ETV Bharat / city

'தமிழ் இனத்தை சாதி, மதத்தால் பிரிப்பதைத் தமிழர்கள் அனுமதிக்கக்கூடாது' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்தார் விழாவில் பேச்சு

author img

By

Published : Apr 24, 2022, 11:00 PM IST

'தமிழ் இனத்தை சாதி - மதத்தால் பிரிக்க சிலர் பார்க்கிறார்கள்; அதைத் தமிழ் இனம் அனுமதிக்கக் கூடாது. மேலும், "நாம் அனைவரும் தமிழர்" என்ற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும்' என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

சென்னை: திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு சார்பாக ரமலான் நோன்பு திறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மா.சுப்ரமணியன், ராஜகண்ணப்பன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர், திமுக தலைமை நிலையச்செயலாளர் பூச்சி முருகன் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர்.

இஸ்லாமியர்களுக்கு நிதியுதவி: நிகழ்ச்சியில் தொடக்கமாக இஸ்லாமிய சிறுமிகளின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பின், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த ஏழை குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிதியுதவி வழங்கினார். அதன்பின்னர் மேடையில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 'இஸ்லாமியர்கள் பசி, தாகம் ஆகியவற்றை மறந்து நோன்பு இருக்கிறார்கள். இதனை தங்கள் கடமையாக நினைத்து செய்து கொண்டிருக்கிறார்கள்.

கருணாநிதி செய்த தொண்டு: சிறுபான்மையினருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலான கலைஞர் அவர்களின் நட்பு என்பது காலங்காலமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இது தொடரத்தான் போகிறது. அதை யாராலும் கலைக்க முடியாது’ எனவும் தெரிவித்தார். மேலும், கலைஞரையும் அண்ணாவையும் இணைத்தது திருவாரூரில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சியான "மிலாடிநபி விழா" தான் என்றும்; 1990ஆம் ஆண்டு சிறுபான்மையினருக்கான நலத்துறை அமைத்தது கருணாநிதி தான் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

ரமலான் நோன்பு திறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின்
ரமலான் நோன்பு திறப்பு (இஃப்தார்) நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின்
குடியுரிமை திருத்தச் சட்டத்தினை எதிர்த்தது திமுக: தொடர்ந்து பேசிய அவர், 'இஸ்லாமிய சமுதாயத்தில் ஒருவரை அமைச்சராக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர், கலைஞர் கருணாநிதி தான். நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் அதிமுகவினர்கள் தான். அதனால் தான் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது கருணாநிதியின் மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்' எனவும் குறிப்பிட்டார்.
தமிழர்கள் என்ற உணர்வு முக்கியம்: மேலும் தொடர்ந்து பேசிய அவர், 'உங்களது கோரிக்கைகளைச் சொல்லாமலேயே செய்து முடிக்கக்கூடிய ஆட்சிதான் திமுக ஆட்சி என்றும்; நான் இதைக் கழக ஆட்சி என்று சொல்ல மாட்டேன்; இது நம்முடைய அரசு, இது நமது ஆட்சி தான் என்றும் தெரிவித்தார்.
மதம், சமய நம்பிக்கை அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். ஆனால் "நாம் அனைவரும் தமிழர்" என்ற ஒற்றுமை உணர்வோடு செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால் கிடைக்கும் நன்மை அதிகம்.
புனித ரமலானையொட்டி, வாழ்த்துத் தெரிவித்த மு.க.ஸ்டாலின்
புனித ரமலானையொட்டி, வாழ்த்துத் தெரிவித்த மு.க.ஸ்டாலின்
தமிழர்களைப் பிரிக்க முடியாது: தமிழ் இனத்தை சாதி - மதத்தால் பிரிக்க சிலர் பார்க்கிறார்கள். அப்படி செய்தால்தான் தமிழ் இனத்தை அழிக்க முடியும் என நினைக்கிறார்கள். நம்மைப் பிளவுபடுத்துவதன் மூலமாக நம்முடைய வளர்ச்சியைத் தடுக்கப் பார்க்கிறார்கள். அதற்கு, தமிழ் இனம் அனுமதிக்கக் கூடாது. அதற்குப் பின்னால் இருக்கும் சதியை உணர்ந்து தெளிந்து புரிந்து கொள்ள வேண்டும். நாட்டில் அமைதி நிலவ வேண்டும். அமைதியே வளர்ச்சியைத் தரும்' எனப் பேசினார்.

இதையும் படிங்க: ரமலான் பெருநாளை முன்னிட்டு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.