ETV Bharat / city

சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் மின்வாரியம் - சும்மா விடமாட்டோம்: சுந்தர்ராஜன் பளீர்

author img

By

Published : Jul 23, 2021, 10:12 PM IST

குறைவான செலவினத்தில் (ரூ.3 முதல் ரூ.4 வரை) மின் உற்பத்தி செய்யும் திட்டங்கள் நடைமுறையில் இருக்கும்பட்சத்தில், அதிக செலவினத்தில் மின் உற்பத்தி செய்ய (ரூ.6 முதல் ரூ.7வரை) எண்ணூரில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் சட்டத்துக்கு புறம்பாக, மீனவ மக்களுக்கு விரோதமாகக் கட்டப்பட்டு வரும் புதிய அனல் மின் நிலையத்தை தடை செய்யும் வரை ஓயமாட்டோம் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் ஜி. சுந்தர்ராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

illegal projects of TNEB, ennore thermal plant issue, எண்ணூர் துறைமுகம், எண்ணூர் அனல் மின் நிலையம், தமிழ்நாடு மின்சார வாரியம், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு  ஜி சுந்தர்ராஜன், முக்கிய செய்திகள், poovulagu news, ennore fishermen issue, சென்னை செய்திகள், எண்ணூர் செய்திகள், ennore news tamil
எண்ணூர் அனல் மின் நிலையம்

சென்னை: எண்ணூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் புதிய அனல் மின் நிலைய கட்டுமானத்தில் உள்ள சட்ட விரோத செயல்களையும், மக்கள் விரோத செயல்களையும் கண்டறிந்து, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, நீரியல் நிபுணர்கள் கூட்டாக சேர்ந்து சட்ட விரோத அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.

அப்போது கூட்டாக சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், 'எண்ணூரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனல்மின் நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், அங்குள்ள ஆறுகளில் கலக்கப்படுவதால், அதிலுள்ள மீன்கள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

மீனவர்களின் வாழ்வாதாரம் இழந்து பெருமளவில் பொருளாதார ரீதியில் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

மேலும் இந்த அனல் மின் நிலையத்தால் ஆறுகள், குளம், சதுப்பு நிலங்களில் பெருமளவில் ஆக்கிரமிப்பு நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக தாங்கள் தயாரித்துள்ள அறிக்கைகளை அரசிடம் கொடுக்கவுள்ளோம்' என அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் ஜி. சுந்தர்ராஜன், 'தமிழ்நாடு மின்சார வாரியம் சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்டு வருகிறது.

முறையான நடைமுறைகளையும், விதிகளையும் பின்பற்றாமல் கட்டப்பட்டு வரும் அனல்மின் நிலைய திட்டப்பணிகளை ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

மக்களை காவு வாங்கவே இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. சூரிய ஒளி தகடுகள் மூலம் மின் உற்பத்தி செய்ய ரூ.3 முதல் ரூ.4 வரை செலவாகிறது. ஆனால், அனல் மின் நிலையத்தின் மூலம் மின் உற்பத்தி செய்ய ரூ.6 முதல் ரூ.7 வரை செலவு செய்யவேண்டியிருக்கும். இதற்கு அதிகாரப்பூர்வமாகவும், அறிவியல் ரீதியிலும் ஆதாரங்கள் நடைமுறையில் உள்ளன.

சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் மின் வாரியம் - சும்மா விடமாட்டோம்: சுந்தர்ராஜன் பளீர்

இருப்பினும் அனல் மின் நிலையங்கள் மூலம் அதிக விலையில் மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் முனைப்புக் காட்டி வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கெனவே பெரும் இழப்பை சந்தித்துவரும் தமிழ்நாடு மின்சார வாரியம், இதுபோன்ற திட்டங்கள் மூலம் மென்மேலும் இழப்பை வெளிக்காட்டி, மின் துறையை தனியார் வசம் ஒப்படைக்கத் திட்டம் வகுக்கிறது. இதை நாங்கள் எந்த காலத்திலும் செயல்பட விடமாட்டோம்' என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.

தொடர்ந்து பேசிய சமூக ஆர்வலரும் கர்நாடக இசைப்பாடகருமான டி.எம். கிருஷ்ணன், "தற்போது திமுக அரசு ஆட்சி அமைத்துள்ளது.

திமுக அரசு வந்த பின்னர் இது போன்ற விவகாரங்களில் நிறைய முடிவுகள் எடுத்துள்ளனர். இதற்கும் நல்ல முடிவு எடுக்க வேண்டும்" எனவும் கோரிக்கை வைத்தார்.

குறிப்பாக அங்குள்ள மீனவர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் சுற்றியுள்ள ஆறுகளையும் சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

இதையும் படிங்க: எண்ட் கார்டு இல்லாமல் தொடரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.