ETV Bharat / city

புதுச்சேரி சட்டப்பூர்வ பரிமாற்ற விழாவில் தியாகிகளை கௌரவித்த அமைச்சர்!

author img

By

Published : Aug 17, 2021, 6:23 AM IST

புதுச்சேரி மாநிலம் இந்தியாவோடு இணைந்த நாளை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழாவில், வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து தியாகிகளை கௌரவித்தார்.

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் முன்னர் பிரான்ஸ் நாட்டு ஆட்சியின் கீழ் இருந்தது. பின்னர் புதுச்சேரியை, இந்தியாவுடன் இணைப்பது தொடர்பாக புதுவை மாநில மக்கள் பிரதிநிதிகள் 178 பேரிடம் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இந்த வாக்கெடுப்பானது கடந்த 1954ஆம் ஆண்டு, அக்டோபர் 18ஆம் தேதி, வில்லியனூர் அருகே உள்ள கீழூரில் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக 170 பேரும், எதிராக 8 பேரும் வாக்களித்தனர்.

தியாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை
தியாகிகள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை

தேசியக் கொடி ஏற்றிய அமைச்சர்

அதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சட்ட நடைமுறைகளுக்கு பின்னர், கடந்த 1962ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 16ஆம் தேதி புதுவை மாநிலம் இந்தியாவுடன் இணைய ஒப்புதல் அளித்து, பிரான்ஸ் நாட்டு மக்களவையில் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

அதன்பிறகு புதுவை மாநிலம் இந்தியாவுடன் இணைந்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முறைப்படி ஏற்றுக்கொண்டது.

இந்த வரலாற்று நிகழ்வுக்கான வாக்கெடுப்பு நடந்த கீழூரில், கடந்த 1974ஆம் ஆண்டு புதுச்சேரி சுதந்திர போராட்டத்துக்கு வித்திட்ட தியாகிகளின் நினைவாக, தியாகிகள் நினைவு தூண், நினைவு மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டன.

புதுச்சேரி காவல்துறை அணிவகுப்புக் காட்சி
புதுச்சேரி காவல்துறை அணிவகுப்புக் காட்சி

ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி, இந்தியாவுடன் இணைந்த நாளை நினைவுகூரும் வகையில், கீழூரில் உள்ள நினைவிடத்தில் சட்டப்பூர்வ பரிமாற்ற நாள் விழா நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று (ஆக.16) நடைபெற்ற விழாவில் வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல் துறையினர் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பங்கேற்காத முதலமைச்சர், ஆளுநர்

தொடர்ந்து விழாவில் தியாகிகளின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் வழக்கமாக முதலமைச்சர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, காவல் துறை மரியாதையை ஏற்றுக்கொண்டு தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். ஆளுநரும் இந்நிகழ்வில் பங்கேற்பார்.

கருத்து வேறுபாடுகளால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பங்கேற்று வந்தனர். ஆனால், தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று, முதலமைச்சராக ரங்கசாமியும், ஆளுநராக தமிழிசையும் பதவி வகித்து வருகின்றனர். இருப்பினும் இருவரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கல்வி, வேலைவாய்ப்பில் தனி ஒதுக்கீடு வழங்க வேண்டும் - 'சிறந்த திருநங்கை' விருதாளர் கிரேஸ் பானு வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.