ETV Bharat / city

மாணவர் சேர்க்கையின் பிறப்புச் சான்றிதழின்படி பெயர் பதிவு - பள்ளிக் கல்வித் துறை

author img

By

Published : Feb 1, 2022, 5:07 PM IST

பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையின்போதே பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் பெயர் பதிவுசெய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை
பள்ளிக்கல்வித் துறை

சென்னை: பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கையின்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி ஆணையம் சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இது தொடர்பாகக் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை

பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மாணவரது பெயர், தாய், தந்தையர் பெயர் (தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும்), பிறந்த தேதி ஆகியவற்றை மாணவர் சேர்க்கைப் பதிவேட்டில் கட்டாயம் பதிவுசெய்தல் வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் கோரி அதிக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு வழங்குவதற்கு ஏதுவாக பள்ளிகளில் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

1அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மாணவரது பெயர், தாய், தந்தையார் பெயர் (தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும்), பிறந்த தேதி ஆகியவற்றை மாணவர் சேர்க்கைப் பதிவேட்டில் கட்டாயம் பதிவுசெய்தல் வேண்டும்.


ஒரே மாதிரியான முறை

2020-2021ஆம் கல்வி ஆண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழ்களில் மாணவரது பெயர், தாய், தந்தை பெயர் ஆகியவற்றை தமிழ், ஆங்கிலத்தில் பதிவுசெய்து வழங்குவதற்கு ஒரே மாதிரி படிவத்தினை (Uniform format) பயன்படுத்துதல் வேண்டும்.

பத்தாம் வகுப்பு, மேல்நிலை பொதுத்தேர்வுகளுக்கான பள்ளி மாணவர்கள் பெயர் பட்டியலின் அடிப்படையிலேயே மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிட்டு வழங்கப்படுகின்றன.

சரியாகப் பதிவேற்ற வேண்டும்

பெயர்ப் பட்டியல் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுவதால், பள்ளித் தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களது பெயர், தாய், தந்தை / பாதுகாவலரது பெயர் (தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும்), பிறந்த தேதி ஆகியவற்றை EMISஇல் பதிவேற்றம் செய்யும்பொழுது எவ்வித தவறும் இல்லாமல் சரியாகப் பதிவுசெய்திருப்பதை உறுதிசெய்தல் வேண்டும்.

மேலும், பள்ளி சேர்க்கை விண்ணப்பம், சேர்க்கை நீக்கல் பதிவேடு, பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் தாய், தந்தை, பாதுகாவலர் பெயர் (தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும்), தாய்மொழி ஆகிய இனங்கள் புதிதாக EMISஇல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் சேர்க்கை விண்ணப்பம், மாணவர் சேர்க்கைப் பதிவேடு, பள்ளி மாற்றுச் சான்றிதழில் மாணவரது பெயர், தாய், தந்தை, பாதுகாவலர் பெயர் (தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும்), பிறந்த தேதி ஆகிய விவரங்களைத் தவறின்றி தெளிவாகப் பதிவுசெய்ய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பேட்டரி வாகனங்களுக்கு முன்னுரிமை: 2022 பட்ஜெட்டில் புதிய கொள்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.