ETV Bharat / city

Sexual Harassment: பாலியல் வன்முறை... தனியார் பள்ளிகளுக்கு அமைச்சரின் அறிவுரை!

author img

By

Published : Nov 22, 2021, 1:43 PM IST

Updated : Nov 22, 2021, 7:14 PM IST

தனியார் பள்ளிகளில் பாலியல் தொல்லை (Sexual Harassment) ஏற்படும்போது அதனைப் பற்றி புகார் தெரிவித்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று யோசிக்காமல் பள்ளியின் நிர்வாகம் உடனடியாகப் புகாரளிக்க வேண்டுமென அறிவுறுத்திய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இதனால் பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படும் எனத் தெரிவித்தார்.

அமைச்சர்
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: அரசினர் மதரஸா-இ-அசாம் மேல்நிலைப் பள்ளியில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வகுப்பறை கட்டடத்திற்கான அடிக்கல் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஆகியோர் பங்கேற்று அடிக்கல் நாட்டுவதற்கான கல்வெட்டைத் திறந்துவைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சேப்பாக்கத்தில் உள்ள லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு மாண்டிசோரி முறையில் பாடம் கற்பிக்கும் நிகழ்வைப் பார்வையிட்ட அன்பில் மகேஷ் செய்தியாளரிடம் கூறியதாவது, ”சென்னையில் புதிதாக பள்ளி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தனியார் நிறுவனங்களின் பங்களிப்பால் இந்தப் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. தனியார் தொண்டு நிறுவனங்கள் பள்ளி கட்டடங்களைக் கட்டுவதற்கான நீதி வழங்குவதற்காகப் புதிய இணையதளம் விரைவில் முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்படவுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் உள்ள இரண்டு லட்சத்து 87 ஆயிரத்து 467 வகுப்பறைகளில் குழந்தைகளுக்குப் பாலியல் புகார்கள் குறித்த புகார் தெரிவிக்க இலவச அழைப்பு சைல்டுலைன் எண் (childline) 1098, பள்ளிக் கல்வித் துறையின் உதவி எண் 14417 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மட்டுமில்லாமல் மாணவர்களும் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு (Sexual Harassment) ஆளாகின்றனர். பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் முதலில் விசாரணை நடத்தப்பட்டு பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..

வரக்கூடிய கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் எல்லா புத்தகங்களிலும் குழந்தைகளுக்கான உதவி எண்கள் அளிக்கப்படும். தற்போது மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களில் இந்த இலவச அழைப்பு எண்கள் ரப்பர் ஸ்டாம்ப் மூலம் இடம்பெறச் செய்யப்படும், அரசுப்பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரை போக்சோ சட்டம் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் இது தொடர்பான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும், தங்களுடைய பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என எண்ணாமல் பள்ளி நிர்வாகமும் பெற்றோரும் மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் பொதுத் தேர்வு தள்ளிப்போக வாய்ப்பில்லை எனவும், மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மாணவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை எந்த பயிற்று மொழியில் படித்தார்கள் என்கிற விவரம் இடம்பெறும் என்றும், இல்லம் தேடி கல்வித் திட்டம் மாணவர்களின் கற்றல் குறைபாட்டை சரி செய்ய பொதுமானாதாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். அதற்கான தன்னார்வளர்களை தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளது எனவும் தகவல் தெரிவித்தார்.

பின்னர், மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ளும் விதத்தில் பாடத்திட்டத்தில் 35 விழுக்காடு முதல் 50 விழுக்காடு வரை குறைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறினார்.

இதையும் படிங்க:’போலி உத்தரவுக்கு பணம் கொடுத்தவர்கள் புகார் அளியுங்கள்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

Last Updated :Nov 22, 2021, 7:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.