாட்டைத் திணிக்க நினைப்பவர்கள் இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்க நினைக்கிறார்கள். இந்திய ஒற்றுமையைச் சிதைக்க நினைப்பவர்கள் இந்தியாவின் எதிரிகள், இந்திய மக்களின் எதிரிகள். இந்தத் தீய சக்திகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கக் கூடாது.

வலுவான மாநிலங்கள்தான் கூட்டாட்சியின் அடிப்படை. வலிமையான, அதிகாரம் பொருந்திய, தன்னிறைவு பெற்றவையாக மாநிலங்கள் இருப்பது இந்தியாவுக்கு வலிமைதானே தவிர, அது பலவீனமல்ல! வலிமையான, வசதியான, தொழில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களால் இந்தியாவுக்குப் பயன்தானே தவிர, குறைவு ஏற்படாது!

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு 9.22 விழுக்காடாக இருப்பதால் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும்தானே நன்மை கிடைக்கிறது? ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 விழுக்காடு. தமிழ்நாட்டின் பங்கு என்பது இந்தியாவுக்குத்தானே நன்மை?

மாநில அரசுகள் மிகச்சிறப்பாக மாநிலங்களை வழிநடத்துவதால் ஒன்றிய அரசு பலம் அடையுமே தவிர, பலவீனம் அடையாது! இன்னும் சொன்னால், மக்களோடு நேரடியாக தொடர்பில் இருப்பவை மாநில அரசுகள்தான்! மக்களின் அனைத்து அன்றாடத் தேவைகளையும் பார்த்துப் பார்த்து நிறைவேற்ற வேண்டிய கடமை மாநில அரசுக்குத்தான் இருக்கிறது. எனவே, மாநில அரசுகளைத் தன்னிறைவு பெற்ற அரசுகளாக வைத்திருந்தால்தான் இந்தியா மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு மாநிலங்கள் தன்னாட்சி உரிமை கொண்டவையாக இருக்க வேண்டும்.

இந்திய அரசானது கூட்டாட்சிக் கோட்பாட்டை மதித்துச் செயல்பட வேண்டும். ஆனால், அதற்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஒற்றைத் தன்மை கொண்டதாக இந்தியாவை மாற்றும் முயற்சியை நாம் ஏற்க முடியாது. அதனை வலிமையாக, உறுதியாக, ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். பல்வேறு சிந்தனைகள் மோதும் களமாக இருக்க வேண்டிய நாடாளுமன்றங்களில் பேசுவதற்கான உரிமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மறுக்கப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுப்பினர்கள் உள்பட 27 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்கள்.

கருத்தைச் சொல்வதற்கான களமான நாடாளுமன்றத்தில்கூட பேச உரிமை இல்லை. இதுதான் இந்திய மக்களாட்சியின் இன்றைய நிலை! சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மாநிலங்களின் நிதி உரிமை பறிக்கப்பட்டு விட்டது. இழப்பீடாக தரப்படும் நிதி உரிய நேரத்தில் தரப்படுவது இல்லை. முழுமையாகவும் தருவது இல்லை. நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளால் எளியோருக்குக் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கை என்பது கல்வியைப் பல்வேறு படிநிலைகளில் தடுப்பு போட்டு மறிக்கும் கொள்கையாக உள்ளது.

ஒன்றிய அரசின் பல்வேறு சட்டங்கள், மக்கள் விரோதச் சட்டங்களாக இருக்கின்றன. ஆளுநர்களின் மூலமாக இரட்டை ஆட்சி நடத்தப் பார்க்கிறது பாஜக தலைமை. இவை அனைத்துக்கும் இடையில்தான் மாநிலங்களில் ஆட்சி நடத்தியாக வேண்டும்.
அரசியல் நடத்தியாக வேண்டும். மக்கள் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவு செய்தாக வேண்டும். அதற்காக நான் நம்பிக்கை இழக்கவில்லை. இந்தியாவின் மிக நீண்ட வரலாறும், இந்திய மக்களின் சகோதர உணர்வும், இந்தியாவை நிச்சயம் காக்கும் என்று நான் நம்புகிறேன்.

மலையாள மனோரமா போன்ற இதழ்களுக்கு - தங்களது ஊடகப் பணியைத் தாண்டி இந்தியாவைக் காக்கும் பணி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். 75 ஆண்டுகள் இந்தியாவைக் காத்த அரசியல் நெறிகளைக் காக்க ஜனநாயக சக்திகளோடு இணைந்து ஊடகங்களும் கருத்துப் பிரச்சாரத்தை தொடர வேண்டும்.

75 ஆண்டுகளுக்கு முன்னால் மாநில முதலமைச்சர்களுக்கு அன்றைய பிரதமர் நேரு கடிதம் எழுதியபோது, “மிக நீண்டகால நன்மையாக இருந்தாலும், குறுகிய கால நன்மையாக இருந்தாலும் இந்தியாவுக்கு ஜனநாயகமே பொருத்தமானது! இந்தியாவுக்கு மட்டுமல்ல எந்த நாட்டுக்கும் ஜனநாயகமே பொருத்தமானது" என்று சொன்னார். அத்தகைய ஜனநாயக விழுமியங்கள் கொண்ட நமது இந்தியாவை எந்நாளும் பாதுகாக்க நம்மை அர்ப்பணிப்போம்" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு: முதலமைச்சர் அறிவிப்பு

Last Updated : Jul 30, 2022, 4:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.