ETV Bharat / city

ராம்குமார் உடலில் இருந்தது மின்காயங்களே.. உடற்கூராய்வை கண்காணித்த மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்

author img

By

Published : Oct 29, 2021, 11:45 AM IST

ஸ்வாதி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ராம்குமார் உயிரிழந்த வழக்கில், அவரது உடலில் இருந்தது மின்காயங்களே என உடற்கூராய்வு செய்த தலைமை மருத்துவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கொல்லப்பட்ட ராம்குமார்
கொல்லப்பட்ட ராம்குமார்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சாப்ட்வேர் என்ஜினியர் ஸ்வாதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் ராம்குமார் மின்சார கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையால் கூறப்பட்டது.

இந்நிலையில் ராம்குமாரின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்து கடந்த 5 ஆண்டுகளாக வழக்கு விசாரணையானது நடந்து வருகிறது.

மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

இந்த வழக்கு விசாரணைக்காக சிறைத்துறை ஓய்வுபெற்ற எஸ்பி அன்பழகன், ஓய்வுபெற்ற ஜெயிலர் ஜெயராமன், உதயகுமார், ஓய்வுபெற்ற தலைமை வார்டன் சங்கர்ராஜ், துணை ஜெயிலர் ராஜேந்திரன், துணை ஜெயிலர் உதயகுமார், வார்டன் ராம்ராஜ் ஆகியோர் கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்காக மனித உரிமைகள் ஆணையத்தில் ஆஜரானார்கள்.

ச்

ராம்குமார் உடல் திசுக்களில் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை என்று மாநில தேர்தல் ஆணையத்தில் ஹிஸ்டோபேதாலஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது ராம்குமார் மரணத்தில் சந்தேகத்தை வலுப்படுத்தி உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இன்று மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. ராம்குமார் உடல் உடற்கூராய்வு குழுவின் பொறுப்பாக இருந்த தலைமை மருத்துவர் செல்வக்குமார் மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

உடலில் மின்சாரம் தாக்கவில்லை

மூன்று மணிநேரம் அவரிடம் குறுக்கு விசாரணை நடந்தது. இந்த விசாரணை வழக்கின் முக்கியத்துவம் வாய்ந்தது. குறுக்கு விசாரணையின் போது மருத்துவர் செல்வகுமாரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. ஹிஸ்டோபேதாலஜி நிபுணர் குழு ராம்குமாரின் உடலில் உள்ள திசுக்களில் மின்சாரம் தாக்கவில்லை என்று தங்கள் அறிக்கையில் கூறுவதால் மட்டுமே மின்சாரம் தாக்கி இறக்கவில்லை எனத் தெரிவிக்க முடியாது.

சில சமயங்களில் மின்சாரத்தால் தாக்கி இறப்பவர்கள் உடலில் உள்ள திசுக்கள் பாதிப்படையாமல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ராம்குமாரின் உடலில் காணப்பட்ட மின்சார தீக்காயங்கள் மற்றும் தடய அறிவியல் துறை மின் வேதியியல் அறிக்கை அடிப்படையிலேயே மின்சாரம் தாக்கி இருப்பதாக உடற்கூராய்வு அறிக்கையில் தான் தெரிவித்துள்ளேன்.

ச்

ராம்குமாரின் உடலில் 12 காயங்கள் இருக்கிறது. மின்வயர் உடலில் படுவதால் அந்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. 9ஆவது காயம் மட்டும் 18 செ.மீ. நீள அளவில் உள்ளது. அது ஒரு நபரால் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட காயம் எனக் கூறமுடியாது. அதே நேரத்தில் அது மின்காயம் இல்லை எனத் தெரிவிக்க முடியாது என்று ராம்குமார் உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர் செல்வக்குமார் ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மின்சார காயம் தான்... ஆனா?

மின் ஒயரில் 240 வோல்ட் மின்சாரம் தான் வரும். எனவே அது தாக்கி இறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்வது சரியல்ல. இறந்து போன ராம்குமாரின் உடலில் 3600 வோல்ட் மின்சாரம் பாய்ந்தது. அது குறித்து நான் சொல்ல இயலாது. மின்சாரம் பாய்ந்தவர் உடல் கருகியிருக்கும் என்றால் சரியல்ல மின்சார காயம் ஏற்படும் போது அந்த காயத்தைச் சுற்றி சிவந்து காணப்படும்.

அதற்கு மின்சாரக் குழி ஆகும். அதைச் சுற்றி பிஸ்கட் கலர் ஏற்பட்டு சிறிது நேரத்தில் கரி ஏற்படும். இது குறித்து உடற்கூராய்வு அறிக்கையில் சொல்லவில்லை. ஆனால் அனைத்து காயமும் மின்சார காயம் தான் எனச் சொல்லி உள்ளேன்.

இறந்த பிறகு ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் தொடங்கி 12 மணி நேரம் வரை உடல் முழுக்க மரண விறைப்பு ஏற்படும். அடுத்த 12 மணி நேரங்கள் அது உடல் முழுக்க அவ்வாறே இருக்கும். என்னுடைய உடற்கூராய்வு அறிக்கையில் மரண விறைப்பு உடல் முழுவதும் காணப்பட்டது எனச் சொல்லியுள்ளேன். இதற்கு 12 மணி நேரம் ஆகும்.

தொடரும் சந்தேகம்

ஆனால், இறந்தவர் உடல் 10 நாள்களுக்குப் பின்பு தான் உடற்கூராய்வு செய்யப்பட்டது. குளிர்சாதனப் பெட்டியில் இறந்த நபரின் உடலை வைத்து பாதுகாக்கப்பட்டால் எந்த வித மாற்றமும் உடலில் ஏற்படாது. இரு வாரங்கள் வரை எந்த மாற்றமும் ஏற்படாது. அதுவும் அந்த அறையின் தட்ப வெப்பத்தைப் பொறுத்ததாகும்.

s

உடற்கூராய்வு ஆரம்பிக்கும் முன்னர் உடல் நல்ல நிலையில் தான் இருந்தது என்றும் குறுக்கு விசாரணையில் மருத்துவ செல்வக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார். இதைப்போல மருத்துவர் செல்வக்குமார் விரிவாக பல்வேறு கேள்விகளுக்கு ஆணையத்தில் பதிலாக அளித்துள்ளார்.

இன்று ஆணையத்தில் நடந்த குறுக்கு விசாரணை மறுதேதி குறிப்பிடாமல் மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒத்திவைத்தது. அடுத்த விசாரணையின் போது உடற்கூராய்வு மேற்கொண்ட மற்றொரு மருத்துவரான பாலசுப்பிரமணியத்திடமும், சிறைத்துறை மருத்துவர் நவீன் என்பவரிடமும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ராம்குமார் மரண வழக்கு: உடற்கூராய்வு செய்த மருத்துவர் மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.